சுடச்சுட

  

  ஐஎன்எஸ் விக்ராந்த் விமானந்தாங்கிக் கப்பல், ஐஎன்எஸ் அரிஹந்த் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் என இரண்டு சாதனைகளால் மகிழ்வுற்றிருந்த வேளையில், துரதிருஷ்டவசமாக ஐஎன்எஸ் சிந்துரக்ஷக் நீர்மூழ்கிக் கப்பல் வெடித்து தீவிபத்துக்குள்ளாகியதுடன், 18 பேரை பலிகொண்டிருப்பது வேதனை அளிக்கிறது.

  நமது படைகளின் பலத்தை பறைசாற்றிக்கொண்டிருக்கும் நேரத்தில் இவ்வாறு நீர்மூழ்கிக் கப்பல் வெடித்துச் சிதறி மூழ்கியிருப்பதை ஒரு திருஷ்டிப் பொட்டாகத்தான் கருத வேண்டியுள்ளது.

  இதுபோன்ற அசாதாரண சூழ்நிலைகளில் தற்காப்புக்கான பாதுகாப்பான அறைகள் கப்பலின் அடித்தளத்தில் உள்ளன. அவற்றில் வீரர்கள் அடைந்துகிடக்க வாய்ப்புகள் உண்டு என்று கடற்படை அதிகாரிகள் முதலில் கூறியபோதிலும், தற்போது 4 வீரர்களின் சடலம் மீட்கப்பட்டுள்ள நிலையில், மீட்புப்பணியில் ஈடுபட்டவர்கள் கூறும் விவரங்களைப் பார்க்கும்போது, யாரும் உயிர் பிழைத்திருக்க வாய்ப்புகளே இல்லை என்பது தெளிவாகியுள்ளது.

  போர்க்கப்பலுக்கே உரித்தான ஆயுதங்கள், வெடிபொருள்கள் ஐஎன்எஸ் சிந்துரக்ஷக் நீர்மூழ்கிக் கப்பலில் இருந்தன. ஆனால், இவை நள்ளிரவில் வெடித்து, தீப்பிடிக்கும் அளவுக்கு என்ன நடந்தது என்பது யாருக்கும் தெரியவில்லை. விசாரணை நடத்தி நான்கு வாரங்களில் ஒளிவுமறைவில்லாமல் தெரிவிக்கப்படும் என்கிறார்கள். இருப்பினும்கூட, வெடிவிபத்தினால் கப்பல் உருக்குலைந்து கடலில் மூழ்கியுள்ள நிலையில், காரணங்களைக் கண்டறிவது மிகமிக அரிது. இக்கப்பலின் உள்அறைகள் மிகக் குறுகலானவை என்பதாலும், வெடித்து தீப்பற்றியதில் இரும்புக்கதவுகள் உருகி உருக்குலைந்து போயுள்ளதால் கதவுகளை திறக்கவும் இயலவில்லை என்று கூறுகிறார்கள். கடலின் சேறும்சகதியும் உள்ளே புகுந்துவிட்டதால் சக்திமிக்க டார்ச்லைட் மூலம்கூட சரியாகப் பார்க்க முடியவில்லை என்கிறார்கள். ஆகவே இந்த வேதனை சம்பவத்துக்கான காரணங்கள் கண்டறியப்படுமா என்பது சந்தேகமே!

  2010-ஆம் ஆண்டு, இதே கப்பலுக்குள் முதல்தளத்தில் ஒருமுறை தீ விபத்து நடந்திருப்பதாகக் கூறப்படுகிறது. அதற்கும் தற்போதைய நிகழ்வுக்கும் முடிச்சுப்போடவோ, நியாயப்படுத்தவோ ஏதுமில்லை என்றபோதிலும், ராணுவத் தளவாடங்கள் சரியான கணகாணிப்புகள் இல்லாமல் இருக்கின்றன என்பதைத்தான் இந்த சம்பவம் வெளிப்படுத்துகிறது.

  1997-ஆம் ஆண்டு கடற்படையில் சேர்க்கப்பட்ட, ரூ.400 கோடியிலான, 2300 டன் எடை கொண்ட இக்கப்பல், ரஷ்யாவில் அண்மையில்தான் சுமார் ரூ.450 கோடி செலவில் புனரமைக்கப்பட்டு மும்பை கடற்படை தளத்துக்கு கொண்டுவரப்பட்டது. நல்ல நிலையில் நீர்மூழ்கிக் கப்பல் இருந்தது என்றும் அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர். சரியானபடி புனரமைக்கப்பட்டுள்ளதா என்று சரிபார்க்கப்பட்டதா? இதன் மின்தடங்கள் சரியாகத்தான் இருந்தனவா?

