Enable Javscript for better performance
விருதுக்குப் பெருமை!- Dinamani

சுடச்சுட

  

  விருதுக்குப் பெருமை!

  By dn  |   Published on : 21st November 2013 12:48 AM  |   அ+அ அ-   |    |  

  'பாரத ரத்னா' விருது அறிவிக்கப்பட்ட பிறகுதான் பெருவாரியான இந்தியர்களுக்கு சி.என்.ஆர். ராவ் என்கிற விஞ்ஞானியைப் பற்றியே தெரியும். நடிகர்கள், விளையாட்டு வீரர்கள், தொழிலதிபர்கள், இலக்கியவாதிகள், ஊழல் அரசியல்வாதிகளைப் பற்றி எல்லாம் தெரிந்து வைத்திருக்கும் இந்திய சமுதாயம், நம்மிடையே வாழும் தலைசிறந்த விஞ்ஞானிகள் பற்றி எதுவுமே தெரிந்து கொள்ளாமல் இருப்பதில் வியப்பொன்றுமில்லை. அவர்களும் சரி, அதைப்பற்றிக் கவலைப்படவில்லை.

  தகவல், தொலைத் தொடர்புத் துறையின் அசுர வளர்ச்சி, அடிப்படை விஞ்ஞானமான இயற்பியல், வேதியியல் போன்றவற்றின் முக்கியத்துவத்தையும், அதில் ஆய்வுகள் நடத்தி விஞ்ஞான சாதனைகள் புரியும் ஆர்வத்தையும் மழுங்கடித்து விட்டது என்பதுதான் இன்றைய நிலைமை. தகவல் தொழில்நுட்பத் துறையின் தாற்காலிக சாதனைகளில் இளைய தலைமுறையினரின் நாட்டம் அதிகரித்துவிட்ட சூழலில், நம்மிடையே வாழும் மிகப்பெரிய விஞ்ஞான சாதனையாளருக்கு இந்தியாவின் அதிகபட்ச கெüரவமான "பாரத ரத்னா' வழங்கப்பட்டிருப்பது பாராட்டுக்குரிய ஒன்று.

  1984 முதல் பாரதப் பிரதமரின் அறிவியல் ஆலோசனைக் குழுவின் தலைவராக பணியாற்றி வரும் சி.என்.ஆர். ராவின் ஆரம்பகால வாழ்க்கை, பெங்களூர் இந்திய அறிவியல் பல்கலைக்கழகத்தில் சாதாரண விரிவுரையாளராகத்தான் தொடங்கியது. கான்பூர் இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தில் வேதியியல் துறைத் தலைவர், இந்திய அறிவியல் தொழில்நுட்பக் கழகத்தின் இயக்குநர், ஜவாஹர்லால் நேரு உயர் அறிவியல் ஆய்வு மையத்தின் தலைவர் போன்ற பல முக்கியமான பொறுப்புகளை வகித்த பேராசிரியர் சி.என்.ஆர். ராவின் அதிகபட்ச பங்களிப்பு வேதியியலில் நிறமாலை மற்றும் மூலக்கூறுகளில்தான் இருந்தது.

  திடநிலை வேதியியல் மற்றும் மூலப்பொருள் வேதியியலில் கடந்த 50 ஆண்டுகள் தனது உழைப்பையும், அறிவையும் நேரம் காலம் பார்க்காமல் செலவழித்த இந்த மாபெரும் விஞ்ஞானி, சர்வதேச அளவில் பெயர் பெற்ற ஆய்வு இதழ்களில் 1,500க்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதி இருக்கிறார்.

  60க்கும் மேற்பட்ட கெüரவ முனைவர் பட்டங்களும், 25க்கும் அதிகமான அறிவியல் கழகங்களில் கெüரவ ஆலோசகர் என்கிற மரியாதையும் சி.என்.ஆர். ராவுக்கு உண்டு. இந்திய தேசிய அறிவியல் ஆய்வு மையத்தின் தலைவரான பேராசிரியர் ராவ் தனக்கென விளம்பரம் தேடிக் கொண்டதும் இல்லை, தன்னை முன்னிலைப்படுத்திக் கொண்டதும் இல்லை.

  சி.என்.ஆர். ராவுக்கு "பாரத ரத்னா' வழங்கி கெüரவித்திருக்கும் அரசு, அடிப்படை அறிவியல் வளர்ச்சிக்கும், ஆக்கபூர்வமான ஆராய்ச்சிகளுக்கும் எந்த அளவுக்கு மரியாதை தரப்படுகிறது என்பதை மீள்பார்வை பார்க்க வேண்டிய தருணம் இது. 2003இல் அறிவியல் ஆய்வு மற்றும் வளர்ச்சிக்கு இந்தியாவின் மொத்த உள்நாட்டு வருவாயில் (ஜி.டி.பி) ஒரு விழுக்காட்டுக்கும் குறைவான முதலீட்டை, இரண்டு விழுக்காடாக 2007க்குள் உயர்த்த வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. பத்து ஆண்டுகளுக்குப் பிறகும் 2003இல் இருந்த நிலையில்தான் நாம் இப்போதும் இருக்கிறோம் என்பதுதான் வேதனையான உண்மை.

  அறிவியல் வளர்ச்சிக்கும் ஆராய்ச்சிக்கும், சீனாவின் ஒதுக்கீட்டில் ஐந்தில் ஒரு பங்கும், அமெரிக்காவின் ஒதுக்கீட்டில் இருபதில் ஒரு பங்கும்தான் நாம் செலவிடுகிறோம் என்கிற பரிதாபகரமான உண்மை சுடுகிறது. அமெரிக்கா 398 பில்லியன் டாலர்களும், ஜப்பான் 148 பில்லியன் டாலர்களும், சீனா 102 பில்லியன் டாலர்களும் அறிவியல் வளர்ச்சிக்கும் ஆராய்ச்சிக்கும் செலவிடும்போது, நமது ஒதுக்கீடு வெறும் 24.8 பில்லியன் டாலர்கள் மட்டுமே.

  நிதி ஒதுக்கீட்டால் மட்டும் அறிவியல் வளர்ந்துவிடாது; ஆராய்ச்சியும் அதிகரித்துவிடாது. அதற்கு இளம் விஞ்ஞானிகள் உருவாக வேண்டும். அமெரிக்கா, சீனா, ரஷ்யா, கொரியா, ஐரோப்பிய யூனியன் நாடுகள் போன்றவை தகவல் தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்தும் அதே வேளையில், அடிப்படை அறிவியல் ஆய்வுக்கும் முன்னுரிமை அளிக்கிறார்கள். இந்தியாவில் இளைஞர்களை ஊக்கப்படுத்தி அடிப்படை அறிவியல் கல்வியைத் தேர்ந்தெடுக்க ஊக்குவிக்கும் முயற்சியில் நாம் ஈடுபடாமல் இருக்கிறோம்.

  சி.என்.ஆர். ராவ் போன்ற விஞ்ஞானிகளுக்கு மரியாதையும் கெüரவமும் தரும் அதே வேளையில், அடிப்படை அறிவியலில் ஈடுபட்டிருக்கும் விஞ்ஞானிகளுக்கு போதிய வசதிகளைச் செய்து கொடுப்பதும், தகுந்த நிதி ஒதுக்கீட்டை உறுதி செய்வதும் அவசியம். அறிவியல் ஆய்வில் உலக நாடுகளுடன் போட்டி போடும் நிலைக்கு நாம் உயர வேண்டுமானால், அதுதான் ஒரே வழி.

  kattana sevai