கட்டுப்பாடு குறைகிறது!

இந்திய ராணுவம் எண்ணிக்கையில் உலகில் மூன்றாவது இடத்தில் இருக்கிறது. இந்திய ராணுவம் கட்டுக்கோப்பாகவும், முறையாகவும் செயல்பட்டு வருவதால்தான், எத்தனையோ பிரச்னைகளுக்கும், தாக்குதல்களுக்கும், ஊடுருவல்களுக்கும் இடையிலும் நமது எல்லைகள் காப்பாற்றப்படுகின்றன.

இந்திய ராணுவம் எண்ணிக்கையில் உலகில் மூன்றாவது இடத்தில் இருக்கிறது. இந்திய ராணுவம் கட்டுக்கோப்பாகவும், முறையாகவும் செயல்பட்டு வருவதால்தான், எத்தனையோ பிரச்னைகளுக்கும், தாக்குதல்களுக்கும், ஊடுருவல்களுக்கும் இடையிலும் நமது எல்லைகள் காப்பாற்றப்படுகின்றன. அப்படிப்பட்ட இந்திய ராணுவம் பற்றி வெளிவரும் செய்திகளும், ராணுவத்தில் நடைபெற்றதாகக் கூறப்படும் சம்பவங்களும் அச்சம் தருபவையாக இருக்கின்றன. ராணுவத்தில் நடைபெறும் தவறுகள் பொதுமக்கள் பார்வைக்கு வராமல் இருப்பதால் அவை இதுவரை விவாதப் பொருளாகவில்லை.

அதிகாரிகளின் கட்டளையை தங்களது உயிரையும் மதிக்காமல் நிறைவேற்றுவதுதான் ராணுவ வீரர்களுக்குக் கற்றுத்தரப்படும் அடிப்படைப் பாடம். சமீப காலமாக, ராணுவ சிப்பாய்களுக்கும் மேலதிகாரிகளுக்கும் இடையே நடக்கும் மோதல்கள் அதிர்ச்சி அளிக்கின்றன.

கடந்த மாதம் உத்தரப்பிரதேசம் மீரட் நகரில் உள்ள ராணுவ முகாமில் நடந்த விளையாட்டுப் போட்டியின்போது ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளின் விளைவாக, அதிகாரிகளுக்கும் சிப்பாய்களுக்கும் இடையே மோதல் நடந்தேறி இருக்கிறது. சில அதிகாரிகள் சிப்பாய்களால் நையப் புடைக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

பஞ்சாப் மாநிலத்திலுள்ள ராணுவ முகாம் ஒன்றில், கட்டளைக்குக் கீழ்ப்படியாத வீரரை உயர் அதிகாரி கண்டித்ததைத் தொடர்ந்து, அந்த சிப்பாய் அதிகாரியை அடிக்க முற்பட்டிருக்கிறார். இப்போது அவர்மீது ஒழுங்கு நடவடிக்கை தொடரப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு லடாக் பகுதியில் ஏற்பட்ட மோதலில் ஜவான்களின் தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் மேலதிகாரிகள் ஓடி ஒளிய வேண்டிய நிலைமை ஏற்பட்டது.

இதுமட்டுமல்லாமல், மன அழுத்தம் காரணமாக சில சிப்பாய்கள் தற்கொலை செய்து கொள்வதும், ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்வதும், காஷ்மீர், அருணாசலப் பிரதேசம் போன்ற பதற்றம் நிறைந்த பகுதிகளில் அப்பாவிப் பெண்களிடம் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுபவதும் அவ்வப்போது நடைபெறுவதாகத் தெரிகிறது. இவையெல்லாம் ஒழுங்கும் கட்டுப்பாடும் ராணுவத்தில் குறைந்து வருவதன் அறிகுறிகள்.

இந்திய காலாட் படையைப் பொருத்தவரை மிகப்பெரிய சவாலாக இருப்பது, அதிகாரிகள் நிலையான வீரர்கள் போதுமான அளவு இல்லாமல் இருப்பது. இந்திய அரசுப்பணி மற்றும் இந்திய காவல் துறைப் பணியில் சேருவதில் இருக்கும் ஊக்கம் நமது இளைஞர்கள் மத்தியில் ராணுவத்தில் சேர்வதில் இல்லை என்பது ஒரு முக்கியமான காரணம். கடற்படையிலும், விமானப்படையிலும் அதிகாரிகளாகச் சேர முன்வருமளவுக்கு காலாட்படையில் அதிகாரிகளாகச் சேர இளைஞர்கள் ஆர்வம் காட்டுவதில்லை.

ராணுவ அதிகாரிகளுக்கு சமூகத்தில் மரியாதை போதவில்லை என்பதைவிட, கடினமான உழைப்புக்கும், கட்டுப்பாடுகளுக்கும் நமது இளைஞர்கள் தயாராக இல்லை என்பதே இதற்குக் காரணம். வசதி படைத்த பெற்றோர் ஒரு குழந்தையுடன் நிறுத்திக் கொள்வதால், தங்கள் மகனை ஆபத்துடன் வாழ வேண்டிய ராணுவ அதிகாரியாக்க அவர்கள் விரும்புவதில்லை. அரசு அதிகாரிகளுக்கு இணையான சம்பளம் ராணுவத்தில் தரப்படுவதில்லை என்பதும் பலரை சிந்திக்க வைக்கிறது.

பிரிட்டிஷ் காலனிய ராணுவத்திலும், சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு முன்பிருந்த ராணுவத்திலும் அதிகாரிகளுக்கும் சிப்பாய்களுக்கும் இடையே அந்தஸ்து இடைவெளி அதிகமாக இருந்தது. பெரும்பாலான சிப்பாய்கள் அதிகம் படிக்காத, கிராமத்தவர்களாகவும், ராணுவ அதிகாரிகளாக வருபவர்கள் கான்வென்ட் பள்ளிக்கூடங்களிலும் அமராவதி நகர், கபூர்தலா, புராலியா உள்ளிட்ட 26 சைனிக் பள்ளிகளில் படித்தவர்களாகவும் இருந்தனர்.

இப்போது நிலைமை அப்படி இல்லை. சிப்பாயாகச் சேர்பவர்களுக்கும் நன்றாக ஆங்கிலம் தெரியும். தொழில்நுட்ப ரீதியாகவும், சமுதாய அந்தஸ்திலும் அதிகாரிகளைப் போலவே அவர்களும் தகுதி பெற்றவர்களாக இருக்கின்றனர். இந்த நிலையில், முந்தைய தலைமுறையின் அதிகாரி மனப்பான்மையுடன் தாங்கள் ஏவலர்களாக நடத்தப்படுவதை சிப்பாய்கள் ஏற்றுக்கொள்ள மறுக்கின்றனர்.

மாறிவிட்ட சூழலுக்கு ஏற்ப ராணுவத்தின் அணுகுமுறையில் மாற்றங்களை ஏற்படுத்தியாக வேண்டும். கீழ்மட்ட அதிகாரிகளுக்கும் ராணுவ வீரர்களுக்கும் இடையே கட்டுப்பாடும் ஒழுக்கமும் கீழ்ப்படிதலும் வலியுறுத்தப்படும் அதேவேளையில் சுமுகமான நட்புறவுடன் கூடிய செயல்பாடுகளையும் உறுதிப்படுத்த வேண்டும்.

குறைந்தபட்சம் ஆண்டுதோறும் 1,000 அதிகாரிகளையாவது ராணுவத்திற்கு எடுப்பதும், அவர்களுக்கு முறையான பயிற்சி அளிப்பதும் நடந்தாலும்கூட, அடிப்படை கட்டமைப்பை உறுதிப்படுத்த இன்னும் 10 ஆண்டுகள் தேவை.

ராணுவத்தின் மனிதவளப் பிரச்னையில் உடனடி கவனம் செலுத்தாவிட்டால், உலகின் மூன்றாவது பெரிய ராணுவமாக இருப்போமே தவிர, பலம் பொருந்திய ராணுவமாக நாம் இருக்க மாட்டோம்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com