Enable Javscript for better performance
மாட்டார்கள், மாட்டவே மாட்டார்கள்!- Dinamani

சுடச்சுட

  

  பொன் விழாவை கொண்டாடிக் கொண்டிருக்கும் மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐ, அரசியல் சட்டத்துக்கு விரோதமானது என குவாஹாட்டி உயர்நீதிமன்றம் அண்மையில் அளித்த தீர்ப்பு சர்ச்சையை எழுப்பியிருக்கிறது. இந்தத் தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் தாற்காலிகத் தடை விதித்திருந்தாலும்கூட, பிரச்னை முடிவுக்கு வந்துவிட்டதாகச் சொல்ல முடியாது.

  1946-ஆம் ஆண்டின் தில்லி சிறப்பு போலீஸ் படையின் கீழ், 1963-ஆம் ஆண்டு மத்திய உள்துறை அமைச்சகம் பிறப்பித்த நிர்வாக ஆணையின் காரணமாக ஏற்படுத்தப்பட்ட புலனாய்வு அமைப்புதான் சிபிஐ. இதற்கு மத்திய அமைச்சரவையோ அல்லது குடியரசுத் தலைவரோ ஒப்புதல் அளிக்கவில்லை என்பதால், அரசுத் துறை ஊழியர் ஒருவருக்கு எதிராக சிபிஐ தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து குவாஹாட்டி உயர்நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது.

  குவாஹாட்டி உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவு நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஏற்கெனவே சிபிஐ சிறப்பு நீதிமன்றங்கள் விசாரித்து வரும் பல்வேறு ஊழல்கள், முறைகேடுகள் தொடர்பான வழக்குகளில் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் தங்களுக்கு எதிரான விசாரணையை நிறுத்திவைக்க வேண்டும் என்று கோருவதற்கு இந்தத் தீர்ப்பு வழிகோலும் என்பதால், மத்திய அரசு அதிர்ச்சி அடைந்ததில் வியப்பில்லை.

  மத்திய பணியாளர் நலத் துறையின் கீழ் செயல்படும் சிபிஐ அமைப்பைப் பாதுகாக்க, குவாஹாட்டி உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு உடனடியாக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. தனது மனுவை அவசர வழக்காகக் கருதி விசாரிக்க வேண்டும் என்கிற மத்திய அரசின் வேண்டுகோளை ஏற்ற உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சதாசிவம் தலைமையிலான அமர்வு, உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு இடைக்கால தடை விதித்ததால், இந்தச் சர்ச்சைக்கு தாற்காலிகமாக முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

  தனது அரசியல் எதிரிகளைப் பணியவைக்க சிபிஐயை ஒரு கருவியாக மன்மோகன் அரசு பயன்படுத்தியதற்கு பல உதாரணங்கள் உள்ளன. இதேபோல, தனக்குச் சாதகமான அரசியல் பிரமுகர்களைப் பாதுகாக்க, சிபிஐயின் செயல்பாட்டை இந்த அரசு முடக்கிவைத்த சம்பவங்களும் உண்டு.

  அதனால்தான், நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டு முறைகேடு தொடர்பான வழக்கு விசாரணையை தனது நேரடிக் கட்டுப்பாட்டில் உச்சநீதிமன்றம் எடுத்துக் கொண்டுள்ளது. அதோடு, சிபிஐ சுதந்திரமாகவும், வெளிப்படையாகவும் செயல்படுவதற்கு தேவையான சட்டப்பூர்வ நடவடிக்கைகளை எடுக்குமாறும் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் ஏற்கெனவே அறிவுறுத்தியுள்ளது.

  நமது நாட்டில் ஏற்கெனவே மத்திய கண்காணிப்பு ஆணையம், மத்திய தலைமைக் கணக்குத் தணிக்கை அமைப்பு, தேர்தல் ஆணையம், மத்திய தகவல் ஆணையம், மனித உரிமைகள் ஆணையம் உள்ளிட்ட பல அமைப்புகள் மத்திய அரசின் நேரடிக் கட்டுப்பாடின்றி, சுதந்திரமாகவும், தன்னிச்சையாகவும் செயல்பட்டு வருகின்றன. அவற்றுக்கு உள்ளது போன்ற சட்டபூர்வ அதிகாரங்களுடன் சிபிஐயும் செயல்படும் விதத்தில், அரசியல் சட்டத்தில் தேவையான திருத்தங்களை மேற்கொள்வதுதான் அரசு உடனடியாக எடுக்க வேண்டிய நடவடிக்கை.

  ஊழல்களும், முறைகேடுகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அவற்றை விசாரிக்கப் பணிக்கப்படும் சிபிஐ உரிய அதிகாரங்களுடனும், தன்னாட்சி பெற்ற அமைப்பாகவும் செயல்படுவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்கு இதுவே சரியான தருணமாகும். ஆனால், சிபிஐ மீதான நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த மன்மோகன் சிங் அரசு இத்தகைய நடவடிக்கையை எடுக்குமா என்பது சந்தேகமே.

  சிபிஐயின் பொன் விழாவையொட்டி, தில்லியில் நடைபெற்ற சர்வதேச மாநாட்டில் பேசியபோது சிபிஐ-க்கு சட்டப்பூர்வ அந்தஸ்து கிடைக்கவும், அதன் கடந்தகால மற்றும் எதிர்காலப் பணிகளைப் பாதுகாக்கவும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுக்கும் என பிரதமர் மன்மோகன் சிங் உறுதியளித்துள்ளார். அதேவேளையில், மத்திய அரசின் கொள்கை முடிவுகள் தொடர்பான விவகாரங்களில் சிபிஐ தனது வரம்பை உணர்ந்து கவனத்துடன் செயல்பட வேண்டும் என்றும், மத்திய அரசின் கட்டுப்பாட்டில்தான் அந்த அமைப்பு இருக்க வேண்டும் என்றும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

  சிபிஐ தன்னிச்சையாக செயல்படுவதற்கு நாங்கள் எந்தவிதமான நடவடிக்கையும் எடுப்பதாக இல்லை என்பதுதான் இதற்கு அர்த்தம்.

  சிபிஐ பற்றிய வழக்கைப் பொருத்தவரை, உச்சநீதிமன்றம் தடை உத்தரவு வழங்கிவிட்டது. தேர்தல் முடியட்டும் பார்த்துக் கொள்ளலாம் என்று விட்டு விடுவார்கள். அடுத்து அமையும் அரசு என்ன செய்யும்? எதிர்க்கட்சிகளை பயமுறுத்த பயன்படும் சிபிஐ என்கிற வேட்டை நாயை நஷ்டப்பட யாருக்குத்தான் மனது வரும்?

  அரசியல் தலையீடு இல்லாமல் சிபிஐ சுதந்திரமாகச் செயல்பட வழிவகுக்க இது நல்லதொரு வாய்ப்பு. சொல்லி என்ன பயன், நழுவ விடுகிறார்களே...

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai