பாரதி பக்தர் தஞ்சை வெ. கோபாலன்

தஞ்சாவூரில் கலை, இலக்கியம், வரலாறு தொடர்பான செய்திகளை தெரிந்துகொள்ள ஒரு எளிய வழியாக இருந்து வந்தார் தஞ்சை வெ.கோபாலன்.
தஞ்சை வெ. கோபாலன்
தஞ்சை வெ. கோபாலன்

தஞ்சாவூர் எல்.ஐ.சி. காலனி ஐந்தாவது குறுக்குத்தெருவில் ‘பாரதி இலக்கியப் பயிலகம்’ என்ற பெயர்ப் பலகை உள்ள வீட்டின் உள்ளே ஒரு முதியவர் கணினி முன் அமர்ந்திருக்க அவரைச் சுற்றி ஆய்வு மாணவர்களோ அல்லது பேராசிரியர்களோ அமர்ந்திருப்பார்கள். அந்த முதியவர் கணினியிலிருந்தும், தனது நினைவிலிருந்தும் அவர்களுக்கு தகவல்களை சொல்லிக்கொண்டிருப்பதை நாம் பார்த்திருக்கலாம்.

தஞ்சாவூரில் கலை, இலக்கியம், வரலாறு தொடர்பான செய்திகளை தெரிந்துகொள்ள ஒரு எளிய வழியாக இருந்து வந்தார் தஞ்சை வெ.கோபாலன். இவர் தூய கதர் ஆடையில் எப்போதும் இருந்ததால் கதர் கோபாலன் என அழைக்கப்பட்டார். இவர் 85-ஆவது வயதில் 2021, மே 6-ஆம் தேதி காலமானார்.

கோபாலன் ஆயுள் காப்பீட்டு கழகத்தில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். அவர் ஓய்வுபெற்ற பிறகு தனது ஓய்வுக் காலத்தை பாரதிக்காகவும், கலை, இலக்கியப் பணிகளுக்காகவும் செலவிட முடிவு செய்தார். அவர் மனைவி அகிலாண்டேஸ்வரி மறைந்துவிட, அவரது இரண்டு மகன்கள் வெளியூர்களிலும், மகள் வெளிநாட்டிலும் இருந்தார்கள். இந்த நிலையில் கோபாலன் தஞ்சாவூரிலேயே தங்கிவிட முடிவு செய்தார். முதுமையில் தனிமை கொடுமையானது. ஆனால், இவருக்கோ அது வாய்ப்பாக அமைந்தது. தானே சமையல் செய்து சாப்பிட்டுக் கொண்டு கலை, இலக்கியப் பணிகளை செய்யத் தொடங்கினார்.

முதலில் இவரது வீட்டிலேயே சிறுசிறு இலக்கியக் கூட்டங்களை நடத்தி வந்தார். குழந்தைகளிடம் பாரதியை அறிமுகப்படுத்தும் பணியில் ஈடுபடத் தொடங்கினார். பாஞ்சாலி சபதம் போன்ற பாரதி காவியங்களை நாடகங்களாக்கி அதனை குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுத்து நடிக்கச் செய்தார்.

பள்ளிக்கூடங்களில் இவரது நாடகங்கள் அரங்கேறின. அப்போது குழந்தைகள் பாரதியின் மீது ஆர்வம் கொள்வதைக் கண்டு, அவர்களுக்கு பாரதி பயிலரங்குகளை நடத்தத் தொடங்கினார். அவருடைய இந்த முயற்சிக்கு திருவையாறு பாரதி இயக்கம் ஆதரவு வழங்கி வந்தது. பிறகு பாரதி இயக்கத்தோடு இணைந்து பணியாற்றத் தொடங்கினார். அப்போது திருவையாறு பாரதி இயக்கம் இளைஞர்களுக்கு மொழி, கலை, இலக்கியங்களின் மீது ஆர்வத்தை ஏற்படுத்தும் நோக்கத்தோடு 'பாரதி இலக்கியப் பயிலகம்' என்ற அமைப்பினை தொடங்கியது. அதன் இயக்குநராக கோபாலன் 2002-இல் பொறுப்பேற்றார். அதன் பிறகு தனது வயது, உடல்நிலைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் பாரதியின் கருத்துக்களை எட்டுத் திக்கும் எடுத்து செல்ல தன்னால் என்னவெல்லாம் செய்ய முடியுமோ அத்தனையும் அவர் செய்தார்.

அவர் பாரதி இலக்கியப் பயிலகம் வழியாக குழந்தைகளுக்கும் இளைஞர்களுக்கும் பாரதி குறித்து பயிலரங்குகளையும் கருத்தரங்குகளையும் நடத்தினார். அதில் இளைஞர்களை பாரதி குறித்து பேசவும், படிக்கவும் ஊக்குவித்தார். இதனால் பல இளைஞர்கள், பேச்சாளர்களாகவும் எழுத்தாளர்களாகவும் உயர்ந்தார்கள். பலர் பாரதி ஆய்வாளர்களாக உருவானார்கள். பாரதியின் கருத்துக்களைப் பரப்ப ஒரு புது முயற்சியாக சேக்கிழாரடிப்பொடி தி.ந. இராமச்சந்திரன் ஆலோசனையின் படி பாரதி அஞ்சல் வழி பாடத்திட்டத்தினை தொடங்க முடிவு செய்தார்.

பாரதி இலக்கியப் பயிலகம் 2004-ஆம் ஆண்டு இத்திட்டத்தினை தொடங்கியது. இதன் ஆசிரியராக கோபாலன் பொறுப்பேற்றார். பாடங்களைத் தொகுப்பது, அதனை அச்சுக்கு அனுப்புவது, அதற்கான செலவினை ஏற்பது, விடைத்தாள்களைத் திருத்துவது, தொலைபேசி வழியாக கேட்கப்படும் சந்தேகங்களுக்கு விளக்கம் கொடுப்பது இவையெல்லாம் அவருக்கு சுக அனுபவங்களாகவே இருந்தன.

பாரதி இயக்கம் அவருக்கு பின்னால் இருந்தாலும்கூட அவர் தனி நபராகவே அதற்கான வேலைகளை செய்து வந்தார். இப்பாடத்திட்டத்தினை 2010-ஆம் ஆண்டு வரை தொடர்ந்து 6 ஆண்டுகள் நடத்தி வந்தார். நானூறுக்கும் அதிகமானோர் இதில் சேர்ந்து பாரதியைக் கற்றார்கள். இது பாரதியியல் வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஒரு நிகழ்வாகும். நின்றுபோன இப்பாடத்திட்டத்தினை தொடங்கச் சொல்லி பலரும் கேட்டு வந்தார்கள். அதனால் அவர் பாரதி நினைவு நூற்றாண்டினை ஒட்டி 2020-இல் மீண்டும் அதனைத் தொடங்கினார். உடல்நிலை மிகவும் பாதித்திருந்த நிலையிலும் விடாப்படியாக பாடங்களை தயார் செய்து அச்சுக்கு அனுப்பி திரும்ப விடைத்தாள்களை பெற்று திருத்தி கொடுத்துக் கொண்டிருந்தார். இணையவழி ஆதிக்கம் நிறைந்த இக்காலத்திலும் ஆயிரத்திற்கும் அதிகமானோர் அஞ்சல் வழியாக பாரதி பாடம் படித்துக் கொண்டிருந்தார்கள் என்றால் அதற்கு கோபாலனின் விடாமுயற்சியே காரணம்.

பாரதி குறித்து பாரதி பாடம், பாரதி போற்றிய பெரியோர்கள், பாரதியின் பகவத் கீதை என மூன்று நூல்களை எழுதியுள்ளார். பாஞ்சாலி சபதத்தினை நாடக வடிவில் எழுதி வைத்துள்ளார்.

பாரதியோடு மட்டும் கோபாலன் நின்றுவிடவில்லை. தஞ்சாவூர் மாவட்ட வரலாறுகளை தொகுக்க வேண்டும் என்ற  ஆவல் அவருக்கு அதிகம் இருந்ததால் அதுகுறித்த தகவல்களை தேடத் தொடங்கினார். அதன் பயனாக தஞ்சாவூர் மராட்டியர் வரலாறு, தஞ்சாவூர் நாயக்கர் வரலாறு என்னும் இரண்டு நூல்களை எழுதினார்.

அவைகளில் இதுவரை வெளிவராத பல தகவல்கள் உள்ளன. அதுபோன்றே அவரது திருவையாறு வரலாறு என்ற நூலும் தஞ்சை மாவட்டத்தின் வரலாறுகளை சொல்லக்கூடியவை.

ம.பொ.சி. மீது இவருக்கு மிகுந்த மரியாதை உண்டு. அவரோடு நெருங்கிப் பழகியவர். அவர் வழியாகவே தேசியத்தைப் பார்க்கத் தொடங்கினார். மா.பொ.சி. குறித்து சிலம்புச் செல்வரின் அறவழிப்போராட்டங்கள் என்ற நூலினை எழுதியுள்ளார். கோபாலனுக்கு தேசியத்தின் மீதும், விடுதலைப் போராட்ட தியாகிகள் மீதும் மிகுந்த ஈடுபாடு உண்டு. விடுதலைப் போராட்ட தியாகிகள் யாரைப் பற்றி கேட்டாலும் உடனே அவர்களின் முழு வரலாற்றையும் சொல்லிவிடுவார். உப்பு சத்தியாகிரகம், சுதந்திர கர்ஜனை, தண்ணீர் விட்டோ வளர்த்தோம்? ஆகிய நூல்கள் அவர் தேசிய பற்றுக்கு அடையாளம்.

