Enable Javscript for better performance
பரவாயில்லை, தெரிந்திருக்கிறதே...- Dinamani

சுடச்சுட

  

  கடந்த திங்கள்கிழமை இந்தியாவின் வெளிநாட்டுத் தூதர்களின் மாநாடு கூட்டப்பட்டது. உலகெங்கிலும் உள்ள நாடுகளில் இந்தியாவின் தூதுவர்களாக செயல்படுபவர்கள் கூடி இந்தியாவின் வெளிவிவகாரக் கொள்கையையும், செயல்பாடுகளையும் விவாதித்தனர். அந்த மாநாட்டைத் தொடங்கி வைத்துப் பேசிய பிரதமர் மன்மோகன் சிங், இந்திய வெளியுறவுக் கொள்கையின் ஐந்து குறிக்கோள்களைப் பட்டியலிட்டார்.

  இந்தியாவின் வளர்ச்சிக்கு உதவக் கூடிய சர்வதேச சூழலை உருவாக்குவது; உலகமய சூழலுக்கு ஏற்ப இந்தியப் பொருளாதாரத்தை மேம்படுத்துவது; வல்லரசு நாடுகளுடனான உறவை பலப்படுத்துவது; அண்டை நாடுகளுடனான, தெற்காசிய நாடுகளுடனான நல்லுறவையும், நட்பையும் மேம்படுத்துவது; இந்தியாவில் உள்நாட்டு சூழலை சர்வதேச இலக்குடன் ஒன்றிணைப்பது - இவைதான் அந்த ஐந்து குறிக்கோள்கள்.

  அவர் குறிப்பிட்டிருக்கும் இந்த குறிக்கோள்களுக்கும் கடந்த ஒன்பது ஆண்டுகள் டாக்டர் மன்மோகன் சிங் தலைமையில் ஆட்சியில் இருக்கும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் செயல்பாடுகளுக்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா என்று யோசித்துப் பார்த்தால், கனவுக்கும் நனவுக்கும் உள்ள இடைவெளி போல இருக்கிறது.

  அமெரிக்காவுக்கும் சோவியத் யூனியனுக்கும் இடையே பனிப்போர் நடந்து கொண்டிருந்த காலகட்டத்தில் அன்றைய இந்தியாவின் பிரதமர் பண்டித ஜவாஹர்லால் நேருவின் அணிசாராக் கொள்கை, இந்தியாவுக்கு வளர் பொருளாதார நாடுகளின் தலைமையைப் பெற்றுத் தந்தது. 1961இல் யுகோஸ்லோவாகியத் தலைநகர் பெல்கிரேடில், இந்தியாவின் பிரதமர் பண்டித நேரு, இந்தோனேஷிய அதிபர் சுகர்னோ, எகிப்து அதிபர் கமால் அப்துல் நாசர், கானா அதிபர் கிவாமே நிக்ரூமா, யுகோஸ்லோவாகிய அதிபர் ஜோசப் டிட்டோ ஆகியோர் கூடி மூன்றாவது உலக நாடுகளின் அமைப்பை உருவாக்க முற்பட்டனர் என்றால், அது அன்றைய இந்திய அரசின் வெளிவிவகாரக் கொள்கைக்குக் கிடைத்த வெற்றி.

  பாகிஸ்தானையும் இலங்கையையும் இந்தியாவின் உயரத்தை அண்ணாந்து பார்க்க வைத்த பெருமை இந்திரா காந்தி அரசின் வெளிவிவகாரக் கொள்கைக்கு இருந்தது. சோவியத் யூனியன் சிதறுண்டு பனிப்போர் முடிவுக்கு வந்த காலகட்டத்தில் இந்தியாவின் பிரதமராக இருந்த பி.வி. நரசிம்ம ராவ், அணிசாரா நாடுகளின் கூட்டமைப்பை வலுவாக கட்டிக் காத்த அதே நேரத்தில் மேற்கத்திய நாடுகளுடனான நட்புறவை பலப்படுத்தும் முயற்சியிலும் இறங்கினார். அவரது வெளிவிவகாரக் கொள்கையின் வெற்றியால்தான், தனிநாடாகப் பிரிந்து செல்லும் நிலையிலிருந்த காஷ்மீரில் தேர்தல் நடத்தப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

  அடல் பிகாரி வாஜ்பாய் அரசின் காலத்தில் இந்திய வெளிவிவகாரக் கொள்கை புதிய பரிமாணத்தை எட்டியது. சீனாவுடனான பேச்சுவார்த்தைக்கு அடித்தளமிட்டு, நீண்டகாலமாகக் கிடப்பில் போடப்பட்டிருந்த எல்லைப் பிரச்னைக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது. பாகிஸ்தானுடனான பேச்சுவார்த்தை முடுக்கிவிடப்பட்டது. சர்வதேச அளவிலும், அணு ஆயுத வல்லரசாக அறிவித்து ராணுவ ரீதியாகவும் இந்தியாவை பலப்படுத்தியது வாஜ்பாயின் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு.

  மன்மோகன் சிங் அரசின் வெளிவிவகாரக் கொள்கையின் சாதனைகளாகப் பல வேதனைகளைத்தான் பட்டியலிட முடிகிறது. பாகிஸ்தானுடனான உறவு முற்றிலுமாக முறிந்துவிட்ட நிலைமை. எல்லையில் அத்துமீறும் பாகிஸ்தானையும் சீனாவையும் தடுக்க வேண்டாம், கண்டிக்கக்கூட பலமில்லாத அணுகுமுறை. இலங்கையில் இனப்படுகொலைக்குத் துணை போனதன் விளைவாக, அந்த அரசின் செயல்பாடுகளை விமர்சிக்கக் கூட முடியாத நிலைமை. நேபாளம், வங்கதேசம், மாலத்தீவு என்று அத்தனை அண்டை நாடுகளுடனும் சுமுகமான உறவு இருக்கிறதா என்றால், கிடையாது.

  கொழும்பில் நடக்க இருக்கும் காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்வதா வேண்டாமா என்று முடிவெடுக்கக் கூட முடியாத நிலையில், வெளிவிவகாரக் கொள்கை தடுமாறுகிறது. பிரதமர் மன்மோகன் சிங்கின் வெளியுறவுக் கொள்கையின் வெற்றி என்று எடுத்துக் கொண்டால் கடந்த ஒன்பது ஆண்டுகளில் ஏறத்தாழ 70 முறை வெளிநாடுகளுக்குச் சென்று, அங்கே எல்லாம் இந்தியா என்றொரு நாடு இருக்கிறது என்பதைப் பதிவு செய்ததுதான்.

  பிரதமர் மன்மோகன் சிங் குறிப்பிட்ட ஐந்து குறிக்கோள்களுமே உன்னதமானவை. கச்சிதமானவை. மிகச் சரியான வெளிவிவாகரக் கண்ணோட்டங்கள். இதில் எந்தவித சந்தேகமும் இல்லை. ஆனால், அதை பிரதமர் மன்மோகன் சிங் கூறுவதுதான் வேடிக்கையாக இருக்கிறது.

  வெளிநாடுகளுக்கு விஜயம் செய்வதுதான் வெளிவிவகாரக் கொள்கை என்று பிரதமர் கருதுகிறார் போலும் என்று தவறாக யாரும் எடை போட்டுவிடக் கூடாது. அவருக்கு, வெளி விவகாரக் கொள்கை பற்றித் தெரிந்துதான் இருக்கிறது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai