காத்திருக்கும் எரிமலை!

உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி வி.ஆர். கிருஷ்ணய்யர் உள்ளிட்ட கண்ணியமும், சமூக அக்கறையும் உள்ள பெரியவர்கள் மத்திய அரசுக்கும்...

உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி வி.ஆர். கிருஷ்ணய்யர் உள்ளிட்ட கண்ணியமும், சமூக அக்கறையும் உள்ள பெரியவர்கள் மத்திய அரசுக்கும், மாநில அரசுகளுக்கும், உச்ச நீதிமன்றத்திற்கும் விடுத்திருக்கும் ஒரு முக்கியமான வேண்டுகோள், ஊழல் விவகாரங்களிலும், கர்நாடகத் தேர்தல் விறுவிறுப்பிலும் ஊடகங்களால் அடக்கி வாசிக்கப்பட்டு விட்டது.

இந்தியாவின் ஒட்டுமொத்த கனிம வளங்களும் நமது வனப்பகுதிகளில்தான் காணப்படுகின்றன. இந்த கனிம வளங்களைக் குறிவைத்துப் பல பன்னாட்டு நிறுவனங்களும் சுரங்கங்கள் அமைக்கப் போட்டி போட்டுக்கொண்டு களமிறங்கி இருக்கின்றன. அவர்களுக்கு நிலத்தைக் கையகப்படுத்திக் கொடுக்கவும், வனத்தை அழித்துச் சுரங்கங்கள் அமைக்க உதவவும் மத்திய, மாநில அரசுகளும் தயாராகவே இருக்கின்றன. இதற்கு முட்டுக்கட்டையாக இருப்பவர்கள் அந்தக் காடுகளில் வாழும் ஆதிவாசிக் குடிமக்கள்.

இதே பிரச்னை ஆஸ்திரேலியாவிலும் காணப்படுகிறது. வட ஆஸ்திரேலியாவிலுள்ள ககாடு தேசியப் பூங்காவிற்குள் அமைந்த கூங்கர்ரா பகுதியில் யுரேனியம் அதிக அளவில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கே மூன்று யுரேனிய வயல்கள், அந்த தேசியப் பூங்காவில் அடையாளம் காணப்பட்டன. அங்கே யுரேனியம் வெட்டி எடுப்பதற்கு ஆஸ்திரேலிய அரசு அனுமதி அளிக்க முற்பட்டபோது, அந்த வனப்பகுதியின் பூர்வகுடிகள் (அபோர்ஜின்ஸ்) ஒருங்கிணைந்து யுரேனியச் சுரங்கம் அமைக்கத் தனியாருக்கு அனுமதி அளிப்பதை எதிர்த்தனர். அரசு அவர்களது கோரிக்கையை ஏற்று, அரசுக்குப் பல பில்லியன் டாலர்கள் கிடைக்க இருந்த ஒப்பந்தத்தை ரத்து செய்திருக்கிறது.

இங்கே இந்தியாவில் அதற்கு நேர் எதிரான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஒடிசா மாநிலம் வேதாந்தா கனிமச் சுரங்க வழக்கில் அரசு எடுத்திருக்கும் நயவஞ்சகமான முடிவு அதற்கு ஓர் உதாரணம். இதுவரை கனிமச் சுரங்கங்களுக்காகக் கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் 40 விழுக்காடு ஆதிவாசிகளின் குடியிருப்புகளும், அவர்களுக்குச் சொந்தமான பகுதிகளுமாகும். பல இடங்களில், ஆதிவாசிகள் அடித்து விரட்டப்பட்டு அந்த நிலங்கள் கையகப்படுத்தப்பட்டிருக்கின்றன. வனப்பகுதி உரிமைச் சட்டம் என்பது கண்துடைப்புச் சட்டமாகத் தொடர்கிறது என்பதுதான் எதார்த்த நிலைமை.

அது ஒருபுறம் இருக்க, ஆதிவாசிகள் எப்படியெல்லாம் கொடுமைப்படுத்தப்படுகிறார்கள் என்பது தெரிந்தால், அவர்கள் ஏன் மாவோயிஸ்ட் தீவிரவாதிகளை ஆதரிக்கிறார்கள் என்பது தெரியும். அவர்களுக்கு இழைக்கப்படும் அநீதிக்குத் தீர்வு கேட்டிருக்கிறது வி.ஆர். கிருஷ்ணய்யர் உள்ளிட்ட குழுவின் வேண்டுகோள். சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், ஒடிசா, பிகார், ஆந்திரப் பிரதேசம், மகாராஷ்டிரம், மத்தியப் பிரதேசம், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களின் பகுதிகளை உள்ளடக்கிய மத்திய இந்திய வனப்பகுதியில் வாழும் ஆதிவாசிகளின் நிஜ நிலைமையை அந்த வேண்டுகோள் படம்பிடித்துக் காட்டுகிறது.

சத்தீஸ்கரில் மட்டும் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட ஆதிவாசிகள் கடந்த இரண்டாண்டுகளுக்கும் மேலாக நக்சலைட்டுகள் / மாவோயிஸ்டுகள் என்கிற முத்திரை குத்தப்பட்டு எந்தவித விசாரணையும் இல்லாமல் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். ஜார்க்கண்ட் மாநிலத்தில், இந்த எண்ணிக்கை ஐயாயிரத்திலும் அதிகம். ஏனைய மாநிலங்களிலும் இதுதான் நிலைமை. சிறையில் விசாரணைக் கைதிகளாக யார் யார் இருக்கிறார்கள், எத்தனை பேர் இருக்கிறார்கள் என்கிற புள்ளிவிவரங்களைத் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் மூலம் கூடப் பெற முடியவில்லை. "இதுதானா சட்டம் தமது கடமையைச் செய்யும் லட்சணம்?' என்று கேள்வி எழுப்பியிருக்கிறது அந்த வேண்டுகோள்.

அந்த ஆதிவாசிகளுக்குத் தங்களது அரசியல் சட்ட உரிமைகள் இன்னின்ன என்பதுகூடத் தெரியாது. முதலில், மொழியேகூட ஒரு மிகப்பெரிய தடை. அவர்களுக்கு ஆதிவாசி மொழியைத் தவிர, பரவலாக நாமெல்லாம் பேசும் எந்த மொழியும் தெரியாது. நீதிமன்றங்களிலும் சரி, தங்களுக்காக வாதாட முன்வரும் வழக்குரைஞர்களிடமும் சரி, தங்கள் தரப்பு நியாயங்களைக்கூட அவர்களால் எடுத்துரைக்க முடியாத அவலநிலை. இதைப் பயன்படுத்தி அவர்களை விசாரணைக் கைதிகளாக நிரந்தரமாகச் சிறையில் அடைத்து வைத்திருக்கிறார்கள்.

கைது செய்யப்படும் ஆதிவாசிகள் அருகிலுள்ள சிறையில் அடைக்கப்படாமல் தொலைதூர சிறைச்சாலைகளில் அடைக்கப்படுகிறார்கள். அவர்களது உறவினர்கள்கூடச் சென்று பார்க்க முடியாத, மன தைரியம் கொடுக்க முடியாத நிலை. அதுமட்டுமல்ல, அவர்களுக்கு வாதாட முன்வரும் வழக்குரைஞர்கள் மனித உரிமை ஆர்வலர்கள் என்று கருதாமல், அவர்களைத் தீவிரவாதிகள் என்கிற கண்ணோட்டத்தில் காவல்துறை கண்காணிக்கத் தொடங்கி விடுவதால், வாதாடக்கூட வழக்குரைஞர்கள் தயங்குகிறார்கள்.

காட்டில் வாழ்ந்த கள்ளங்கபடமற்ற ஆதிவாசிகளை நாட்டில் உலவ விட்டாலே தடுமாறுவார்கள். அவர்களை விசாரணையே இல்லாமல் சிறையில் அடைத்துத் துன்புறுத்தினால் என்னதான் செய்வார்கள்?

எத்தனை ஆதிவாசிகள் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள்? அவர்கள் யார், யார்? எந்தெந்த சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள்? அவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் என்னென்ன? எத்தனை நாள்களாக அடைக்கப்பட்டிருக்கிறார்கள்? இதுபோன்ற விவரங்களை மக்கள் மன்றத்தில் வெளிப்படையாக அறிவிக்க வேண்டிய கடமை, ஜனநாயக நாடு, சட்டத்தின் ஆட்சி நடக்கும் நாடு என்று சொல்லிக்கொள்ளும் அரசுக்கு உண்டு.

விசாரணை இல்லாமல் காராகிருகத்தில் கண்ணீருடன் கம்பிகளை எண்ணிக் கொண்டிருக்கும் ஒவ்வோர் ஆதிவாசி இந்தியனின் குடும்பமும் தீவிரவாதக் குடும்பமாகிவிடுகிறது. அதற்குக் காரணம் மாவோயிஸ்டுகள் அல்ல. அவர்களின் மனித உரிமையை மறுக்கும், அடிப்படை வாழ்வுரிமையைப் பறிக்க நினைக்கும் அரசுதான் என்பதை உணர வேண்டும். ஓர் எரிமலை வெடிக்கக் காத்திருக்கிறது!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com