Enable Javscript for better performance
அறியாத பாரதி!- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

  அறியாத பாரதி!

  By இராஜ முத்திருளாண்டி  |   Published On : 11th September 2022 06:00 AM  |   Last Updated : 11th September 2022 08:36 AM  |  அ+அ அ-  |  

  bharathiyar

   

  தமிழகத்தின் தென்பரப்பிலுள்ள ஒரு சிற்றூரான எட்டையபுரத்திலே பிறந்து, ஆக்க நெருப்பாய்க் கிளம்பி, ‘மகாகவி’, ‘தேசியக் கவி’, ’தமிழ் நவயுகத்தின் வெள்ளி முளைப்பு’, ‘தமிழிலக்கிய மறுமலர்ச்சியின் மூலபுருஷர்’, ’தமிழிலக்கியத் துறைகள் தோறும் புதுமைகள் வடித்த இலக்கியச் சிற்பி’ என எண்ணற்ற சிறப்புகளுக்கு உரியவனாக விகசித்து நிற்கும் பாரதி மறைந்து (1921) நூறாண்டுகள் கழிந்துவிட்டன.

  “பார் மீது நான் சாகாதிருப்பேன் “ (பாரதி- அறுபத்தாறு -6) எனப் பெருமலையன்ன அசையா நம்பிக்கையுடன் தன் வரலாறு பாடிய ஒரே கவிஞன் பாரதிதான் மறைவடைய ஒரு மாதத்திற்கு முன்புகூட (ஆகஸ்ட்1921) , ஈரோடு கருங்கல்பாளையத்தில் ‘மனிதனுக்கு மரணமில்லை’ என்றே இறுதியாகவும் உறுதிப் பிரகடனம் செய்துவிட்டு வந்தான்.

  ஆனால், மெல்ல வந்து 1921 செப்டம்பர் 10 நள்ளிரவு கடந்து - மரணம் அவனைக் கவர்ந்து சென்றுவிட்டது. இருப்பினும் “தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாவதில்லை” என்ற பாவேந்தரின் நம்பிக்கை முழக்கத்திற்கேற்ப, மறைந்து நூறாண்டுகள் கழிந்தும் புகழுருவாகத் தமிழ் கூறும் உலகெலாம் வளர்ந்து கொண்டே இருக்கும் விந்தையின் பெயர்தான் சி.சுப்பிரமணிய பாரதி. இன்றவன் நினைவு நாள்.

  அவன் வாழ்ந்த குறுகிய காலத்தில் (39ஆண்டுகள்) பாரதியைச் சரியாகவும், முழுமையாகவும் தமிழுலகில் யாரும் அறிந்து, புரிந்து, ஆதரித்துப் போற்றவில்லை என்பது  கசப்பான  உண்மை. அவன் வாழுங்காலத்தில் அவனைத் தக்கவாறு அறிந்து போற்றி ஆதரவளிக்கத் தவறி,“அலஷியம் செய்த தமிழுலகம் திடீரென்று அவர் புகழில் மோஹமுற்று” (நாவலர் சோமசுந்தர பாரதி,1954) தொடர்வது விந்தைதான். சரி, பாரதி மறைவிற்குப் பின்னாவது அவனை முழுதாக அறிந்து தெளிவாகப் புரிந்து கொண்டிருக்கிறோமா என்றால், ‘இல்லை’ என்பதே உண்மையான பதில். 

  பாரதியின் மறைவிற்குப் பின் அவனது கவிதா வாழ்வின் ‘காரியம் யாவிலும்’ உடன் நின்றுழன்ற பாரதியின் மனைவி செல்லம்மாள் வழங்கிய ‘ பாரதி சரித்திரம்’ எனும் மெல்லிய நூலுக்குச் சுத்தானந்த பாரதி எழுதியுள்ள முன்னுரையில், “அங்குமிங்கும் சில குறிப்புகளைக் கேட்டே நமக்கு அளவற்ற மகிழ்ச்சி ஏற்படுகிறது. அவர் வரலாற்றை எழுதுகிறவர் எழுதியளித்தால் தமிழ் மரபிற்கே பெரும் பயனாகும்” என்று உண்மை சொல்லியிருக்கிறார்.

  “பாரதியினுடைய ஜீவியத்தின் ஆதாரத்தைக் கொண்டு ஒரே நோக்கில் பூர்த்தியாக ஆராய்ச்சி செய்யப்பட்ட ஒரு மதிப்புரை இன்னும் வெளிவரவில்லை.” என்று குறைப்பட்டார் கு.ப.இராஜகோபாலன் (கண்ணன் என் கவி, 1937). அன்று சுத்தானந்த பாரதி, கு.ப.ரா உள்ளிட்டோர் சொல்லிச் சென்றதே இன்றும் நிலை. ஆம், இதுவரை நமக்குக் கிடைத்துள்ள பாரதியைப் பற்றிய வாழ்க்கை வரலாற்று நூல்கள், பாரதி விமர்சனம், பாரதி ஆய்வுகள், பாரதி படைப்புகளின் ஆய்வுத் தொகுப்புகள் எனப் பலவும் பூர்த்தியற்ற, “அங்கொன்றும் இங்கொன்றுமான” தகவல்களே தந்து நம்மை இன்றுவரை பாரதியை முழுமையாக அறியாத நிலையிலேயே நிறுத்தி வைத்திருக்கின்றன.

  பாரதியின் மறைவுக்குப்பின், செல்லம்மாள் பாரதியைத் தொடர்ந்து பாரதியின் இரு மகள்கள் தங்கம்மாள் (1947) , சகுந்தலா ஆகியோர் தம் தந்தையார் குறித்து ஆர்வமுடன் பதிப்பிக்கச் செய்த சிறு வெளியீடுகள் முழுமையற்றவையாகவும் “அங்குமிங்குமான சில குறிப்புகளைத் தருவதாக இருந்தனவேயொழிய, விவரமான  வரலாறு எனும் வகையில் உறுதியான ஆண்டுக் குறிப்புகளோ, ஆவண ஆதரவுகளோ இல்லாமல்தான் வந்தன. அவ்வெளியீடுகள் - ‘உடன் வாழ்ந்த குடும்ப உறுப்பினர்கள் தனிப்பட்ட தத்தமது நினைவுகளைக் கிளறி வடித்த, உணர்வு வெளிப்பாடு’ என்ற வகையில் - வரலாற்று வளமின்றி வற்றிக் கிடக்கின்றன.

  இதையும் படிக்க | பாரதி எதிா்பாா்த்த ‘புதியதோா் தமிழ்க் கிளா்ச்சி’

  மேலும், பாரதி வாழ்வின் சில முக்கிய நிகழ்வுகளைக் காட்டும்போது மூவரது விவரிப்புகளிலும் ஒருமை மாறுபடுவதும் காண முடிகிறது. பாரதியின் குடும்பத்து மூவரது படைப்புகளும் வெவ்வேறு கால இடைவெளிகளில், பெரும்பாலும் அவரவர்கள் சொல்ல வேறு வேறு நபர்களால் எழுதப்பட்டதாகவே அறிகிறோம்.

  பாரதியின் மிக இளம் வயதுமகள்கள் பாரதியைத் தந்தை என்பதைத் தாண்டி, அம்மகாகவியின் பிற பன்முகப் பரிணாமங்களை அவரவர் வயதில் முழுதுணர்ந்திருக்கும் வாய்ப்புகளும் குறைவே. இன்னும் சொல்வதானால், இளைய மகள் சகுந்தலாவின் ஏழு வயது வரை தலைமகள் தங்கம்மாள் (வயது 12), காசியில், செல்லம்மாள் பாரதியின் மூத்த சகோதரி வீட்டில் வளர்ந்து வந்தவர். செல்லம்மாளே சொல்கிறார்: “தன் தந்தையாருடன்”கூட வசிக்கும் பாக்கியம் பெருமை” தங்கம்மாளுக்குக் “கிடைத்தது இரண்டு வருஷம் மட்டும்தான்...என் தந்தைக்கும் அவளுக்கும் உள்ள நெருங்கிய தொடர்பு அத்துடன் அற்றுப் போயிற்று” என்று. (என் தந்தை, பக்87; 89)இக்காரணங்களாலும் குறைபாடுகள் விளைந்திருக்கலாம்.

  நெல்லை ஏ.வி.சுப்பிரமணிய ஐயர் (1933), பாரதி சரிதம் தந்த ஆக்கூர் அனந்தாச்சாரி (1936), ஆகியோர் சிறு சிறு ஒளிக்கீற்றுகளாய்ப் பாரதி வரலாறு குறித்த செய்திகளை வழங்க முற்பட்டனர். முதலில் விரிவாக எழுதப்பட்ட பாரதி வரலாறு எனப் பலராலும் மேற்கோள்களாக எடுத்தாண்டு வரும் பாரதி வாழ்க்கைச் சம்பவங்கள் பல தந்துள்ள வ.ரா., (மகாகவி பாரதியார்,1944) தனது நூலின் முதற்பதிப்பு முன்னுரையிலேயே, “ நான் இப்பொழுது எழுதியிருக்கும் கதை பாரதியார் சம்பந்தமாக முடிந்த கதையல்ல” என்ற ஒப்புதல் வாக்குமூலம் பதிவு செய்துள்ளார். வரலாற்று நூலுக்குத் தேவையான - நிகழ்வுகளின் ஆண்டு/நாள்/இடம், உடனிருந்தோர் விவரங்கள் அதிகம் அளிக்காத காரணத்தால், ‘வரலாறு’ எனக் குறிப்பிடத் துணியாமல்’  ‘கதை’ அதிலும் ‘முடிவுறாக்கதை’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

  மேலும் பாரதி மறைந்து 23 ஆண்டுகள் கழிந்து எழுதித் தந்துள்ள அந்த நூலில், “லட்சணமாகக் கொடுக்க முடியாத ஒன்றை அவலட்சணத்தோடு கூடிய உருவத்தில் கொடுக்க எனக்கு இஷ்டமில்லை. எனவே, அனேக சங்கதிகளை நான் சொல்லாமல் விட்டுவிடவேண்டியதாயிற்று”என வருத்தமும் வெளிப்படுத்தியுள்ளார். கூடுதலாக, “இன்னும் சில வருஷங்களுக்குள்ளேனும் பாரதியாரைப் பற்றி விரிவாக எழுத முடியும் என்ற நம்பிக்கையோடு இந்தப்புத்தகத்தைச் சுருக்கி விட்டேன் “ என்றும் கைவிரித்து விடுகிறார்.அவரும் பாரதியாரைப் பற்றி அதற்குப்பின் விரிவாக எழுதவில்லை. வேறு எவரும்கூட முழுமையாகப் பாரதியார்வரலாறு எழுத முன்வரவில்லை.

  உஸ்மானியப் பல்கலைக் கழகத் தமிழ்த்துறை தலைவராயிருந்த ப.மீ.சுந்தரம் (பாரதியார் வரலாறும் கவிதையும்,1954);  “பாரதியாரின் ஜீவியத்தில் ஒரு பகுதியை இவரெழுதத் தகுதியுடையார்’ எனப் பாரதியின் ‘மனைவியார் கருதியதற்கிணங்க ’பாரதியின் பள்ளித் தோழர் சோமசுந்தர பாரதியும், பாரதிக்கு நண்பரான சர்க்கரைச் செட்டியாரும் இணைந்து வழங்கிய (பாரதியார் சரித்திரம், 1955) ஆகிய படைப்புகளும் பாரதி வரலாற்றின் ஒரு சில பகுதிகளையே காட்ட முடிந்தது.

  இவ்வாறு, பாரதி வரலாறு எழுதப் புகுந்த ஆரம்ப காலத்து ஆர்வலர்கள் அனைவருமே எழுத மறந்த, எழுத விடுபட்ட வரலாற்றுத் தகவல்களைக் கண்ட தொ.மு.சி. ரகுநாதன்(பாரதி காலமும் கருத்தும், 1982), கொதித்து “பாரதி வரலாற்றாசிரியர்களும், பாரதி பற்றிய நூலாசிரியர்களும் ...காணத்தவறிவிட்ட அல்லது கண்ணை மூடிக்கொண்டுவிட்ட ,...சொல்லப்போனால் மறைக்கப்பட்ட, மறுக்கப்பட்ட, திரிக்கப்பட்ட, திரையிட்டு மூடப்பட்ட, பாரதியின் இலக்கிய மற்றும் அரசியல் வாழ்வின்” செய்திகள் பல இருப்பதாக அதிரடி காட்டினார். 

  இதையும் படிக்க | வீரமாமுனிவர் வரலாறு: வளர்ந்து நிலவும் குழப்பங்கள்!

  நாம் போற்றும் ஒரு மகாகவிஞனை, பன்முகப் படைப்பாளியைத், துறைதோறும் புதுமைகள் செய்த முன்னத்தி ஏராக நிற்கும் பாரதியை முழுமையாக நாமறிந்துகொள்ள முடியாத நிலையே அவனிறந்து நூறாண்டுகள் கடந்தும் தொடரும் இந்த அவலம், நமது அலட்சியம், மெத்தனம் ஆகியவற்றுக்கான வலுத்த சான்றாகும்.தொடரும் இத்தகைய அலட்சியம் மெத்தனம் ஆகியவற்றுக்கு மற்றொரு சான்றாகக் கடந்த 40 ஆண்டுகளாகச் சென்னைப் பல்கலைக் கழகம் தனக்களித்த கடமையை மறந்து நிற்பதைக் குறிப்பிட வேண்டியுள்ளது. 

  பாரதியின் நூற்றாண்டு விழா (1982) நடைபெறும்போது அன்றைய முதல்வர் எம்.ஜி.இராமச்சந்திரன் தலைமையில் அமைக்கப்பட்ட தமிழக அரசின் நூற்றாண்டு விழாக்குழு பாரதியின் முழுமையான ஆதாரங்களுடன் கூடிய வாழ்க்கை வரலாற்றை வெளியிடும் கடமை தமிழகப் பல்கலைக் கழகங்களின் தாய்ப் பல்கலைக்கழகமான சென்னைப் பல்கலைக்கழகத்தின் வசம் ஒப்படைக்கப்பட்டது.

  பாரதியின் படைப்புகளைச் சீர்படத் தொகுத்துச் செம்பதிப்பாக வெளிக்கொணரும் கடமை தமிழ்ப் பல்கலைக்கழகத்திற்கு அளிக்கப்பட்டது. அதற்கேற்ப அப்பணியின் ஒரு பகுதியாக பாரதி பாடல்கள் ஆய்வுப் பதிப்பு 1987இல் தமிழ்ப் பல்கலைக்கழகத்தால் வெளிக்கொணரப்பட்டுள்ளது.

  பாரதி நூற்றாண்டு விழாமலரைப் பதிப்பிக்கும் கடமையை ஏற்றுக் கொண்ட அண்ணாமலைப் பல்கலைக் கழகம் - விழாமலர் என்பதால் ஆய்வுக்குப் பெரிதும் பயன்படத்தக்க நுண்மாண் நுழைபுலங் காட்டும் வகைக் கட்டுரைகளில்லையாயினும் பல நிலையிலுள்ளோர் பாரதியைப் பார்த்த, பார்க்கும் பார்வைகளின் தொகுப்பாகக் கருதும் வகைக் கனம் கொண்டதாக,476 பக்கங்கள் கொண்ட- மகாகவி பாரதி நூற்றாண்டு விழாமலர் (1982)ஒன்றைக் வெளிக் கொண்டுவந்தது. ஆனால் சென்னைப் பல்கலைக் கழகத்திற்கு வழங்கப்பட்ட கடமை இன்றுவரை -ஆளின்றி மிதக்கும் படகுபோல- கரைசேராமலே மிதக்கிறது.

  பாரதி நினைவு நாற்றாண்டைச் (2021) சிறப்பான முன்னெடுப்புகளுடன் தொடங்கி மேற்கொண்டுவரும் தற்போதைய தமிழக அரசு இவ்விசயத்தை மீண்டும் தூசிதட்டிக் கையிலெடுத்துக் கொடுத்த கடமையை நிறைவேற்றச் சென்னைப் பல்கலைக் கழகத்தை முடுக்கி விட்டு அவசியப்படும் உதவிகளும் வழங்க வேண்டும்.

  பல்கலைக்கழகத்தால் அது இயலாதெனத் தெரியவந்தால், தமிழக வரலாறு எழுதப்படக் குழு அமைத்ததுபோல, பாரதி வரலாறு படைத்தளிக்கும் பணிக்கு – தக்கார், தகவுடையார், பாரதி ஆய்வில் தோய்ந்திருப்பார் தேர்ந்து - ஒரு அறிஞர் குழு அமைத்துக் காலவரையரை சுட்டி அப்பொறுப்பைச் செயல்படுத்த உரியன செய்யலாம்.  இம்முயற்சி பாரதி நினைவு நூற்றாண்டு தொடர்பாக அரசு இதுவரை எடுத்துள்ள முன்னெடுப்புகளை முழுஅர்த்தப்படுத்துவதாக இருக்கும்.‘

  தமிழிலக்கிய மறுமலர்ச்சியின் மூல மூர்த்தி’ (கு.ப.இரா,1937) பாரதியை- நாமின்னும் முழுமையாக அறியாத பாரதியை - அறிந்து போற்ற  உதவும். 

  (கட்டுரையாளர் - ஆங்கிலப் பேராசிரியர், அரசுக் கல்லூரிப் பணியிலும், பல்கலைக்கழக நிர்வாகப் பணியிலும் பணியாற்றியவர். இவர் தமிழிலும் ஆங்கிலத்திலும் பல நூல்கள் எழுதியுள்ளார். பாட்டிடையிட்ட பாரதியார் சிறுகதைகள் என்பது இவரது அண்மை நூல்.)

   

  (செப்டம்பர் 11 - பாரதி நினைவு நாள்)


  உங்கள் கருத்துகள்

  Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

  The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை
  kattana sevai
  flipboard facebook twitter whatsapp