Enable Javscript for better performance
யூரேஷியக் குழப்பம்!- Dinamani

சுடச்சுட

  

  மத்தியதரைக்கடல் மற்றும் கருங்கடலைச் சுற்றி இருக்கும் மேற்கு ஆசிய, கிழக்கு ஐரோப்பிய நாடுகள் பலவற்றிலும் காணப்படும் அரசியல் நிலையின்மை இப்போது உக்ரைனையும் தாக்கி இருக்கிறது. துருக்கி, சிரியா, லிபியா, டுனீசியா, அல்ஜீரியா போன்ற நாடுகளில் நடந்ததுபோலவே உக்ரைனிலும் மக்கள் தெருவில் இறங்கிப் போராடத் தலைப்பட்டிருக்கிறார்கள். கடந்த 15-ஆம் தேதி 2 லட்சத்திற்கும் அதிகமான போராட்டக்காரர்கள் உக்ரைன் நாட்டின் தலைநகர் கீவிலுள்ள சுதந்திரதின மைதானத்தில் மட்டுமல்லாமல், பல்வேறு நகரங்களிலும் கூடி அதிபருக்கு எதிராக கோஷமெழுப்பினர். பாதுகாப்பு நடவடிக்கையாக, கைது செய்திருந்தவர்களை விடுவித்தும்கூட நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை.

  உக்ரைன் நாட்டு அதிபர் விக்டர் யானுகோவியின் சமீபத்திய முடிவுகள்தான் பிரச்னைக்குக் காரணம். கடந்த பல மாதங்களாகவே, ஐரோப்பியக் கூட்டமைப்பில் உக்ரைனையும் இணைப்பதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வந்தன. கிழக்கு உக்ரைன் பகுதியைச் சேர்ந்த மக்களைத் தவிர, ஏனைய பகுதியினர் எல்லாருமே உக்ரைன் ஐரோப்பிய கூட்டமைப்பில் இணைந்துவிட வேண்டும் என்கிற கருத்துடையவர்களாக இருக்கிறார்கள். ஐரோப்பியக் கூட்டமைப்பில் இணைந்த பிறகு அண்டை நாடான போலந்தில் ஏற்பட்டிருக்கும் மாற்றமும், வளர்ச்சியும் உக்ரைன் மக்கள் மத்தியில் அதுபோன்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருப்பதில் வியப்பொன்றும் இல்லை.

  உக்ரைனின் பொருளாதார நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. குறைந்தது 17 பில்லியன் டாலர் நிதியுதவி பெற முடிந்தால் மட்டுமே அடுத்த நிதியாண்டுக்குள் சந்திக்க வேண்டிய வெளிநாட்டுக் கடன்களுக்கான வட்டித் தொகையை உக்ரைன் எதிர்கொள்ள முடியும்.

  ஐரோப்பிய யூனியனுடனான பேச்சுவார்த்தையில், இந்தத் தொகையை சர்வதேச நிதி ஆணையத்திடமிருந்து பெறுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், ஐ.எம்.எப்.பின் நிபந்தனைகள் மிகவும் கடுமையானவை என்பது மட்டுமல்ல, உக்ரைனின் சந்தை முழுமையாக வெளிநாட்டு உற்பத்தியாளர்களுக்குத் திறந்துவிடப்பட வேண்டும் என்கிற கட்டாயமும் ஏற்படும். அப்படி நேர்ந்தால், உக்ரைனின் உள்நாட்டுத் தொழில்கள் அழிந்துவிடும் அபாயம் இருக்கிறது.

  உக்ரைனின் இந்த தர்மசங்கடத்தைப் புரிந்துகொண்ட ரஷ்யா, உக்ரைன் அரசுப் பத்திரங்களில் 15 பில்லியன் டாலர் முதலீடு செய்வதாக ஆசைகாட்டி, ஐரோப்பிய யூனியனுடனான உறவைத் துண்டித்துக் கொள்ளச் செய்து விட்டது. போதாக்குறைக்கு, உக்ரைன் நாட்டு கனரகப் பொறியியல் உற்பத்தியில் 75% ரஷ்யாவுக்கு ஏற்றுமதியாகிறது என்பதால், அந்த வாய்ப்பை இழந்துவிடவும் உக்ரைன் அரசுக்கு மனமில்லை.

  பனிப்போர் முடிவுக்கு வந்து பல ஆண்டுகளாகிவிட்ட போதும், முந்தைய சோவியத் யூனியன் சின்னாபின்னாமாகிவிட்ட நிலையிலும், நிலப்பரப்பு அளவிலும், ராணுவ பலத்திலும் ரஷ்யா ஒரு வல்லரசாகவேதான் தொடர்கிறது. முந்தைய சோவியத் யூனியனிலிருந்த உக்ரைன் போன்ற நாடுகளைத் தனது அணியில் தக்க வைத்துக் கொள்ள எல்லாவித முயற்சிகளையும் ரஷ்யா மேற்கொண்டு வருகிறது. இந்த நாடுகள் ஐரோப்பிய யூனியனில் இணைந்தால் அவை மறைமுகமாக அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் சென்றுவிடும் என்கிற பயம் ரஷ்யாவுக்கு.

  தற்போது ரஷ்யா, உக்ரைன் நாட்டுடன் செய்துகொண்டிருக்கும் ஒப்பந்தப்படி குறைந்த விலையில் எரிவாயு வழங்கவும் ஏற்றுக் கொண்டிருக்கிறது. இதன் மூலம் உக்ரைனின் பொருளாதார வளர்ச்சி அதிகரித்து, இப்போதைய நிலையிலிருந்து மீள முடியும் என்பது உக்ரைன் அதிபர் விக்டர் யானுகோவியின் வாதம்.

  ஆனால் போராளிகளும் எதிர்க்கட்சியினரும் இந்த வாதத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. ""நாம் சோவியத் யூனியனிலிருந்து பெற்ற விடுதலையை இழப்பதற்கான அறிகுறி இது. ரஷ்யா நமக்கு அளித்திருக்கும் சலுகைகளுக்காக நமக்கு விதித்திருக்கும் நிபந்தனைகள் என்னென்ன? அதை ஏன் அதிபர் யானுகோவிச் சொல்ல மறுக்கிறார்?'' என்பவை சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் யூலியா டிமோஷென்கோவின் கேள்விகள்.

  பெருவாரியான மக்கள் உக்ரைன் ஐரோப்பிய யூனியனில் இணைவதை விரும்புகிறார்கள். சந்தைப் பொருளாதாரத்தின் கவர்ச்சி அவர்களை இழுக்கிறது. சோவியத் யூனியன் பற்றிய நினைவுகளே இல்லாத புதிய தலைமுறை தலையெடுத்துவிட்டது. போதாக்குறைக்கு, விக்டர் யானுகோவியின் ஆட்சியில் தலைவிரித்தாடும் லஞ்ச ஊழல்கள் வேறு. எனவே மக்கள் தெருவில் இறங்கிப் போராடத் தொடங்கி விட்டனர்.

  ரஷ்யாவின் உதவியுடன் போராட்டக்காரர்களை அடக்கிவிடலாம் என்று நினைக்கிறார் விக்டர் யானுகோவி. அவருக்குத் தெரியாது, போராட்டக்காரர்களுக்கு மேலைநாடுகளின் ஆதரவு இருக்கிறது என்பது!

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai