போலித்தனமான புரிதல்!

வேட்பாளர்களின் தேர்தல் செலவுக்கான உச்சவரம்பை அதிகரிக்க மத்தியத் தேர்தல் ஆணையம் திட்டமிடுகிறது.

வேட்பாளர்களின் தேர்தல் செலவுக்கான உச்சவரம்பை அதிகரிக்க மத்தியத் தேர்தல் ஆணையம் திட்டமிடுகிறது. விலைவாசி ஏற்றத்தையும், அதிகரித்து விட்டிருக்கும் தேர்தல் தொடர்பான செலவினங்களையும் கருத்தில் கொண்டு, இப்போது வேட்பாளர்களுக்கு விதிக்கப்படும் வரம்பை 50 விழுக்காடு அதிகரிப்பது என்பதுதான் தேர்தல் ஆணையத்தின் திட்டம்.

தற்போது மக்களவைத் தொகுதிக்கு 40 லட்சம் ரூபாயும், சட்டப்பேரவைத் தொகுதிக்கு 16 லட்சம் ரூபாயும் ஒரு வேட்பாளர் செலவு செய்யலாம் என்று வரம்பு விதிக்கப்பட்டுள்ளது. இதில் வேடிக்கை என்னவென்றால், மாநிலத்தின் அளவு, தொகுதியின் விஸ்தீரணம், வாக்காளர்களின் எண்ணிக்கை என்று எதையுமே கணக்கில் கொள்ளாமல், மக்களவைக்கு இவ்வளவு, சட்டப்பேரவைக்கு இவ்வளவு என்று வரம்பு நிர்ணயிக்கப்பட்டிருப்பதுதான்!

வேட்பாளர்களும் அரசியல் கட்சிகளும் தேர்தல் செலவுக்குத் தேர்தல் ஆணையம் விதிக்கும் வரம்பை விமர்சித்து வந்திருக்கிறார்கள். ஆணையம் குறிப்பிட்டிருக்கும் வரம்பு என்பது நிச்சயமாக ஒரு வேட்பாளர் செலவு செய்யும் பணத்தில் பத்து விழுக்காடுகூடத் தேறாது என்பது வாக்காளர்களுக்கும் தெரியும், வேட்பாளர்களுக்கும் தெரியும், தேர்தல் ஆணையத்திற்கும் தெரியும். கடந்த தேர்தல்களில் போட்டியிட்ட அத்தனை வேட்பாளர்களின் தேர்தல் கணக்குகளையும் எடுத்துப் பார்த்தால், முக்கால்வாசிக்கும் அதிகமானவர்கள் தேர்தல் ஆணையத்தால் விதிக்கப்பட்டிருக்கும் வரம்பைவிட குறைவாகத்தான் செலவு செய்ததாகக் கணக்குத் தாக்கல் செய்திருக்கிறார்கள். ஆணையம் விதித்த வரம்புக்கும் குறைவாகத்தான் எல்லா பெரிய அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களும் செலவு செய்திருக்கிறார்கள் எனும்போது எதற்காக வரம்பை உயர்த்த வேண்டும் என்கிற கேள்வி அல்லவா நியாயமாக எழ வேண்டும்?

முக்கியமான அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் தாக்கல் செய்யும் தேர்தல் செலவினக் கணக்குகள் எல்லாமே போலியானவை, பொய்யானவை. இப்படி ஒரு பொய்க் கணக்கைத் தாக்கல் செய்யச் சொல்வது யாரைத் திருப்திப்படுத்துவதற்காக என்று தெரியவில்லை. இதனால் தேர்தலின் வெளிப்படைத் தன்மை உறுதிப்படுத்தப்படும் என்று யாராவது நம்பினால், அவர்களுக்காகப் பரிதாபப்படத்தான் முடியும்.

தேர்தல் செலவுகள் மற்றும் நன்கொடைகளைப் பொருத்தவரை, அவற்றை முறைப்படுத்தவோ, கண்காணிக்கவோ, சரிபார்க்கவோ தேர்தல் ஆணையத்திற்கு எந்தவித நிர்வாக ரீதியிலான அமைப்பும் கிடையாது. முறையான கணக்கில்லாத கருப்புப் பணம்தான் தேர்தல் செலவினங்களுக்கு அதிகமாக பயன்படுத்தப்படுகிறது என்பது எல்லாருக்கும் தெரிந்த ரகசியம். அப்படி இருக்கும்போது, செலவினங்களுக்கு வரம்பு விதிப்பது என்பது அர்த்தமற்ற செயல்.

அரசியல் கட்சிகள் பெறும் நன்கொடைகள் வெளிப்படைத் தன்மை உடையதாக, தேர்தலுக்குப் பெறும் நிதி இன்னாரிடமிருந்து பெறப்பட்டது என்பது தெரியும்படியானதாக மாறினால் ஒழிய, நிலைமையில் பெரிய மாற்றம் எதுவும் ஏற்பட்டுவிட முடியாது.

வேட்பாளர்கள் வேட்புமனுவுடன் தங்களது சொத்துக் கணக்கைத் தாக்கல் செய்வதும், தங்கள் மீது இத்தனை சிவில், கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பதைக் குறிப்பிடுவதும், அதை மக்களின் பார்வைக்கு வாக்குச்சாவடிகளில் வைப்பதும் மட்டுமே போதாது. தேர்தல் ஆணையம் வேட்பாளர்கள் பற்றிய விவரங்களை வாக்காளர்களுக்குப் பரவலாகத் தெரிவிக்கும் முயற்சியில் ஈடுபடாதவரை, இந்த விவரங்களால் எந்தவித பயனும் இருக்கப் போவதில்லை.

மூதறிஞர் ராஜாஜி குறிப்பிட்டதுபோல, மக்கள் வாக்குச்சாவடிகளுக்குப் போவதற்கு பதிலாக வாக்குச்சாவடிகள் தெருத்தெருவாக மக்களைத் தேடிச் செல்லும் நிலைமை ஏற்பட்டால் மட்டுமே, தேர்தலில் ஓரளவுக்கு முறைகேடுகள் குறைந்து, வேட்பாளர்களின் செலவும் குறையக் கூடும். 1951 மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் வாக்காளர்கள் எண்ணிக்கை சுமார் 2 லட்சம். இப்போது அதுவே 11 லட்சத்திற்கும் மேல் அதிகமாகி இருக்கிறது. இதுதான் எல்லா தொகுதிகளின் நிலைமையும். அப்படி இருக்கும்போது 40 லட்சம் ரூபாயில் தேர்தல் செலவுகளை அடக்குவது என்பது எப்படி சாத்தியம்?

தேர்ந்தெடுக்கப்படும்போதே, பொய்க் கணக்கை தாக்கல் செய்ய நமது தேர்தல் அமைப்பு வற்புறுத்துவதாலோ என்னவோ, நமது மக்கள் பிரதிநிதிகளின் எல்லா செயல்பாடுகளிலும் போலித்தனம் தொற்றிக்கொண்டு விடுகிறது.

தேர்தல் செலவுக்கு வரம்பு விதிப்பதை விட்டுவிட்டு, தேர்தல் பிரசாரத்திலும், நன்கொடை வசூலிப்பதிலும் வெளிப்படைத் தன்மையை உறுதி செய்வதும், வாக்குகளை விலைக்கு வாங்குவது போன்ற தவறுகளுக்குக் கடும் தண்டனையை விதித்து தேர்தல் சீர்திருத்தத்திற்கு வழிகோலுவதும்தான் சரியான நடவடிக்கையாக இருக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com