நிலம், வீடுகளை ஆக்கிரமித்தல், அபகரித்தல், நிலத்தை விற்பனை செய்வதில் மோசடி செய்தல் ஆகியவை குறித்து விசாரிக்க, நிலஆக்கிரமிப்பு விசாரணைக்கான தனிப்பிரிவு எல்லா மாவட்டங்களிலும் தொடங்கப்பட்டுள்ளது. அரசின் நடவடிக்கை பாராட்டுக்குரியது என்றாலும், இந்த நடவடிக்கை முறையாக நடத்தப்படுமா என்பதில் ஐயம் ஏற்படுகிறது. இதுபோன்ற பிரச்னைகளில் கட்சிக்காரர்களும் காவல்துறையினரும் நேர்மையாக நடந்துகொள்வார்கள் என்கிற நம்பிக்கையை மக்கள் அறவே இழந்துவிட்டனர்.
கோவையில் முன்னாள் எம்எல்ஏ-வின் மகன், அரூரில் திமுக பிரமுகர், சேலத்தில் மாநகர மன்ற உறுப்பினர், மதுரையில் மேயர் என எல்லோர் மீதும் நடவடிக்கைகள் எடுக்கத் தொடங்கியதும், இப்போது சாதாரணமாக ரியல் எஸ்டேட் தொழில் செய்துகொண்டிருந்தவர்கள் மீதும் புகார்கள் கொடுக்கச் சொல்லி, நிலஅபகரிப்பில் ஈடுபடாதவர்களையும் கைது செய்யும் அத்துமீறல்கள் ஆங்காங்கே எழுப்பப்படுகின்றன. இதன் விளைவாக, ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டிருப்பவர்கள் அலறத் தொடங்க, அந்தக் கூச்சலுக்கு நடுவே குற்றவாளிகள் தப்பிக்க வழி செய்யும் தவறான அணுகுமுறைக்குக் காவலர்களை, நிலஅபகரிப்புக் குற்றவாளிகள் தள்ளியிருக்கிறார்கள் என்றே நினைக்கத் தோன்றுகிறது.
இந்த விவகாரத்தில் தமிழக அரசு சரியான அணுகுமுறையை மேற்கொள்ளாவிட்டால், நிலஅபகரிப்பு செய்தவர்கள் தப்பிவிடவும், சாதாரண ரியல் எஸ்டேட் தொழில் செய்வோர் அவதிப்படுவதுமான நிலை உருவாகும். எப்போதோ தெரிந்தே தங்களது நிலத்தையோ, வீட்டையோ விற்றவர்கள் சிலர் இப்போது அதன் மதிப்பு பல மடங்கு அதிகரித்திருப்பதை உணர்ந்து, தாங்கள் மோசடி செய்யப்பட்டுவிட்டதாக புகார் எழுப்ப முற்பட்டிருக்கிறார்கள். அதிலும் காவல்துறை அதிகாரிகளோ ஆளும் கட்சி பிரமுகர்களோ துணை இருந்துவிட்டால் இன்னொரு வகையான மோசடிக்கு இது வழிவகுக்கக்கூடும்.
தமிழ்நாட்டில் நிலஅபகரிப்பு என்பது நான்கு விதமாக நடைபெற்றுள்ளது. முதலாவதாக, அரசுப் பொறுப்பில் இருந்துகொண்டு அரசு நிலத்தை மிகக் குறைந்த விலையில் தனியாருக்கு விற்பனை செய்தது மற்றும் விற்பனைக்கு உடந்தையாக இருந்தது.
இரண்டாவதாக, அரசியல் பின்புலத்தைப் பயன்படுத்தி, மிரட்டி, பலருக்குச் சொந்தமான ஒரு மிகப்பரந்த இடத்தை, ஒரு குறிப்பிட்ட தொழில்நிறுவனத்துக்காகவோ அல்லது தனியார் நிறுவனக் குடியிருப்பு வளாகத்துக்காகவோ விற்கச் செய்தது அல்லது அந்த நிலத்தைத் தனித்தனியாக வாங்கிப் பின்னர் ஒட்டுமொத்தமாக விற்றது ஆகிய நிகழ்வுகள்.
மூன்றாவதாக, ஒரு குறிப்பிட்ட நிலத்தை விற்க முனைபவரிடம் பவர்ஆப் அட்டர்னி பத்திரம் வாங்கிக்கொண்டு, நிலம் அல்லது வீட்டின் விலையை மிக அதிகமாக உயர்த்தி விற்று, அதன் உரிமையாளருக்கு மிகக் குறைந்த தொகையைக் கொடுத்து ஏமாற்றிய நிகழ்வுகள்.
நான்காவதாக, ஒரு இடத்தில் குடியிருந்துகொண்டு வாடகை தராதது அல்லது மூன்றாவது நபருக்கு மாற்றிக் கொடுத்தது, எதிர்த்துக்கேட்டால் அடிஉதை போன்ற கட்டப்பஞ்சாயத்து ஆகிய குற்றங்கள்.
இதில் நான்காவது வகையான குற்றங்களில் மட்டுமே காவல்துறை நேரடியாக வழக்குப் பதிவு செய்து வருகிறது. மற்ற முதல் மூன்றுவகையான மோசடிகளிலும் அரசு அதிகாரிகளும், பாதிக்கப்பட்ட மக்களும் இதில் இசைவான புகார்கள் அளித்தால் மட்டுமே நடவடிக்கை எடுக்க முடியும் என்பதாகக் கூறி மெத்தனமாக இருந்துவிடுகிறது காவல்துறை.
மேலும், முதல் மூன்று வகையான மோசடிகளில், அவை மோசடி என்று தெரிந்தும் தெரியாமலும் நிலத்தை வாங்கிப் போட்ட ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் இன்று மாட்டிக் கொண்டு விழி பிதுங்குகின்றன. பெரும்பாலும் இந்த நிறுவனங்களில் பெரும்புள்ளிகள் பங்குதாரர்கள் என்பதால், இந்த முதல் மூன்று குற்றங்களில் வழக்குப் பதிவு செய்தால், பாதிக்கப்படுபவர் யார் என்பதை முதலில் அறிந்துகொண்டு அதன் பிறகு வழக்குத் தொடரும் நிலைமை ஏற்பட வழியிருக்கிறது.
இத்தகைய நிலைமை இத்தனிப்பிரிவுக்கு ஏற்படுமேயானால், பத்து ஆண்டுகளுக்கு முன்பு, அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு பல நூறு கோடி ரூபாயை மக்கள் இழந்து, அவதிப்பட்டபோது ஏற்படுத்தப்பட்ட பொருளாதாரக் குற்றப்பிரிவுக்கு என்ன கதி ஏற்பட்டதோ அதே கதி, நிலஅபகரிப்பு விசாரணை தனிப்பிரிவுக்கும் ஏற்படும் என்பது நிச்சயம். அதற்கு முன்னதாக அரசு விழித்துக்கொண்டுவிட வேண்டும்.
மாவட்டம்தோறும் இந்தத் தனிப்பிரிவு வருவாய்த்துறை, நீதித்துறை அதிகாரிகளைக் கொண்ட குழுவால் நடத்தப்படவும், கிடைக்கும் புகார்கள் பதிவு செய்யப்பட்டு, மனுதாரருக்கு ரசீதுகள் வழங்கப்பட்டு, ஒவ்வொரு மோசடியையும் இந்தத் தனிப்பிரிவு ஆய்வு செய்து, அதன் பின்னர் அவற்றை வழக்குப் பதிவுக்கான புகார் ஆவணமாக காவல்துறைக்கு அனுப்புகிற சூழ்நிலை உருவானால் மட்டுமே ஆளும் கட்சியினர், போலி குற்றச்சாட்டின் மூலம் பயனடைய நினைப்பவர்கள் மற்றும் காவல்துறையினரின் பாரபட்சமான அணுகுமுறை ஆகிய மூன்றுக்கும் கடிவாளமிடப்படும்.
அதேவேளையில், நிலமோசடிகளால் பாதிக்கப்பட்ட பலர் - தங்களை ஏமாற்றியவருக்கும் காவல்துறைக்கும் உள்ள நெருக்கத்தை உணர்ந்து, அச்சப்பட்டு, புகார் கொடுக்காமல் இருக்கிறார்கள். அவர்கள் இந்தத் தனிப்பிரிவுக்குத் தைரியமாகப் புகார்கள் தர முன்வருவார்கள்.
கடந்த ஆட்சியில் நிலமோசடிகள் பரவலாக நடந்தன என்பது உண்மை. பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்பதிலும் மாற்றுக்கருத்து கிடையாது. ஆனால், புதுவிதமான மோசடிகளுக்கும் பழிவாங்கல்களுக்கும் திசைதிருப்புதல்களுக்கும் வழிகோலும் நடவடிக்கைகள் இன்றைய ஆட்சிக்கு களங்கம் ஏற்படுத்திவிடக்கூடும்.
கவனமாகக் கையாளப்பட வேண்டிய பிரச்னை இது. குற்றவாளிகள் தப்பித்துவிடவும் கூடாது, நிரபராதிகள் பாதிக்கப்பட்டுவிடவும் கூடாது!