கவலைப்பட்டாக வேண்டும்!

நிலப்பரப்பு என்று எடுத்துக் கொண்டால், 3,287,263 சதுர கி.மீ. விஸ்தீரணத்துடன் உலகின் ஏழாவது பெரிய நாடு இந்தியா. உலகத்தின் மொத்த நிலப்பரப்பில் 2.4% என்பதுடன், உலக மக்கள் தொகையில் 16.7% பேர் வாழும் பிரதேசம் இது.

நிலப்பரப்பு என்று எடுத்துக் கொண்டால், 3,287,263 சதுர கி.மீ. விஸ்தீரணத்துடன் உலகின் ஏழாவது பெரிய நாடு இந்தியா. உலகத்தின் மொத்த நிலப்பரப்பில் 2.4% என்பதுடன், உலக மக்கள் தொகையில் 16.7% பேர் வாழும் பிரதேசம் இது. ஏறத்தாழ 120 கோடி மக்கள் தொகையுடன் அடுத்த 15 ஆண்டுகளில் சீனாவை முந்திக் கொண்டு உலகின் அதிக மக்கள்தொகை உள்ள நாடாக நம்நாடு மாறக்கூடும்.

மத்திய வேளாண் அமைச்சகத்தின் சமீபத்திய அறிக்கை ஒன்றின்படி, 2007-08 இருந்து 2010-11 வரையிலான நான்கு ஆண்டுகளில் மட்டும் விவசாய சாகுபடிக்கான நிலப்பரப்பு 7,90,000 ஹெக்டேர் குறைந்திருக்கிறது. இதற்குப் பல காரணங்கள் கூறப்பட்டாலும், மிக முக்கியமான காரணங்கள் மூன்றுதான். முதலாவது, விவசாய நிலங்கள் வீட்டு மனைகளாகவும், சாலைகளாகவும், தொழிற்சாலைகளாகவும் மாற்றப்படுவது. இரண்டாவது காரணம், பாசன வசதி அல்லது பாசனத்திற்கான மின்சார வசதி இல்லாமல் இருப்பது; மூன்றாவது, விவசாயத் தொழிலாளர்கள் குறைந்து விட்டிருப்பது.

2007ஆம் ஆண்டில் தேசிய மறுவாழ்வு மற்றும் மறு குடியமர்த்தல் கொள்கை மத்திய அரசால் அறிவிக்கப்பட்டது. இதன்படி மத்திய வேளாண் அமைச்சகம் குறைந்து வரும் வேளாண் நிலப்பரப்பைத் தடுப்பதற்குப் பல வழிமுறைகளை சுட்டிக்காட்டியது. விவசாயம் என்பது மாநிலங்களின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள உரிமை என்பதால், மத்திய அமைச்சு வழிகாட்டத்தான் முடியுமே தவிர, மாநிலங்கள்தான் அதை செயல்படுத்தியாக வேண்டும்.

மக்களவையில் எழுப்பப்பட்ட ஒரு கேள்விக்கு பதிலளிக்கும்போது, விவசாய நிலப்பரப்பை அதிகரிக்க ஐந்து மாநிலங்கள் மட்டும்தான் போதிய நடவடிக்கைகளை எடுத்திருப்பதாகவும், அஸ்ஸாம், கோவா, சிக்கிம் ஆகிய மூன்று மாநிலங்களும் தங்களது விவசாய நிலப்பரப்பு சுருங்கிவிடாமல் பார்த்துக் கொண்டதாகவும் அமைச்சர் தெரிவித்தார். மணிப்பூர், மிஜோரம், ஜம்மு காஷ்மீர், அருணாசலப் பிரதேசம் ஆகியவை தவிர, விவசாய நிலப்பரப்பை அதிகரித்திருக்கும் ஒரே ஒரு மாநிலம் குஜராத் மட்டுமே. மிக அதிகமாக விவசாய நிலப்பரப்பு குறைந்திருக்கும் மாநிலம் ஹரியாணா. ரியல் எஸ்டேட் வளர்ச்சியால் பாசன வசதியுடன் கூடிய ஏறத்தாழ 65,000 ஹெக்டேர் மூன்று சாகுபடி விளைநிலங்கள் ஹரியாணாவில் குடியிருப்புகளாக மாறிவிட்டிருக்கின்றன என்கிறது அரசின் அறிக்கை.

முடிந்தவரை விளைநிலங்கள் வேறு உபயோகங்களுக்காக மாற்றப்படுவது தடுக்கப்பட வேண்டும்; குறிப்பாக, பலதரப்பட்ட சாகுபடிகளையும் மேற்கொள்ளத்தக்க விதத்தில் பாசன வசதியுடன் கூடிய விளைநிலங்களின் பயன்பாடு மாற்றப்படக்கூடாது; பாசன வசதியுடன் கூடிய விளைநிலங்களை அரசேகூடத் தனது சொந்த பயன்பாட்டுக்கு எடுத்துக்கொள்வது தவிர்க்கப்பட வேண்டும் என்கிறது மத்திய வேளாண் அமைச்சகத்தின் வழிகாட்டுதல். யார் கேட்கிறார்கள்? கடந்த நான்கு ஆண்டுகளில் 4,06,000 ஹெக்டேர் விவசாய நிலம் ரியல் எஸ்டேட்களாகவும், சாலைகளாகவும் மாற்றப்பட்டிருக்கிறது. 3,84,000 ஹெக்டேர் விவசாயம் செய்யப்படாமல் தரிசாக விடப்பட்டிருக்கிறது. அவை விரைவிலேயே ரியல் எஸ்டேட்டாக மாற்றப்படக்கூடும்.

தமிழகத்தை எடுத்துக்கொண்டால், நெல் சாகுபடிக்கான விவசாய பரப்பளவு, 20,60,000 (2001-02) ஹெக்டேரிலிருந்து, 19,04,000 (2011-12) ஹெக்டேராகக் குறைந்து விட்டிருக்கிறது. தமிழக அரசின் பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறை வெளியிட்டிருக்கும் புள்ளிவிவரப்படி சோளம் சாகுபடிப் பரப்பளவு 3,17,000 ஹெக்டேரிலிருந்து 1,98,000 ஹெக்டேராகவும், கம்பு 1,25,000 ஹெக்டேரிலிருந்து வெறும் 47,000 ஹெக்டேராகவும், கேழ்வரகு 1,25,000 ஹெக்டேரிலிருந்து 63,000 ஹெக்டேராகவும் 2001-02லிருந்து 2011-12 வரையிலான பத்தாண்டுகளில் குறைந்திருக்கிறது. இது தவிர, சிறு தானியங்கள் பயிரிடப்படும் மொத்த சாகுபடிப் பரப்பு, மேலே குறிப்பிட்ட பத்து ஆண்டுகளில் 27,66,000 ஹெக்டேரிலிருந்து 25,42,000 ஹெக்டேராகக் குறைந்துள்ளது.

பயிர் சாகுபடி செய்யும் நிலப்பரப்பு குறைந்து விட்டிருப்பதால் உணவு உற்பத்தி கணிசமாகக் குறைந்து விட்டதா என்றால், இப்போதைக்கு இல்லை. சொல்லப்போனால் உணவு தானிய உற்பத்தி 230.8 மில்லியன் டன்னிலிருந்து (2007-08), 255.4 மில்லியன் டன்னாக 2012-13இல் அதிகரித்திருக்கிறது. இதற்குக் காரணம், அளவுக்கு அதிகமாக கையாளப்படும் ரசாயன உரங்களும், நவீன விதைகளும். இப்படியே போனால், மண் முற்றிலுமாக வீணாகி, எந்தவித சாகுபடிக்கும் பயனில்லாத தரிசு பூமியாகிவிடுமே, அதைப் பற்றிக் கவலைப்பட வேண்டாமா?

ஏற்கெனவே, இந்திய நிலப்பரப்பில் 22% பாசன வசதியே இல்லாத தரிசு நிலம். இந்த நிலையில் பாசன வசதியுள்ள விவசாய நிலங்களையும் சாலைகளாகவும், தொழிற்சாலைகளாகவும், குடியிருப்புகளாகவும் மாற்றிவிட்டால், அடுத்த வேளை உணவுக்கு நாம் கப்பலை எதிர்நோக்கிக் காத்திருக்கும் நிலைமை ஏற்பட்டுவிடக் கூடும்.

அதனால்... நாம் கவலைப்பட்டாகத்தான் வேண்டும்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com