தண்டனை நிறைவேறியது

எரவாடா சிறைச்சாலைக்கு ஒரு சரித்திர முக்கியத்துவம் உண்டு. மகாத்மா காந்தி

எரவாடா சிறைச்சாலைக்கு ஒரு சரித்திர முக்கியத்துவம் உண்டு. மகாத்மா காந்தி அதிகமான நாள்கள் இருந்த சிறைச்சாலை என்பதும், இந்த சிறைச்சாலையில் அவர் இருக்கும்போதுதான் பாபா சாகேப் அம்பேத்கருடனான "பூணா ஒப்பந்தம்' கையெழுத்தானது என்பதும்தான் அது. இப்போது, எரவாடா சிறைச்சாலை பயங்கரவாதி, அஜ்மல் கசாப் தூக்கிலிடப்பட்ட இடம் என்பதாலும் பிரசித்தி பெற்றிருக்கிறது. 2008-ஆம் ஆண்டு நவம்பர் 26-ஆம் தேதி நடந்த மும்பைத் தாக்குதலில் உயிருடன் பிடிபட்ட ஒரே ஒரு தீவிரவாதியான அஜ்மல் கசாப் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு நீதிமன்றத் தீர்ப்புப்படி நவம்பர் 21-ஆம் தேதி தூக்கிலிடப்பட்டிருக்கிறார்.

 நவம்பர் 26, 2008 மும்பையில் முதலில் சில நூறு அப்பாவிகளைக் காரணமே இல்லாமல் சுட்டுக் கொன்று, படுகாயமடையச் செய்த 9 பேரில் உயிருடன் பிடிபட்டவர் அஜ்மல் கசாப் மட்டும்தான். காவல் துறை உதவி அதிகாரிகள், கோவில்கரும், பெüடங்கரும் அன்று துணிந்தும் விரைந்தும் செயல்பட்டிருக்காவிட்டால், அஜ்மல் கசாப் என்கிற தீவிரவாதி பிடிபட்டிருக்க மாட்டார்.

 சத்திரபதி சிவாஜி ரயில்நிலையத்தில் வெறிபிடித்தாற்போலப் பயணிகளைச் சுட்டுத் தள்ளிக் கொண்டிருந்த அஜ்மல் கசாபையும் அபு இஸ்மாயிலையும், ஒரு செய்திப் புகைப்படக்காரருக்கே உரித்தான ஆர்வத்துடனும், துணிச்சலுடனும் செபாஸ்டியன் டிசெüசா, தூண்களுக்குப் பின்னாலும், கதவுகளுக்குப் பின்னாலும் ஒளிந்திருந்து படமெடுத்திருக்காவிட்டால், பிடிபட்டது தீவிரவாதி அஜ்மல் கசாப்தான் என்று உறுதிப்படுத்தி இருக்க முடியாது. அஜ்மல் கசாப் என்கிற தீவிரவாதியின் மரணத்திற்குப் பின்னால், தங்கள் உயிரைப் பணயம் வைத்துத் துணிவுடன் கடமையாற்றிய அந்த மூவருக்கும் இந்தியா நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறது.

 அஜ்மல் கசாபைத் தூக்கிலிட்டது தவறு என்றும், மரண தண்டனையே கூடாது எனும்போது, அவர் தீவிரவாதியானாலும், சாதாரண கொலைகாரரானாலும் ஒன்றுதான் என்றும் வாதிடுபவர்கள் இல்லாமல் இல்லை. ஆனால், தேசப்பற்றும், கொலை செய்யப்பட்ட அந்த அப்பாவிகளின்மீது கொஞ்சமாவது இரக்கமும் கரிசனமும் இருப்பவர்கள் அஜ்மல் கசாபைத் தூக்கிலிட்டதை விவாதப் பொருளாக்க மாட்டார்கள்.

 "இப்போதாவது இந்திய அரசுக்குத் துணிவு வந்ததே' என்றும், "இந்த முடிவுதான் சரி' என்றும் சொல்பவர்கள்தான் அதிகம். அதேநேரத்தில், கசாப் கொல்லப்பட்டதை இந்தியாவின் பல நகரங்களிலும் பட்டாசு வெடித்துக் கொண்டாடியது தேவைதானா என்று நம்மை நாமே கேட்டுக்கொள்ள வேண்டும். தீவிரவாதி ஒருவன் தூக்கிலிடப்பட்டதில் தவறில்லை. ஆனால், அதைக் கொண்டாடி மகிழும் துன்பியல் மகிழ்ச்சி தவறு.

 சொல்லப்போனால் கசாப் ஒரு மூளைச்சலவை செய்யப்பட்ட ஒரு மனித பொம்மை. இந்தியாவில் கால் வைத்தது முதல் எதிர்த்தவர்களைச் சுட்டுத் தள்ளிக் கொண்டே போக வேண்டும், அதன் மூலம் பீதியையும், மக்கள் மத்தியில் கலக்கத்தையும் உண்டாக்க வேண்டும் என்கிற கட்டளைக்குக் கீழ்ப்படிந்த "எந்திரன்'. அவரை இயக்குபவர்கள் அடுத்த தாக்குதலை நடத்துவது எப்படி என்று திட்டம் தீட்டிக் கொண்டு உயிருடன்தான் இருக்கிறார்கள். அந்த நிலையில் கசாபின் மரணத்தைக் கொண்டாடுவது அர்த்தமற்றது.