  இந்த சம்பவம் நாசவேலையாக இருக்கக்கூடிய வாய்ப்புகளும் உள்ளன என்று கடற்படை அட்மிரல் டி.கே ஜோஷி கூறியிருக்கிறார். நாசவேலை என்றால், நீர்மூழ்கிக் கப்பலுக்குள் இருந்தவர்களின் உதவியில்லாமல் யாரும் உள்ளே நுழைந்திருக்க முடியாது என்று மற்ற கடற்படை அதிகாரிகள் கருதுகின்றனர்.

  ராணுவம் என்றால் கட்டுப்பாட்டுடன், கடமை தவறாத வீரர்கள் நிரம்பிய அமைப்பாக கருதிக்கொண்டிருந்த நிலைமை இன்றில்லை. அரசு அதிகாரிகள் எப்படி அவரவர் பதவிக்கு ஏற்றாற்போல ஊழல் செய்கிறார்களோ அதேபோன்ற ஊழல் ராணுவத்திலும் நடந்துகொண்டு இருக்கிறது. போஃபர்ஸ் தொடங்கி, இப்போது தரைப்படைக்கு ஜீப் வாங்கியதிலிருந்து விமானப்படைக்கு ஹெலிகாப்டர் வாங்கியது வரை, ராணுவ அதிகாரிகள் சிலரது பெயர் கள் அடிபடாமல் இல்லை. இதில், கடற்படையும் விதிவிலக்கு அல்ல என்று நினைக்கத் தோன்றுகிறது. இந்த விபத்துக்கு நீர்மூழ்கிக் கப்பலில் இருந்த ராணுவ வீரர்களின் மெத்தனப் போக்கும், அலட்சியமும் காரணம். இதனை வெளிப்படையாகப் பேசினால், மக்கள் மத்தியில் நன்மதிப்பு குறைந்துபோகும் என்று கருதி மெüனமாக இருக்கிறார்கள்.

  சில தினங்களுக்கு முன்பு நாம் சாதனையாகக் கருதிய ஐஎன்எஸ் அரிஹந்த் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் இந்தியாவில் தயாரிக்கப்பட்டிருந்தாலும், இதற்கான அடிப்படைத் தொழில்நுட்பம் ரஷ்யாவிடம் பெறப்பட்டது. கடலில் மிதக்கும் இந்த அணுசக்தி நீர்மூழ்கி கப்பலின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அணுசக்தி ஒழுங்காற்று வாரியம், சுற்றுச்சூழல் அமைச்சகம் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஆகியவற்றின் தடையில்லாச் சான்று, பாதுகாப்பு உறுதிச்சான்றுகள் பெறப்பட்டிருக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. பல மாதங்கள் நீருக்குள்ளேயே இருக்கும் ஆற்றல் கொண்ட இந்த அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலுக்குள் பணியாற்றும் ஊழியர்களுக்கு போதுமான உளவியல் ஆலோசனைகள் அளிக்கப்பட்டிருக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

  இந்த அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலுக்குள் கதிர்வீச்சு இருக்கும், இவர்களும் அணுஉலைக் கதிர்வீச்சு உள்ள நீரை கடலில் கலக்கவிடுவார்கள். இதன் அளவு மிகவும் குறைவு என்றும், புறக்கணிக்கத்தக்க அளவு என்றும் கூறுவார்கள். இருப்பினும் பாதுகாப்பு ஏற்பாடுகள் என்னென்ன செய்யப்பட்டுள்ளன? யார் உறுதிப்படுத்தியது?

  67வது சுதந்திர தினக் கொண்டாட்டத்தின்போது, தில்லியை தீவிரவாதிகள் தாக்கத் திட்டமிட்டிருப்பதாகச் சொன்னார்கள். அதுபோல் அசம்பாவிதம் ஏதும் நடக்கவில்லை என்று மகிழ்ச்சி கொள்ள முடியவில்லை. ஜம்முவில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் சுட்டதால் 5 வீரர்களை இழந்தோம். கடற்படையில் இப்போது 18 பேரை இழந்துள்ளோம்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai