சுடச்சுட

  

  நிதி நெருக்கடி மற்றும் நிர்வாகச் சீர்கேட்டில் சிக்கியுள்ள அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தைச் சீரமைக்க, தமிழக அரசு ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரியைத்  தனிஅலுவலராக நியமித்ததும், அதைத் தொடர்ந்து பல்கலைக்கழகத் துணை வேந்தர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டதும் பாராட்டத்தக்க, துணிச்சலான நடவடிக்கைகளாக இருந்தன.

   மேலும் துணிச்சலாக நடவடிக்கைகளை மேற்கொண்டு இந்தப் பல்கலைக்கழகத்தைத் தமிழக அரசு காப்பாற்றிவிடப் போகிறது என்ற எண்ணம் எழுந்தநிலையில், இந்தப் பல்கலைக்கழகத்தை அரசே ஏற்பதற்கான சட்ட மசோதாவை தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்திருப்பதைப் பார்க்கும்போது, ஒரு சிக்கலை விடுவிக்கும் முயற்சியில் இறங்கி, ஆர்வக் கோளாறினால் தமிழகஅரசு தானே இன்னொரு சிக்கலுக்குள் நுழைகிறதோ என்கிற அச்சமும் ஏற்படுகிறது.

   மிகப்பெரியதும், பழமைவாய்ந்ததுமான சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் பாழ்பட்டு நிற்பதற்குக் காரணம் - அந்த நிறுவனத்தின் உயர் பொறுப்பில் உள்ளவர்களிடையே ஏற்பட்ட போட்டிகளும், சுரண்டல்களும், அதன் கல்வித்தரம் இந்திய அளவில் பேசப்படும், மதிப்பிடப்படும் ஒன்றாக மாறாததும்தான்.

   பல்கலைக்கழகத்துக்குக் கிடைக்கும் வருவாயில் பெரும்பகுதி உறிஞ்சி எடுக்கப்பட்டது ஒருபுறம் இருக்க, பல்கலைக்கழகத்தில் அவரவருக்கு ஆள்பலம் சேர்ப்பதற்காக ஆட்களை நியமனம் செய்தபோது, சம்பளச் சுமை கூடியதுடன் கற்பித்தல் பணியின் தரமும் தாழ்ந்தது என்பதுதான் உண்மை.

   அரசு தலையிட்டு அதன் நிர்வாகத்தை ஒழுங்குபடுத்தவும், ஊழல் செய்தவர்களைத் தண்டிக்க அல்லது வெளியேற்றவுமான நடவடிக்கைகள் மட்டுமே சரியானவையாக இருக்க முடியும். இந்தப் பல்கலைக்கழகத்தை அரசு தன் பொறுப்பில் ஏற்பதன் மூலம் இந்த நிறுவனத்தின் கல்வித் தரத்தை உயர்த்திவிட முடியாது என்பதற்குப் பல உதாரணங்களைக் காட்ட முடியும்.

   இந்தப் பல்கலைக்கழகத்தை நிதி நெருக்கடியிலிருந்து காப்பாற்றுவதற்காக தொகுப்பு நிதியாக ஒரு கணிசமான தொகையைத் தமிழக அரசு அளித்து வருகிறது என்பதே, ஒரு கூடுதல் சுமை. இதில், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தை அரசு தன் பொறுப்பில் ஏற்றுக்கொண்டால், முழு நட்டத்தையும் தலையில் ஏற்பதாக அது அமைந்துவிடும்.

   இந்தப் பல்கலைக்கழகத்தில் அதிக வருவாய் தரக்கூடிய பிரிவுகள் - பொறியியல் மற்றும் மருத்துவம் ஆகியன மட்டுமே. சில சுயநிதி பாடத்திட்டங்கள் மூலமும் வருவாய் கிடைக்கிறது. தொலைதூரக் கல்வியும் கணிசமான வருவாயை ஈட்டித் தருகிறது. வெளிப்படையாகப் பெறும் வருவாய் முழுவதும் ஊழியர் சம்பளத்துக்கே போதாத நிலை உள்ளது. ஆனால் நன்கொடையாக வசூலிக்கும் பணம், பல்கலைக்கழக வளர்ச்சிக்குப் பயன்படுத்தப்படாமல் மடை திருப்பப்பட்டு விடுகிறது.

   அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் சிறப்புத் தணிக்கைக் குழு நடத்திய ஆய்வு முடிவுகளின்படி, பல்கலைக்கழக மானியக் குழுவின் விதிமுறைகளுக்கு மாறாக நியமிக்கப்பட்டுள்ள பணியாளர், விரிவுரையாளர் ஆகியோரின் நியமனங்கள் 5,677. இவர்களில் ஒருவரைக்கூட பணியிலிருந்து நீக்கக்கூடாது என்றும் இவர்களுக்கு பல்கலைக்கழகத்திலேயே மாற்றுப்பணிகள் வழங்க வேண்டும் என்றும் ஊழியர் சங்கங்கள் இப்போதே முண்டாசு கட்டிக்கொண்டு களத்தில் இறங்கிவிட்டன.

   பல்கலைக்கழகம் ஒரு தொழிற்சாலை அல்ல, உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம், லாபத்தைப் பெருக்குவதற்கும், பணியாளர்களை மாற்று வேலைக்குப் பயன்படுத்திக் கொள்வதற்கும்! கற்பித்தல் அல்லாத பணியில் இருப்போருக்கு மாற்றுப்பணி தரலாம்.  ஆனால், திறமையில்லாத பேராசிரியர்களை, விரிவுரையாளர்களை வைத்துக் கொண்டு எப்படி பல்கலைக்கழகத்தை நிமிர்த்துவது? மாணவர்கள் எப்படி ஆர்வமுடன் சேர்வார்கள்? அரசுப் பள்ளிகளில் இலவசக் கல்வி கொடுத்தாலும் மாணவர்களைச் சேர்க்கப் பெற்றோர் தயங்குவதுபோல, அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் கற்பித்தல் புலம் மேன்மையாக இல்லாத நிலையில், அதை யாராலும் தூக்கி நிறுத்த முடியாது.

   தேவைக்கு அதிகமாக நியமிக்கப்பட்டுள்ள சுமார் 6,000 பேரைப் பணியிலிருந்து நீக்காமல் பல்கலைக்கழகத்தை மீட்கவே முடியாது என்பதுதான் நிதர்சனமான உண்மை. ஆனால் இதற்கு ஊழியர் சங்கங்கள் உடன்பட மாட்டா. போராட்டங்கள், வேலைநிறுத்தங்கள் நடைபெறும். மாணவர்கள் கல்வி பாதிக்கப்படும். அடுத்த கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை பெருமளவு குறையும். ஒரு பெருங்கல்லை கழுத்தில் கட்டிக்கொண்ட கதையாக இது முடியக்கூடும் என்று தோன்றுகிறது.

   அரசே ஏற்றுக்கொள்வது என்று முடிவாகும்பட்சத்தில், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தை முழுமையாக ஏற்றுக்கொள்ளாமல், அதன் பொறியியல் புலத்தை சென்னை அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைவு பெற்ற தனி அமைப்பாகவும், மருத்துவப் புலத்தை எம்ஜிஆர் அரசு மருத்துவக் கல்லூரியுடன் இணைவு பெற்ற தனியான மருத்துவக் கல்லூரியாகவும் மாற்ற வேண்டும்.

   கலை - அறிவியல் புலம் மட்டும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துடன் தொடர்ந்து நீடிக்கச் செய்யலாம். ஒவ்வொரு புலமும் அதனதன் வருவாயில் நிற்கவும், அதற்கேற்ப பேராசிரியர் மற்றும் விரிவுரையாளர், பணியாளர்கள் எண்ணிக்கையை ஒழுங்குபடுத்தவும், மாணவர்களை ஈர்க்கும் வகையில் பாடத்திட்டங்களை வகுத்துச் சுதந்திரமாக இயங்க அனுமதிக்கவும் செய்வதுதான் அரசின் கடமை.

   எல்லா புலங்களின் வருவாயையும் ஒரு பானையில் அள்ளிப்போட்டு கூட்டாஞ்சோறு சாப்பிடலாம் என்றால், யாருக்குமே எந்தப் பொறுப்பும் இருக்காது. ஆனால் மத்திய பல்கலைக்கழகத்துக்கு இணையாக ஊதியம் வேண்டும் என்ற கோரிக்கைகள் மட்டும் இருக்கும். தகுதியுள்ளது வாழும். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துக்கும் இது பொருந்தும்.

   கைதூக்கி விடுதல் கடமை! தூக்கிச் சுமப்பது மடமை!!

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai