தேவை இரும்புக்கரம்!

சேலத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலப் பொதுச் செயலர் ஆடிட்டர் வி. ரமேஷ் கொலை குறித்து விசாரிக்க மாநில சி.பி.சி.ஐ.டி.யின் கீழ் செயல்படும் சிறப்பு புலனாய்வுக் குழுவை தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

சேலத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலப் பொதுச் செயலர் ஆடிட்டர் வி. ரமேஷ் கொலை குறித்து விசாரிக்க மாநில சி.பி.சி.ஐ.டி.யின் கீழ் செயல்படும் சிறப்பு புலனாய்வுக் குழுவை தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இந்தக் குழு, ஜூலை 1-ஆம் தேதி வேலூரில் கொலை செய்யப்பட்ட இந்து முன்னணி மாநிலச் செயலாளர் வெள்ளையப்பன் சம்பவம் குறித்தும் விசாரணை நடத்தும்.

கடந்த 12 மாதங்களில் பாரதிய ஜனதா கட்சி மற்றும் இந்து அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள் 6 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். 3 பேர் படுகாயம் அடைந்து உயிர் பிழைத்துள்ளனர். இத்தாக்குதல் திட்டமிட்டவை என்றும், இதை மாநில அரசு தடுக்கத் தவறிவிட்டதாகவும் கூறியுள்ள பாஜக, ஜூலை 22-ஆம் தேதி தமிழகம் முழுவதிலும் முழுஅடைப்புப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது.

இந்தக் கொலை சம்பவத்துக்காக சில அமைப்புகள், சில கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ள போதிலும், பாஜக-வின் முழுஅடைப்புப் போராட்டத்துக்கு தமிழகத்தின் அரசியல் எதிர்அணிகளான திமுக, தேமுதிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் யாரும் ஆதரவு தெரிவிக்காமல் இருப்பது வியப்பை ஏற்படுத்துகிறது.

இந்தக் கொலை தொடர்பாக தகவல் தெரிவிக்க காவல்துறை தனித்தொலைபேசிகள் அறிவிக்கப்பட்டிருக்கும் அதேவேளையில், ரமேஷ் கொலை சம்பவத்தைப் பார்த்தவர்கள் என கருதப்படும் சிலர் தந்த விவரங்களால் தயாரிக்கப்பட்ட கணினி படம் காவல்துறையால் வெளியிடப்பட்டுள்ளது. அதேவேளையில், அத்வானி வருகையின்போது பைப் குண்டு வைத்த வழக்கில் தேடப்படும் மூன்று தீவிரவாதிகள் படத்தையும் காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர். இந்தக் கொலையில் எந்தத் துப்பும் கிடைக்காத நிலையில், மக்கள் மனதில் தன்னிச்சையான ஊகங்களை இட்டுநிரப்பும் முயற்சிகள், சமூக அமைதிக்கு ஊறு விளைவிக்கும்.

தமிழகம் முழுவதிலும் பாஜக மற்றும் இந்து அமைப்புகளைச் சேர்ந்த பிரமுகர்கள் 6 பேர் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளதைப் போலவே, மற்ற கட்சிகளிலும் மாவட்ட, ஒன்றிய அளவிலான தலைவர்கள், கவுன்சிலர்கள், கட்சி நிர்வாகிகள் கொலை செய்யப்படும் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. இவற்றைப் பட்டியலிட்டால், அனைத்து அரசியல் கட்சிகளிலும் குறைந்தது 10 பேர் கொலை செய்யப்பட்டிருப்பார்கள் அல்லது படுகாயம் அடைந்திருப்பார்கள்.

இதுபோன்ற தாக்குதல்களில் பெரும்பாலானவை ஜாதி, இன, மத அடிப்படையில் நடத்தப்படுபவை அல்ல. அனைத்து அரசியல் கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள், உள்ளாட்சி பொறுப்புகளில் உள்ளவர்களின் கொலைச் சம்பவங்களில் வெளியான தகவல்களை நுட்பமாகப் பார்க்கும்போது - இவை பெரும்பாலும் தொழில் போட்டியாலும், அதிகாரப் போட்டியாலும் நடத்தப்பட்டிருப்பதை உணர முடியும்.

இன, மத விரோதங்களுக்காக நிகழ்த்தப்பட்டவை ஒன்றிரண்டு என்று சொல்லத்தக்க வகையில்தான் இருக்கின்றன. இதில், சேலம் ஆடிட்டர் ரமேஷ் மற்றும் இந்து முன்னணியின் வெள்ளையப்பன் கொலை செய்யப்பட்டதன் காரணங்கள் குறித்து விசாரித்துச் சொல்ல வேண்டியது காவல்துறைதான். அவர்கள் தாக்கப்பட்டிருப்பது தொழில் போட்டியாலோ, அதிகாரப் போட்டியாலோ அல்ல என்கிற நிலையில், தீவிரமான விசாரணை நடத்தப்பட வேண்டும்.

இன்றைய தேதியில் மிக மோசமான படுகொலைகளுக்கு அடிப்படைக் காரணம் "ரியல் எஸ்டேட்' வர்த்தகமாக இருக்கிறது. "ரியல் எஸ்டேட்' வர்த்தகத்தில் ஈடுபடுவோர் 99% அரசியல்வாதிகளாக இருக்கிறார்கள். இதில் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி, தேசியக் கட்சி, மாநிலக் கட்சி என்று பேதங்கள் கிடையாது.

"பாண்டவர் மீது ஏன் பகை கொள்கிறாய்?' என்று கேட்கும் திருதராட்டினனுக்கு துரியோதன் சொல்கிறான், ".....மற்று எத்தாலும் பகையுறல் இல்லை/ வடிவினில் இல்லை, அளவினில் இல்லை/ உற்ற துன்பத்தினால் பகை உண்டாம்/ ஒர் தொழில் பயில்வார் தமக்குள்ளே' (பாஞ்சாலி சபதம்). இது எல்லா காலத்திலும் எல்லாத் தொழிலுக்கும் பொருந்தும். குறிப்பாக, "ரியல் எஸ்டேட்' வர்த்தகத்தில் மேலதிகமாகப் பொருந்தும். ஒரு நபர் ஓர் உண்மையைச் சொல்வதன் மூலம், அல்லது ஒரு எச்சரிக்கை செய்வதன் மூலமாக தனக்கு ஒரு கோடி ரூபாய் "கமிஷன்' கிடைக்கும் வாய்ப்பு இல்லாமல் ஆக்கிடுவார் என்றால் மிகப்பெரும் பகையையும் கொலை வெறியையும் உண்டாக்குகின்றன.

இதற்கு அடுத்த கட்டமாக, உள்ளாட்சிப் பொறுப்புகளில் உள்ளவர்களால், தாங்கள் சொல்லும் நபருக்கு ஒப்பந்தப்புள்ளிகள் வழங்கப்படாமலிருப்பது, தனது வார்டுக்கு நிதி ஒதுக்காததால் தனக்கு பணி ஒப்பந்தங்களில் "கமிஷன்' தடுக்கப்படுவது அல்லது குறைவது போன்ற பல காரணங்களும் அரசியல் கொலைகளுக்கு ஒரு காரணமாக இருக்கின்றன.

அடுத்ததாக, எந்தெந்த அரசியல்வாதிகள் எப்படியெல்லாம் நிலத்தை ஆக்கிரமித்திருக்கிறார்கள், அல்லது சட்டப்படி குறைந்த விலையில் நிலத்தை அடித்துப்பேசி வாங்கி, இப்போது பல கோடி ரூபாய் சம்பாதித்தார்கள், எப்படி ஊழல் செய்கிறார்கள் என்று வெளிப்படையாகப் பேசுதல், மற்றும் ஊடகங்கள், பத்திரிகைகளுக்குத் தகவல் கொடுத்தல் ஆகியவற்றில் ஈடுபடுவோரை, பாதிக்கப்படும் அரசியல்வாதிகள் விரும்புவதில்லை. முதல் கட்டமாக எச்சரிக்கிறார்கள். பிறகு கொலை செய்யும் அளவுக்குப் போகிறார்கள்.

இந்த வழக்கு விசாரணையை ஆறப்போடாமல் விரைவில் குற்றவாளிகளைக் கைது செய்து, கொலைக்கான காரணங்களை வெளிக்கொணர வேண்டும். மேலும், வெறும் அடிதடியாக இருக்கும்போதே இந்த விவகாரத்தை காவல்துறையின் உளவுத்துறை கண்காணிக்கத் தொடங்கினால், பல கொலைகள் நடக்காது.

நடந்தேறி இருக்கும் கொலைகளுக்குத் தொழில் போட்டி காரணம் என்றாலும், அரசியல் காரணம் என்றாலும், இரண்டுமே ஆபத்தானவை. இரும்புக்கரம் கொண்டு ஆரம்பத்திலேயே அடக்காமல் போனால் பூதாகாரமாக விஸ்வரூபம் எடுத்துவிடும்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com