Enable Javscript for better performance
பட்டினி இல்லா பாரதம்...- Dinamani

சுடச்சுட

  

  அமெரிக்காவில் இருந்து செயல்படும் சர்வதேச உணவுக் கொள்கை ஆராய்ச்சி நிறுவனம் (ஐ.எஃப்.பி.ஆர்.ஐ.) வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் இந்தியாவைப் பொருத்தவரை அதிர்ச்சி அளிப்பவையாக உள்ளன. சர்வதேசப் பட்டினி குறியீட்டில் இந்தியா 63-ஆவது இடத்தில் உள்ளது. அந்த பட்டியலில் மொத்தம் 78 நாடுகள் மட்டுமே இடம் பெற்றுள்ளன.

  மொத்த மக்கள் தொகையில், ஊட்டச்சத்துக் குறைபாடுள்ளவர்கள் விகிதம், ஐந்து வயதுக்குள்பட்ட குழந்தைகளில் உரிய உடல் எடை இல்லாதோர் விகிதம், ஐந்து வயதுக்குள்பட்டவர்களில் இறப்பு விகிதம் ஆகியவற்றைக் கொண்டு இந்தக் குறியீடு நிர்ணயிக்கப்படுகிறது.

  அங்கோலா, வங்கதேசம், கம்போடியா, எத்தியோப்பியா, கானா, மலாவி, நைஜர், ருவாண்டா, தாய்லாந்து, வியத்நாம் ஆகியவை 1990-க்குப் பிறகு தங்கள் நாடுகளில் பட்டினியால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையைப் பெருமளவு குறைத்து மிகப் பெரிய முன்னேற்றத்தை எட்டியுள்ளன.

  மக்கள்தொகையில் சுமார் 14 கோடியும், பரப்பளவில் நம்மைவிட மூன்று மடங்கு பெரியதாகவும் உள்ள சீனா 1990-க்கும்

  2013-க்கும் இடையே பட்டினி விகிதத்தை 58 சதவீதம் குறைத்துள்ளது. 1990-இல் 13 புள்ளிகளைப் பெற்றிருந்த சீனா, 2013-ல் 5.5 புள்ளிகளாக குறைத்துள்ளது. அதே காலகட்டத்தில் இந்தியா 32.6 புள்ளிகளில் இருந்து 21.3 ஆக மட்டுமே குறைத்துள்ளது.

  இந்தியாவில், ஐந்து வயதுக்குள்பட்டவர்களில் உரிய உடல் எடை இல்லாதவர்கள் 40 சதவீதம் பேர் உள்ளனர் என்றும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. இந்த விஷயத்தில் தைமூர் -லெஸ்டே என்ற நாடும் இந்தியாவும்தான் பட்டியலில் முதலிடத்தில் (?) உள்ளன.

  அரசியல் ஸ்திரத்தன்மை இல்லாத பாகிஸ்தான், இந்தப் பட்டியலில் 57-ஆவது இடத்திலும் (1990-இல் 25.9-புள்ளிகளில் இருந்து 2013-இல் 19.3), வங்கதேசம் 58-ஆவது இடத்திலும் (36.7-இல் இருந்து 19.4), நேபாளம் 49-ஆவது இடத்திலும்

  (28-இல் இருந்து 17.3), போரினால் பாதிக்கப்பட்ட இலங்கை 43-ஆவது இடத்திலும் (22.3-இல் இருந்து 15.6) உள்ளன.

  போரினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள ருவாண்டாகூட இந்தியாவைவிட சிறப்பாகச் செயல்பட்டுள்ளது என்பதுதான் விந்தையிலும் விந்தை. இந்தக் குறியீட்டு அளவில் இந்தியா கடந்த பன்னிரெண்டு ஆண்டுகளாக முன்னேற்றம் காணாமல் ஒரே இடத்தில் உள்ளது.

  தமிழகத்தில் துவக்கப்பட்ட பள்ளிக் குழந்தைகளுக்கான மதிய உணவுத் திட்டம், நாடு முழுவதும் விரிவுபடுத்தப்பட்டு சுமார் 12 கோடி பேர் பயன்பெறுவதாகக் கூறப்படுகிறது. உலகிலேயே மிகப் பெரிய அளவிலான திட்டம் இது என்றும் வர்ணிக்கப்படுகிறது.

  இருந்தபோதும், சர்வதேசப் பட்டினிக் குறியீட்டில் இந்தியாவின் நிலையில் மாற்றமில்லை.

  இந்தியாவில் ஐந்து வயதுக்குள்பட்ட 18 சதவீத குழந்தைகளுக்கும், 36 சதவீத இளைஞர்களுக்கும் சரிவிகித உணவு கிடைப்பதில்லை என்பது தேசிய குடும்ப சுகாதார ஆய்வில் தெரிய வந்துள்ளது.

  இந்த புள்ளிவிவரங்களை சுட்டிக்காட்டி, மதிய உணவுத் திட்டத்தில் கூடுதல் கவனம் செலுத்துமாறு மாநில அரசுகளுக்கு மத்திய மனித ஆற்றல் மேம்பாட்டு அமைச்சக கூடுதல் செயலர் அமர்ஜித் சிங் அண்மையில் கடிதம் எழுதியுள்ளார்.

  இந்த விஷயங்கள் சுட்டிக்காட்டுவது என்ன? ஒரு திட்டத்துக்கு அரசு ஒதுக்கும் நிதியில் 15 சதவீதம் மட்டுமே மக்களைச் சென்றடைகிறது என்று முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி குறிப்பிட்டார். பட்டினி குறியீடு விஷயத்தில் அது உண்மைதானோ என்று எண்ணத் தோன்றுகிறது.

  பல பத்தாண்டுகளாக பல்லாயிரம் கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டபோதும் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் இல்லை என்பதையே இந்தப் புள்ளிவிவரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

  1970-களில் இருந்தே வறுமையை ஒழிப்போம் என்ற கோஷம் அரசியல் கட்சிகளால் எழுப்பப்பட்டு வந்துள்ளது. சுமார் 45 ஆண்டுகளாகியும் இப்போதும் அதே கோஷத்தை எழுப்பிக் கொண்டிருக்கிறோமே தவிர, நிலைமையில் பெரிய மாற்றமில்லை.

  இப்போதாவது நமது மத்திய, மாநில அரசுகள் விழித்துக் கொண்டால் மட்டுமே வரும் சில பத்தாண்டுகளிலாவது பட்டினி இல்லா பாரதம் படைக்க முடியும்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai