கயமைத்தனம்!

முதலில், ஒவ்வொரு குடும்பத்துக்கும் 6 சமையல் எரிவாயு உருளைகள் மட்டுமே மானிய விலையில் தரப்படும், கூடுதலாக சமையல் எரிவாயு உருளை தேவைப்பட்டால், சந்தை விலையைக் கொடுத்துப் பெறலாம் என்றார்கள்.

முதலில், ஒவ்வொரு குடும்பத்துக்கும் 6 சமையல் எரிவாயு உருளைகள் மட்டுமே மானிய விலையில் தரப்படும், கூடுதலாக சமையல் எரிவாயு உருளை தேவைப்பட்டால், சந்தை விலையைக் கொடுத்துப் பெறலாம் என்றார்கள். அந்த நேரத்தில், வீட்டுப் பயன்பாட்டுக்கான எரிவாயு உருளையின் சந்தை விலை ரூ.756 ஆக இருந்தது.

அடுத்த ஒரு வாரத்திலேயே வீட்டுப் பயன்பாட்டுக்கான எரிவாயு உருளையின் சந்தை விலை, சர்வதேச எண்ணெய்ப் பொருள்கள் விலை உயர்வுக்கேற்ப ரூ.883 ஆக உயர்ந்தது.

முதல்அடியின் வலி பொறுக்க முடியாத நிலையில் இரண்டாவது அடி விழுந்தது. இப்போது, அடுத்த கட்டமாக இன்னொரு அடி கொடுத்திருக்கிறார்கள் - மேலும் ரூ.11.42 விலை உயர்வு!

14.2 கிலோ எடையுள்ள வீட்டுஎரிவாயு உருளைக்கு வழங்கும் கமிஷன் தொகை ரூ. 25.83-யை ரூ. 37.25 ஆக உயர்த்தியிருக்கிறார்கள். இதனால் தமிழகத்தில் மானியம் உள்ள எரிவாயு உருளைகளின் விலை ரூ.386.50 லிருந்து ரூ.397.92 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம், மானியம் இல்லாத வீட்டுச் சமையல் எரிவாயு உருளைக்கான கமிஷனையும் ரூ. 38 ஆக உயர்த்தி இருப்பது ஏன்?

ஒரு குடும்பத்துக்கு 6 உருளைகள் மட்டுமே மானிய விலையில் கிடைக்கும் என்று அரசு அறிவித்ததில் மக்களைவிட அதிக கண்ணீர் விட்டவர்கள் காஸ் ஏஜன்ஸிகள்தான். அதற்கான காரணமும் இருக்கின்றது.

பல காஸ் ஏஜன்ஸிகள் எப்படிச் செயல்படுகின்றன என்பது ஊரறிந்த உண்மை. பதிவு செய்து ஒன்றரை மாதங்களுக்கு மேலாக எரிவாயு உருளை வழங்காமல், வீட்டு சிலிண்டர்களை ஓட்டல்களுக்கும், தள்ளுவண்டி கடைகளுக்கும் விநியோகித்த காஸ் ஏஜன்ஸிகள்தான் அதிகம். நியாயமாகச் செயல்பட்டவர்கள் மிகமிகக் குறைவு.

ஒவ்வொரு நுகர்வோர் கணக்கிலும் விருப்பம்போல, சிலிண்டர்களைப் பதிவு செய்து, எண்ணெய் நிறுவன அதிகாரிகளின் உதவியுடன் வீட்டுச் சிலிண்டரைத் திருப்பிவிட்டவர்களுக்கு, தற்போது ஒரு குடும்பத்துக்கு 6 என்று அறிவித்தவுடன், இனி மானிய எரிவாயு உருளைகளால் கொள்ளை லாபம் கிடைப்பது நின்றுவிடப் போகிறது என்பதால் இத்திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள். ஒவ்வொரு நுகர்வோருக்கும் 6 உருளை வழங்கப்பட்டதை கணக்கு வைத்துக்கொள்வது மிகவும் கடினம் என்று கண்டித்தார்கள்.

கடந்த செப்டம்பர் மாதம், உத்தரப் பிரதேச மாநிலத்தில், லக்னோ நகரின் எரிவாயு உருளை விநியோகிப்பாளர்கள் வெளியிட்ட அறிக்கையின்படி, ""...சுமார் 7.5 லட்சம் எரிவாயு இணைப்புகள் கொண்ட லக்னோ நகரில், மத்திய அரசு அண்மையில் 6 எரிவாயு உருளைகள் மட்டுமே மானிய விலையில் கிடைக்கும் என்ற அறிவிப்பை செய்த பிறகு, 10% எரிவாயு உருளை விநியோகம் குறைந்துள்ளது''.

மக்கள் மாற்று எரிசக்தியை சமையலுக்குப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டதால் இந்த நிலைமை என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தாலும் உண்மை அதுவல்ல. மாற்று எரிசக்தி, நகரைப் பொருத்தவரை மின்சாரம் மட்டுமே. மின்கட்டண உயர்வு காரணமாக, சமையலை மின்சாரத்தில் செய்வது, எரிவாயுவில் செய்வதைக் காட்டிலும் செலவு அதிகமாகத்தான் இருக்கும். ஆகவே இந்த 10% குறைவுக்குக் காரணம், காஸ் ஏஜன்ஸிகள் போலியாகப் பதிந்து வீட்டு சிலிண்டரை வெளிச்சந்தைக்குத் திருப்ப முடியாதபடி கடிவாளம் போடப்பட்டிருப்பதுதானே தவிர, மக்கள் மாற்று எரிசக்திக்கு மாறியதால் அல்ல!

ஆக, காஸ் ஏஜன்ஸிகளுக்கு தற்போது குறைந்துள்ள 10% எரிவாயு உருளைகள் விநியோகத்தால் மறைமுகமாக பெரும் நஷ்டம். இவர்கள் புலம்பலை, முதலைக் கண்ணீரை சற்று தணிக்கும் விதமாக, மத்திய அரசு இந்தக் கமிஷன் தொகையை எல்லா உருளைகளுக்குமாக உயர்த்திக் கொடுத்துள்ளது. அதிகாரிகளின் பரிந்துரைதான் இதற்குக் காரணமாக இருக்கக் கூடும்.

ஒவ்வொரு காஸ் ஏஜன்ஸியும் குறைந்தபட்சம் 3,000 நுகர்வோருக்கு மேலாக வைத்திருக்கின்றன. ஒரு நாளைக்கு குறைந்தது 100 எரிவாயு உருளைகள் விநியோகிக்கிறார்கள். ஊழியர்களுக்கு வழங்கப்பட வேண்டிய டெலிவரி சார்ஜ் ரூ.8-யை சேர்த்துதான் வசூலிக்கிறார்கள். ஆனால், அதை ஊழியர்களுக்கு முறையாகக் கொடுக்கும் ஏஜன்ஸிகள் குறைவு. ஆதலால் ஊழியர்கள், நுகர்வோரிடமும் பணம் பெற்றுச் செல்கிறார்கள்.

வீட்டு சமையல் எரிவாயுவைச் சந்தைக்குத் திருப்பிவிட்டவர்கள் மீது வழக்குத் தொடுத்து, உரிமத்தை ரத்து செய்யவேண்டிய அதிகாரிகள், இவர்களுக்கு ஆதரவாக இருந்து கமிஷனை உயர்த்திக் கொடுக்கிறார்கள். இதை நன்றி விசுவாசம் என்று சொல்வதா இல்லை தங்களது பங்கை உறுதிசெய்யும் முயற்சி என்பதா?

எரிவாயு விலை சர்வதேச விலைக்கு ஏற்ப உயர்த்தப்படுவதாக நியாயம் சொன்ன மத்திய அரசு, கமிஷன் தொகையை அதிகரிக்கக் காரணம் என்ன? ஒன்று இந்த கமிஷன் தொகையை மக்கள் மீது செலுத்தாமல், தானே ஏற்றுக்கொண்டிருக்க முடியும். அல்லது மானியத்தில் வழங்கப்படும் எரிவாயு உருளைகளுக்கு மட்டும் இந்தக் கமிஷன் தொகையை உயர்த்தி இருந்தாலும் பரவாயில்லை எனலாம். எல்லா எரிவாயு உருளைகள் மீதும் இந்தக் கமிஷன் தொகையை ஏற்றி வைத்து, மக்களே இதையும் வழங்க வேண்டும் என்பது எந்த வகையில் நியாயம்?

மத்திய அரசு இந்தக் கமிஷன் தொகையை தானே ஏற்க வேண்டும் அல்லது எல்லா காஸ் ஏஜன்ஸிகளையும் ரத்துசெய்துவிட வேண்டும். மானிய விலையிலான எரிவாயு உருளைகளை நியாயவிலைக் கடைகள் மூலம் வழங்கட்டும். சந்தை விலையிலான எரிவாயு உருளைகளை, பெட்ரோல் பங்க்குகள் மூலம் 5 கிலோ எரிவாயு உருளைகளாக விற்கட்டுமே... எண்ணெய், அரிசி வாங்குவதைப்போல, மக்கள் இதையும் வாங்கிவிட்டுப் போகிறார்கள்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com