இனியாவது விழித்துக் கொள்வோம்..

உத்தரகண்ட் மாநிலத்தில் இமாலய சுனாமியால் சேதமடைந்துள்ள கேதார்நாத் கோயிலை இந்தியத் தொல்லியல் துறை உதவியுடன் மீட்டுருவாக்கம் செய்ய மத்திய அரசு எடுத்துள்ள முடிவு மிகச் சரியானது.

உத்தரகண்ட் மாநிலத்தில் இமாலய சுனாமியால் சேதமடைந்துள்ள கேதார்நாத் கோயிலை இந்தியத் தொல்லியல் துறை உதவியுடன் மீட்டுருவாக்கம் செய்ய மத்திய அரசு எடுத்துள்ள முடிவு மிகச் சரியானது. இப்பணியைச் செய்வதற்கு இந்தியத் தொல்லியல் துறை மிகப் பொருத்தமானது. அவர்களது திறனை உலகம் முழுவதும் அறியும்.

மந்தாகினி நதிக்கரையில் உள்ள கேதார்நாத் கோயில், அண்மையில் நேரிட்ட பெருமழை வெள்ளப்பெருக்கினால் மிக மோசமாகப் பாதிப்படைந்துள்ளது. இக்கோயில் பார்ப்பதற்கு சேதம் இல்லாதது போன்ற ஒரு தோற்றம் இருந்தாலும்கூட, கருவறையைத் தவிர மற்ற அனைத்து பகுதிகளையும் வெள்ளம் அசைத்துவிட்டுச் சென்றுள்ளது.

மேகவெடிப்பினால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தின் சீற்றம் மட்டுமின்றி, மலைச்சரிவுகளின் பாறைகளும் நதியின் வேகத்தோடு வந்து மோதியதால்தான் கேதார்நாத் கோயிலின் சேதம் மேலதிகமாக இருக்கின்றது. இக்கோயில், வெள்ளப்பெருக்குக்கு முன்பு எப்படி இருந்ததோ அதே நிலையில் மீட்டுருவாக்கம் செய்யப்பட வேண்டும். இதுவே ஆன்மீகவாதிகள் அனைவருடைய விருப்பமும்.

பதினோராம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கேதார்நாத் கோவில், ஆன்மீக உணர்வுக்கு எடுத்துக்காட்டாக இருப்பதுடன், கோயில் கட்டுமானக் கலைக்கும் ஒரு எடுத்துக்காட்டாக உள்ளது. வடஇந்தியாவிற்கே உரித்தான நாகரா கட்டுமான பாணியைச் சேர்ந்த இக்கோயில், இதுவரை இந்தியத் தொல்லியில் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் பாதுகாக்கப்பட்ட பண்பாட்டுச் சின்னங்களில் ஒன்றாகச் சேர்க்கப்படவில்லை. ஏன் சேர்க்கப்படவில்லை என்ற கேள்வியை இப்போது கேட்பதில் எந்தப் பயனும் இல்லை.

இனியாகிலும், தொல்லியல் துறையின் பண்பாட்டுச் சின்னங்களில் ஒன்றாக கேதார்நாத் கோயில் இடம் பெறச் செய்ய வேண்டும். தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் வரும் பண்பாட்டுச் சின்னங்களைச் சுற்றிலும் 100 மீட்டர் தொலைவுக்குள் வேறு எந்தவிதமான கட்டுமானங்களும் வரக்கூடாது. மிக அரிய நேர்வுகளில் மட்டுமே சில கட்டடங்களைத் தொல்லியல் துறை அனுமதிக்கிறது. சில பண்பாட்டுச் சின்னங்களில் இத்தகைய விதிமுறை மீறப்பட்டு, இது தொடர்பாக வழக்குகள் பல பதின்ஆண்டுகளாக நீடித்து, நீட்டிக்க வைக்கப்பட்டு வருகின்றன. உதாரணம்: திருச்சி மெயின் கார்டு கேட்.

கம்போடியாவில், ஆங்கோர்-வாட் கோயிலை புனர்நிர்மாணம் செய்தவர்கள் இந்திய தொல்லியல் துறையினர்தான். 1986 முதல் 1993-ஆம் ஆண்டுவரை மிகப்பெரும் உழைப்பை நல்கி இத்தலத்தை மீட்டுருவாக்கம் செய்தனர். இவர்களது பணியின் சிறப்பைப் பார்த்த கம்போடிய அரசு, தற்போது சீயம் ரீப் பகுதியில் உள்ள பிரசாத் த புரோம் கோயிலை மீட்டுருவாக்கம் செய்யும் பணியை (சுமார் ரூ.19.5 கோடி) இந்தியத் தொல்லியல் துறை வசம் ஒப்படைத்துள்ளது. நூற்றுக்கும் மேற்பட்ட மரங்கள் வேர்விட்டு, கோயில் கட்டுமானத்தையே சிதைத்துள்ள நிலையில், இதனை சீரமைத்துத் தரும் பணியில் இந்திய தொல்லியல் துறை ஈடுபட்டுள்ளது.

பாகிஸ்தான், பஞ்சாப் மாகாணத்தில் உள்ள கட்டஸ்ராஜ் கோயில் புனர்நிர்மாணத்துக்கு இந்தியத் தொல்லியல் துறையிடம்தான் ஆலோசனை கேட்கப்பட்டது. இலங்கையில், திருக்குடீஸ்வரம் திருக்கோயில், முல்லிகிரிகால ராஜ்ய விகாரம் (புத்தர் கோயில்) புனர்நிர்மாணத்துக்காக அந்நாட்டு அரசு நம் தொல்லியல் துறையைத்தான் அணுகியுள்ளது.

தமிழ்நாட்டில் மாமல்லபுரம் கடல்கோயிலைச் சீரமைத்ததும், கங்கைகொண்டசோழபுரம் கோயிலை புனர்நிர்மாணம் செய்ததும் இந்தியத் தொல்லியல் துறைதான். இந்நிலையில், கேதார்நாத் கோயிலை புனர்நிர்மாணம் செய்யும் பொறுப்பு இந்தியத் தொல்லியல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பது நல்ல முடிவு.

இந்தவேளையில், திருவண்ணாமலை கோயிலை தொல்லியல் துறை ஏற்கும் முடிவுக்குச் சென்ற ஆட்சியில் எத்தகைய தடைகள் ஏற்பட்டன என்பது தெரிந்ததுதான். அத்திட்டமே கைவிடப்பட்டுவிட்டது. இதற்கு காரணம், அந்தக் கோயில் வருவாய் மட்டுமல்ல, அந்தக் கோயிலைச் சுற்றி, 100 மீட்டருக்குள் கடை கட்டி வியாபாரம் செய்யும் அரசியல் சார்புடைய நபர்கள்தான்.

ஒவ்வொரு நிறைநிலாக் காலத்திலும் அண்ணாமலையார் கோயிலை வலம் வரும் பக்தர் கூட்டத்தின் அளவு கூடிக்கொண்டே போகிறது. கோயில் மதில்சுவரோடு கழிப்பறையைச் சேர்த்துக் கட்டியிருக்கும் அவலத்துடன் அந்த நீர் முழுவதும் சுற்றுச்சுவரிலும், மிக அருகில் உள்ள ராஜகோபுரத்தின் அடியிலும் ஊறிக்கொண்டே இருக்கிறது. தொல்லியல் துறையின் கீழ் இருந்திருந்தால், இக்கோயிலுக்கு இந்த அவலம் நேர்ந்திருக்குமா?

சேதம் ஏற்பட்ட பிறகு தொல்லியல் துறையை நாடுவதைக் காட்டிலும் முன்னதாகவே தொல்லியல் துறையிடம் ஒப்படைத்திருந்தால், இன்று கேதார்நாத் கோயிலுக்கு இத்தகைய நிலைமை ஏற்பட்டிருக்காது என்பதை உறுதியாகச் சொல்லலாம். மந்தாகினி நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் எத்தனை கிலோமீட்டர் வேகத்துக்கு வெள்ளம் வந்து மோதும், கற்பாறைகள் வந்து தாக்காமல் இருக்கவும், அவற்றை தொலைவிலேயே தடுத்து நிறுத்தவும் எத்தகைய கட்டுமானங்களை அமைக்க வேண்டும் என்பதையெல்லாம் தொல்லியல் துறை வல்லுநர்கள் முன்யோசனையுடன் செய்திருந்திருப்பார்கள்.

கேதார்நாத் கோயிலை மீட்டுருவாக்கம் செய்யும் பணியை இந்தியத் தொல்லியல் துறையிடம் முழுமையாக ஒப்படைப்பதுடன், தாராளமான நிதியை வழங்குவதோடு, தேவைப்படும் ஆள்பலம், மற்றும் அரசாணைகள் அனைத்தும் உடனடியாக தாராளமாக அளித்தால், அடுத்த ஆண்டிலேயே கேதார்நாத் மீண்டும் யாத்ரிகர்களின் வழிபாட்டுக்குத் திறக்கப்படும் நிலை உருவாகும் என்பது திண்ணம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com