1993 மார்ச் 12-ல் 257 பேர் சாவு; 1998 ஜனவரி 23,24,27-ம் தேதிகளில் 4 பேர் சாவு: 2002 டிசம்பர் 2-ல் 2 பேர் சாவு; 2003 மார்ச் 13-ல் 11 பேர் சாவு: 2003 ஆகஸ்ட் 25-ல் 52 பேர் சாவு: 2006 ஜூலை 11-ல் 188 பேர் சாவு; 2008 நவம்பர் 26 அன்று 166 பேர் சாவு.
தொடர்ந்து இத்தனை தாக்குதல்கள் மும்பை மீது நடந்திருந்தும், மீண்டும் இப்போது 2011 ஜூலை 13-ம் தேதி மூன்று முக்கிய இடங்களில் குண்டுவெடித்து, 21 பேர் உயிரிழந்திருக்கிறார்கள் என்றால், மும்பை நகரில் தன் உடன் நடக்கும் மனிதரைச் சந்தேகித்தபடிதான் ஒருவர் நடந்து செல்ல முடியும் என்றால், இந்த அவலநிலைக்கு தீவிரவாதிகளைக் குற்றம் சொல்ல முடியாது. அவர்கள் குற்றவாளிகளே அல்ல. மகாராஷ்டிர அரசும் மும்பை மாநகரப் போலீஸýம்தான் குற்றவாளிகள்.
பல குண்டுவெடிப்புச் சம்பவங்களைச் சந்தித்த பிறகும் மும்பை மாநகரப் போலீஸýம் மகாராஷ்டிர உளவுத் துறையும் நிழல்உலக தாதாக்களைக் கண்டுகொள்ளாமல் ஒதுங்கியே நிற்பதன் விளைவுதான் இவை. இவர்களது தவறுகளால் பலிகடாவாக மாறுவது அப்பாவி மக்கள்!
அண்மையில் மும்பையின் மூத்த பத்திரிகையாளரும், குற்றப்புலனாய்வுச் செய்திகளை வழங்குவதில் முதன்மையானவர் என்று கருதப்படுபவருமான தேவின் கொலைச் சம்பவத்தின்போதே மும்பை போலீஸôர் எச்சரிக்கையாக இருந்திருக்க வேண்டும். தீவிரவாதிகளின் திட்டத்தை அவர் அறிந்திருக்கக்கூடும் என்கிற சந்தேகத்தின் அடிப்படையில் அந்தச் சம்பவத்தைப் பார்த்திருக்கலாம். அந்தக் கொலையைச் சோட்டா ராஜன் ஆள்கள் செய்தனர் என்று சிலரைக் கைது செய்ததே தவிர, இந்த ரௌடிகள்தான் தீவிரவாதிகளுக்கு ஆள்களை வழங்குகிறார்கள், இவர்கள்தான் மும்பையில் கூலிப்படையாகச் செயல்படுகிறார்கள் என்பதை ஏன் மும்பை போலீஸ் உணரவில்லை?
பாகிஸ்தானின் தீவிரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பா பணம் கொடுக்க, இந்திய முஜாஹிதீன் அமைப்பினர் இதில் நேரடியாக ஈடுபடாமல், நிழல்உலக தாதாக்களைக்கொண்டு, அவர்கள் உதவியுடன்தான் இந்தக் குண்டு வெடிப்புகளை நடத்தியிருக்கின்றனர் என்று இப்போது உள்துறை அமைச்சகம் கூறுகிறது.
கசாப் பிறந்தநாளில் இந்தக் குண்டுவெடிப்புகள் நிகழ்ந்துள்ளன என்று பி.பி.சி. செய்தி வெளியிடுகிறது. ஆனால், அவர் பிறந்தநாள் குறித்து எந்த எச்சரிக்கை உணர்வும் இல்லாமல் தூங்கிக்கொண்டிருந்தது மும்பை போலீஸ். எப்படி இருக்கிறது நமது காவல்துறையின் சுறுசுறுப்பும், புலனாய்வுத் துறையின் செயல் திறமையும்? ஜவேரி பஜாரில் குண்டுவெடிப்பு நடந்த இடத்துக்கு, அங்குள்ள காவல்நிலையத்திலிருந்து நடந்து வந்தாலும் 5 நிமிஷத்தில் வந்துவிட முடியும். ஆனால், சம்பவம் நடந்து 20 நிமிஷங்களுக்குப் பிறகுதான் காவல்துறையினர் வந்தார்கள். அதற்குள்ளாக ஆம்புலன்ஸ் வந்துவிட்டது. மக்கள் எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் சம்பவ இடத்துக்குள் நுழைந்து உதவிசெய்யத் தொடங்கியதால் வெடிகுண்டின் தன்மை குறித்து உடனடியாக அறிவதற்கான தடயங்கள் அழிந்துபோய்விட்டன என்கிற ஒன்றே போதும், ஒட்டுமொத்த மும்பை மாநகர காவல்துறையின் லட்சணத்தை அம்பலப்படுத்தவும், அவர்களைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தவும்!
மும்பையில் நிழல்உலக தாதாக்களிடம் நிலவிய உள்பகை மறைந்து, இப்போது அனைவரும் கூட்டாளிகளாக மாறிவிட்டார்கள் என்றும், மும்பை காவல்துறை மேலும் வலுவிழந்து வாளா இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இதற்குக் காரணம் மும்பையில் உள்ள அரசியல்வாதிகளும், ஆட்சி பீடத்தில் இருப்பவர்களும்தான். நிழல்உலக தாதாக்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்காமல், எல்லா நடவடிக்கைகளையும் நீர்த்துப்போகச் செய்து, சட்டம் தனது கடமையைச் செய்யவிடாமல் செய்ததால், மும்பை காவல்துறை தன்னம்பிக்கை இழந்துவிட்டது. நாங்கள் இயங்கி என்ன ஆகிவிடப்போகிறது என்கிற சலிப்பு அவர்களுக்கு ஏற்பட்டிருந்தால் வியப்படையத் தேவையில்லை.
மும்பை நகரம் தொடர்ந்து தாக்குதலுக்கு இலக்காகக் காரணம், அந்நகரின் மக்கள்தொகையும், எல்லா இடங்களிலும் நீக்கமற்ற நெரிசலும். இரண்டாவதாக, இந்தியாவின் மிக முக்கியமான பொருளாதார நகரங்களில் ஒன்றாக அது இருப்பது. பாகிஸ்தானிலிருந்து படகுகள் வழியாக தீவிரவாதிகள் மும்பைக்கு மிகச் சாதாரணமாக வந்து, திரும்பிச் செல்லவும் முடிகிறது. இதெல்லாம் போதாதா தீவிரவாதிகள் சுலபமாகத் தங்களது கைவரிசையைக் காட்ட?
இங்குள்ள நிழல்உலக தாதாக்கள் பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு இசைவாக இருக்கிறார்கள். அவர்களுக்குத் தேவையான பணமும், ஆயுதங்களும் வழங்கப்படும்போது அவர்கள் உற்சாகமாகக் களத்தில் இறங்குகிறார்கள். இதில் அச்சப்பட்டு ஒதுங்கி நிற்பது மகாராஷ்டிர அரசும், மாநிலக் காவல்துறையும்தான்.
தீவிரவாதத்தைத் தடுத்தல் எதிர்கொள்ளுதல் தொடர்பாக மும்பை அரசால் நியமிக்கப்பட்ட ராம் பிரதான் கமிட்டி தனது பரிந்துரைகளை வழங்கியுள்ளது. ""26/11 தாக்குதலின்போது மும்பை மாநகர காவல் ஆணையர் சரியாகச் செயல்படவில்லை என்றும், ஒரு தீவிரவாதத் தாக்குதல் நடைபெறும்போது காவல்துறை எவ்வாறு எதிர்வினை புரியவேண்டும் என்று பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளதோ அவற்றை நடைமுறைப்படுத்தாமல், தலைமைப்பண்பு இல்லாமல் செயல்பட்டுள்ளார்'' என்றும் இந்தக் கமிட்டி குறைகூறியுள்ளது. இந்தக் கமிட்டியின் பரிந்துரைகள் மீது என்ன நடவடிக்கை எடுத்தீர்கள் என்று பத்திரிகையாளர்கள் கேட்டால், பெயர் வெளியிட விரும்பாத போலீஸ் உயர் அதிகாரி சொல்கிறார்:
"அது தொடர்பாகச் செயல்திட்டம் வகுப்பது பற்றி விவாதிக்க மாநில டி.ஜி.பி. அஜித் பரஸ்னிஸ் இன்றைக்குத்தான் ஒரு கூட்டம் நடத்தவிருந்தார். அதற்குள்ளாகக் குண்டுவெடிப்பு குறித்து செய்தி வந்ததால் அந்தக் கூட்டத்தை நடத்த முடியவில்லை'
தூங்கும் காவல்துறையை, நிழல்உலக தாதாக்களுக்கு அஞ்சும் காவல்துறையை என்னவென்று சொல்வது? காவல்துறையைச் செயலிழக்கச் செய்திருக்கும் அரசியல்வாதிகளை என்னவென்று சொல்வது?