 கசாபுக்குத் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது குறித்துப் பாகிஸ்தான் அரசு, தனக்குத் தகவல் கிடைத்ததை ஒப்புக்கொண்டதே தவிர, கருத்துத் தெரிவிக்கவில்லை. தலிபான் மற்றும் லஷ்கர் - இ - தொய்பா அமைப்புகள் விமர்சனங்களையும், எச்சரிக்கைகளையும் விடுத்திருப்பது எதிர்பார்க்கப்பட்டதுதான். அதை எதிர்கொள்ள இந்திய அரசு தயாராக இருக்கவும் வேண்டும்.

 கசாபை அம்பாகப் பயன்படுத்தி இந்திய மண்ணில் நடத்திய தாக்குதல், நம் மீது தொடுக்கப்பட்ட தீவிரவாதப் போர். போரில் எதிரியைச் சுட்டு வீழ்த்துவதுபோலத்தான் கசாபின் தூக்குத் தண்டனையைக் கருத வேண்டும். பிறகு, எதற்காக வழக்கு, விசாரணை, தண்டனை என்று கேட்கலாம்.

கசாபை என்கௌண்டரில் கொன்றிருக்கலாம். ஆனால், அவர் தீவிரவாதியாக இருந்தாலும், இந்தியச் சட்டப்படி வழக்குப் பதிந்து, குற்றங்களை நிரூபித்து மரண தண்டனை விதிக்கும் நடைமுறையை இந்திய அரசு பின்பற்றி, உலகுக்கு ஒரு முன்னுதாரணம் ஏற்படுத்தியிருக்கிறது.

 கசாபைக் கொலையாளியாகக் கருதி நான்கு ஆண்டுகள் வழக்கு நடத்தி, அவருக்கு ஒரு வழக்குரைஞரை அரசே நியமித்து, ரூ. 29 கோடி செலவழித்து, தூக்குத் தண்டனை வழங்கி, இப்போது அதை நிறைவேற்றி இருப்பதற்குக் காரணம் இருக்கிறது. பாகிஸ்தானில் தயாராகும் தீவிரவாதம் குறித்த தகவலை, சர்வதேச அரங்கில் கொண்டு சேர்க்க வேண்டிய தேவையைக் கருதிச் செய்யப்பட்ட தேர்ந்த முடிவு அது.

 கசாபின் தண்டனையை ஏன் ரகசியமாக நிறைவேற்ற வேண்டும் என்று ஒரு கேள்வி முன் வைக்கப்படுகிறது. அவர் குறிப்பிட்ட தேதியில் தூக்கிலிடப்படுவார் என்று முன்னதாகவே அறிவித்தால், அந்த நாளில் பல்வேறு இடங்களில் குண்டு வைக்கவும், புரளிகளைக் கிளப்பி மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தவும் தீவிரவாதிகள் முற்பட மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்? இந்த விஷயத்தில், இந்திய அரசின் எச்சரிக்கை உணர்வைப் பாராட்டியே தீரவேண்டும்.

 தூக்குத் தண்டனை அர்த்தமற்றது என்பதும், ஒரு கொலையாளியை அரசு சட்டப்படி கொலை செய்வது நியாயமல்ல என்பதும் ஏற்புடைய வாதம்தான். ஆனால், ஒரு நாட்டின் மீதான, நாட்டு மக்களின் மீதான தீவிரவாதத் தாக்குதல்களில், தூக்குத் தண்டனையை ரத்து செய்து கருணை காட்டுவதென்பது போர் முனையில் துப்பாக்கியைக் கீழே போட்டு விட்டு நிற்பதற்கு நிகரானது. கசாப் விவகாரத்தை ஒரு தீவிரவாதப் போராகத்தான் பார்க்க வேண்டும்.

 அஜ்மல் கசாபைத் தூக்கில் போட்டதாலேயே, மத்திய அரசு தீவிரவாதத்திற்கு எதிராகத் துணிவுடன் செயல்படத் தொடங்கிவிட்டது என்று அர்த்தமல்ல. முறைப்படி நீதி நிலைநாட்டப்பட்டிருக்கிறது, அவ்வளவே!

 அது சரி, 2001-இல் நடந்த நாடாளுமன்றத் தாக்குதலில் தொடர்புடைய அப்சல் குருவின் தண்டனையை எப்போது நிறைவேற்றுவதாக உத்தேசம்? மத்திய அரசுக்கு அப்சல் குரு என்று ஒருவர் தண்டனை உறுதி செய்யப்பட்டு 10 ஆண்டுகளாகச் சிறையில் இருப்பது ஞாபகம் இருக்கிறதா, இல்லையா?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com