இந்திய விடுதலைப் போராட்ட கால வரலாறுகளையும் அவர் தொகுத்து வந்தார். நூற்றுக்கணக்கான தியாகிகளின் வரலாறுகளை அவர் சேகரித்து வைத்துள்ளார். விடுதலைப் போராட்டத்தின்போது நடைபெற்ற திருவாடி கலவரம் (திருவையாறு கலவரம்), சீர்காழி சதி குறித்த தகவல்களை எல்லாம் தேடிச் சென்று சேகரித்து வைத்துள்ளார்.

இளைஞர்கள் விடுதலைப் போராட்ட வரலாறுகளை தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம் என அவர் கருதினார். அதனால் விடுதலைப் போராட்ட வரலாற்று செய்திகளையும், தியாகிகளின் வரலாறுகளையும் சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்தார்.

அவர் வரலாறுகளைத் தேடி பயணங்கள் செல்வதும் உண்டு. தனது பாரதி இலக்கியப் பயிலகம் வாயிலாக இரண்டு முக்கிய தொடர் பயணங்களுக்கு ஏற்பாடு செய்திருந்தார். ஒன்று பாரதி வாழ்க்கையோடு தொடர்புடைய இடங்களுக்கு சென்று வருவதற்காக 'அறிவோம் பாரதியை' என்ற பயணம். மற்றொன்று 'வரலாறு பேசும் பயணங்கள்' என்ற வரலாற்று ஆய்வுப்பயணம்.

தமிழ்நாட்டில் உள்ள வரலாற்று முக்கியத்துவம் மிகுந்த இடங்களுக்குச் சென்று அவ்விடங்களின் வரலாறுகளை அறிந்து வருவதே அப்பயணங்களின் நோக்கம். வரலாறு பேசும் பயணங்களின் வழிகாட்டியாக கோபாலன் இருந்தார். பயணம் செல்ல வேண்டிய இடங்களைத் தேர்வு செய்வதும், அங்கு செல்லும்போதும் உடன் வருபவர்களுக்கு அந்த இடத்தின் வரலாறுகளை விவரிப்பதிலும் அவரது முக்கியப் பங்காக இருந்தது. அந்த பயணத்தின்போது தமிழகத்தின் ஊடே சுமார் 14,000 கி.மீ தூரம் பயணம் செய்து 178 ஊர்களுக்கு தனது குழுவோடு சென்று வந்தார். அப்போது அவருக்கு வயது 80. அந்த பயண அனுபவங்களை தொகுத்து நூலாக எழுதி வந்தார். இந்திய விடுதலை வைர விழா ஆண்டில் அதனை வெளியிட அவர் திட்டமிட்டிருந்த அந்த நூல் வெளி வந்தால் அது தமிழக வரலாற்று களஞ்சியமாக இருக்கும்.

கலை, இலக்கியம், வரலாறு இம்மூன்றும் அவரது உயிர் மூச்சாக இருந்தது. பிற்காலத்தில் நாட்டியத்தின் மீது அவருக்கு ஈடுபாடு அதிகமானது. தருமை ஆதினம் தவத்திரு மாசிலாமணி தேசிக ஞான சம்பந்த சுவாமிகள் தருமை ஆதின கட்டளை தம்பிரானாக இருந்தபோது திருவையாறு ஐயாறப்பர் ஆலயத்திலும் மகாசிவராத்திரி தினத்தில் நாட்டியாஞ்சலி விழாவினை நடத்த வேண்டும் என்று விரும்பினார். அப்போது அவர் கோபாலனிடம் அந்த பொறுப்பினை வழங்கினார். அதனை ஏற்றுக்கொண்ட அவர் 2006-ஆம் ஆண்டு திருவையாறு ஐயாறப்பர் நாட்டியாஞ்சலி அறக்கட்டளை என்னும் அமைப்பினை உருவாக்கி தொடர்ந்து 15-ஆண்டுகளாக நாட்டியாஞ்சலி விழாவினை நடத்தி வந்தார்.

அந்த விழா மகாசிவராத்திரியையொட்டி மூன்று நாட்களுக்கு நடைபெறும். விழாவில் இவருடைய முயற்சியால் இந்தியா முழுவதுமிருந்து வரும் நூற்றுக்கணக்கான நாட்டியக் கலைஞர்கள் திருவையாறு ஐயாறப்பர் ஆலயத்தின் சுவாமி சன்னதி முன்பாக உள்ள திருவோலக்க மண்டபத்தில் நாட்டியம் ஆடி வருகின்றார்கள். உலகெங்கும் தமிழர்கள் வாழும் இடங்களில் எல்லாம் இவ்விழா பேசப்பட்டது. இதன் பிறகு தமிழகத்தின் பல இடங்களில் உள்ள நாட்டிய சபாக்களுக்கு இவர் ஆலோசகராக இருந்தார். தமிழ்நாட்டில் பரவலாக நாட்டியாஞ்சலி நடைபெற இவரே முக்கிய காரணம். இவர் தனது அனுபவங்களைக் கொண்டு தமிழக ஆலயங்களில் நாட்டியாஞ்சலி என்ற நூலினை எழுதினார். இந்நூல் “வரலாற்றுப் பெட்டகம், பாதுகாக்கப்பட வேண்டிய ஆவணம், எதிர்கால ஆய்வாளர்களுக்கு சிறந்த வழிகாட்டி” என்று தருமை ஆதினம் தவத்திரு மாசிலாமணி தேசிக ஞான சம்பந்த சுவாமிகள் இந்நூல் குறித்து குறிப்பிட்டுள்ளார்.

கோபாலனுக்கு இயல்பாகவே இசை ஞானம் உண்டு. அதனால் இசைக் கலைஞர்கள் இவரிடம் நெருங்கிப் பழகி வந்தார்கள்.இவரும் இசைக் கலைஞர்களை ஊக்குவிப்பதில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார்.

தஞ்சாவூர் தியாக பிரம்ம சபாவின் துணைத் தலைவராக இவர் பொறுப்பு ஏற்ற பிறகு மாதந்தோறும் நல்ல கலைஞர்களைக் கொண்டு கச்சேரிகளை நடத்தி வந்தார். கச்சேரி தொடங்கும் முன்பாக கலைஞர்களை அறிமுகப்படுத்தி இவர் பேசுவது ஒரு தனி அழகு.

தஞ்சை பெரிய கோயிலில் ‘சின்ன மேளம்’ என்னும் நாட்டிய நிகழ்வு நெடுங்காலமாக நடந்து வந்து இடையில் நின்று போனது. அதனை தஞ்சை நாட்டிய ஆசிரியர் ஹேரம்பநாதன் மீண்டும் நடத்த முயற்சி எடுத்தார். அதற்கு கோபாலன் ஆதரவு வழங்கினார். அந்நிகழ்ச்சி ஆண்டுதோறும் தொடர்ந்து நடைபெற உதவிகள் செய்து வந்தார்.

இவ்வளவு பணிகளுக்கு இடையிலும் இவரை இளைஞர்களுக்கு இணையாக சமூக வலைத்தளங்களிலும் காணலாம். அங்கு தனது கருத்துக்கு எதிரான கருத்து வரும் போது சண்டை போடவும் தயங்க மாட்டார். blogspot-களை உருவாக்கி கொண்டு அதில் கலை, இலக்கிய கட்டுரைகளையும் சான்றோர்களின் வரலாறுகளையும் அதில் அவர் எழுதி வந்தார். பாரதியின் படைப்புகளை முழுமையாகப் பதிவேற்றம் செய்துள்ளார். கம்ப ராமாயணம் முழுவதையும் கதை வடிவமாக அதில் எழுதி வைத்துள்ளார்.

அவருடைய 60 ஆவது வயதில் தொடங்கிய இப்பணிகள் 85-ஆவது வயது வரை நிற்காமல் தொடர்ந்து கொண்டேதான் இருந்தது. அவர் மறைவதற்கு சில நாட்களுக்கு முன்பு அவரிடம், அவருடைய எதிர்காலப் பணிகள் குறித்து கேட்டபோது, 'எந்த துறையில் ஆர்வம் இருக்கிறதோ அதில் பங்கேற்று பெயர் நிலைக்கும் படி ஏதேனும் செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தில் இறங்கிவிட்டேன்' என்று கூறினார். 85 வயது முதியவர் இப்படி கூறினார் என்று சொன்னால் நம்ப முடியுமா? அவரிடம் அளவற்ற தன்னம்பிக்கையும் மன உறுதியும் அவருடைய கடைசி நிமிடம் வரை இருந்தது.

பதினைந்து நூல்களை எழுதியுள்ளார். நூற்றுக்கும் அதிகமான கட்டுரைகள் பத்திரிக்கைகளிலும், சிறப்பு மலர்களிலும் வெளிவந்துள்ளன. இவைகள் நிச்சயமாக அவர் பெயரினை சுமந்து காலத்தைக் கடந்து நிற்கும்.

[மே 6 - தஞ்சை வெ. கோபாலனின் முதலாமாண்டு நினைவு நாள்]

[கட்டுரையாளர் -  வழக்கறிஞர், பாரதி வழிப்பயண நூலாசிரியர், திருவையாறு]

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com