கைகொட்டிச் சிரிப்பார்கள்!

தில்லி மாநகரம் மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவே நிம்மதிப் பெருமூச்சு விட்டிருக்கிறது. ஒருவழியாக தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தனது போராட்டத்தை முடித்துக்கொண்டு விட்டார்.

தில்லி மாநகரம் மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவே நிம்மதிப் பெருமூச்சு விட்டிருக்கிறது. ஒருவழியாக தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தனது போராட்டத்தை முடித்துக்கொண்டு விட்டார். ஒரு மாநில முதல்வர் இதுபோலத் தெருவில் இறங்கிப் போராடுவதும், தொண்டர்கள் மத்தியில் காவல் துறையினருக்கு எதிராக வீர வசனம் பேசுவதும் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. ஆம் ஆத்மி கட்சியின் வளர்ச்சியை அராஜகத்துக்கு எதிரான அறைகூவலாகக் கருதியவர்களேகூட, அந்தக் கட்சியின் செயல்பாடுகளைப் பார்த்து முகம் சுளித்தனர்.

போராளியாக அநீதிக்கு எதிராகக் குரல் கொடுப்பது, தட்டிக் கேட்பது என்பது வேறு. ஆட்சியில் அமர்ந்து அநீதி நடைபெறாமல் நிர்வாகத்தை நடத்திச் செல்வது என்பது வேறு. எந்தவொரு ஆட்சி முறையிலும் நிர்வாக இயந்திரத்தின் மூலம் மட்டும்தான் திட்டங்களை செயல்படுத்த முடியும், தவறுகளைத் திருத்த முடியும். இதை அரவிந்த் கேஜரிவாலும் நண்பர்களும் புரிந்து கொள்ளாததால் எதிர்கொள்ளும் பிரச்னைகள்தான் இவையெல்லாம்.

போராட்டத்திற்கு கூட்டம் இருந்தால் மட்டும் போதும், ஆனால் கட்சி நடத்துவதற்கு அமைப்புகள் வேண்டும், கட்டுப்பாடு வேண்டும். அதேபோல, நிர்வாகத்தை நடத்துவதற்குப் பொறுமையும், விவேகமும், ராஜதந்திரமும் வேண்டும். அரசியல் என்பது ஜல்லிக்கட்டு அல்ல. நிர்வாகம் என்கிற அடங்காப்பிடாரிக் குதிரையை லகானைப் பிடித்து இழுத்து அடக்கினால் மட்டும் போதாது, ஏறி அமர்ந்து சவாரி செய்யும் திறமையும் வேண்டும்.

சி.என். அண்ணாதுரையின் தலைமையில் உருவான திராவிட முன்னேற்றக் கழகமும் சரி, எம்.ஜி. ராமச்சந்திரனின் தலைமையில் உருவான அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் சரி, இரண்டுமே அரவிந்த் கேஜரிவாலின் ஆம் ஆத்மி கட்சியைப் போல தொண்டர் கூட்டத்தின் பின்புலத்தில் உருவானவைதான். ஆனால் அண்ணாவும், எம்.ஜி.ஆரும் அவரவர் கட்சிகளைக் கட்டுக்கோப்பான அரசியல் அமைப்புகளாக மாற்றத் தெரிந்த தலைவர்களாக இருந்தனர். அதனால் அவர்களால் கட்சியையும் நிலைநிறுத்த முடிந்தது. தேர்ந்தெடுக்கப்பட்டபோது ஆட்சி அதிகாரத்தை தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்து நிர்வாகத்தையும் நடத்த முடிந்தது.

ஆம் ஆத்மி கட்சித் தலைவர்கள், தலைவரும் முதல்வருமான அரவிந்த் கேஜரிவாலைக் கலந்தாலோசிக்காமலே தொலைக்காட்சியில் அவரவர் போக்கில் பேட்டி அளிக்கிறார்கள். தில்லி சட்ட அமைச்சர் சோம்நாத் பாரதி நேரிடையாகப் போய், காவல் துறையினரை அழைத்து இன்னின்னாரைக் கைது செய்ய உத்தரவிடுகிறார். சட்டம் படித்த அந்த அமைச்சருக்கு, பிடிவாரண்டு இல்லாமல் ஒருவரைக் கைது செய்ய முடியாது என்பது கூடவா தெரியாது?

அரவிந்த் கேஜரிவாலின் போராட்டத்திற்குப் பின்னால் ஒரு நியாயம் இருக்கிறது. அது என்னவென்றால், தில்லி முதலமைச்சரின் கட்டுப்பாட்டில் தில்லி காவல்துறை இல்லை என்பது. புதுவையைப் போலவே, தில்லியிலும் முதல்வரை விட துணைநிலை ஆளுநரும், தலைமைச் செயலரும்தான் அதிக அதிகாரம் படைத்தவர்கள். இதை இதற்கு முன்னால் முதல்வர்களாக இருந்த பா.ஜ.க.வின் மதன்லால் குரானா, சாகிப் சிங் வர்மா, சுஷ்மா ஸ்வராஜ் போன்றவர்களும், காங்கிரஸ் முதல்வராக இருந்த ஷீலா தீட்சித்தும் உணர்ந்திருந்தார்கள். அரவிந்த் கேஜரிவால் உணர்ச்சிவசப்பட்டுப் போராடி வருகிறார். அவர்கள் ஆத்திரத்தை அடக்கிக் கொண்டு, அந்த பலவீனத்திற்கிடையிலும் நிர்வாகத்தை நடத்திச் சென்றார்கள். அதுதான் வித்தியாசம்.

தில்லி என்பது தேசத்தின் தலைநகரம். காவல்துறையை மாநில அரசின் முழுக் கட்டுப்பாட்டில் விட்டுவிடுவதில் பலவிதச் சிக்கல்கள் இருக்கின்றன. வெளிநாட்டுத் தூதரகங்கள், மத்திய அரசு நிர்வாகம், குடியரசுத் தலைவர், பிரதமர், அமைச்சர்கள் மற்றும் எம்.பி.க்கள் குடியிருப்பு போன்றவை மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இருப்பது அவசியம். அதனால், அவர்களுடன் இணைந்து செயல்படுவதுதான் புத்திசாலித் தனம்.

1969இல் மேற்கு வங்காளத்தில் அஜாய்குமார் முகர்ஜி என்றொரு முதல்வர் இருந்தார். பங்களா காங்கிரஸ் கட்சித் தலைவரான அந்த முதல்வர், அவரது துணை முதல்வரும், உள்துறை அமைச்சரும், மார்க்சிஸ்ட் தலைவருமான ஜோதிபாசு தன்னை செயல்பட விடுவதில்லை என்று கூறி மூன்று நாள்கள் இதே போல தர்னா நடத்தினார். இப்போது 45 ஆண்டுகளுக்குப் பிறகு இன்னொரு முதல்வர் தெருவில் இறங்கிப் போராட முற்பட்டிருக்கிறார். இவையெல்லாம் இயலாமையின் வெளிப்பாடுகள்.

முதல்வர் அரவிந்த் கேஜரிவால் துடைப்பத்தையே கையில் தூக்கிக் கொண்டு அலையக் கூடாது. அதைத் தொண்டர்களிடம் கொடுத்துவிட்டு, சமையல் வேலையைப் பார்க்க வேண்டும். மிகப்பெரிய எதிர்பார்ப்பை மக்கள் மன்றத்தில் உயர்த்தி இருக்கும் ஆம் ஆத்மி கட்சி, ஏளனத்துக்குரியதாகிவிடக் கூடாது. அதன் வீழ்ச்சியைப் பார்த்து கைகொட்டிச் சிரிக்கக் காத்திருக்கின்றன ஊழலில் மலிந்த ஏனைய அரசியல் கட்சிகள்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com