வாளாவிருந்தால் எப்படி?

ஏறத்தாழ ஆயிரத்திற்கும் மேற்பட்ட அப்பாவிகள் குண்டு வீச்சில் இறந்திருக்கிறார்கள். படுகாயம் அடைந்தவர்களின் எண்ணிக்கையோ பல மடங்கு அதிகம்.

ஏறத்தாழ ஆயிரத்திற்கும் மேற்பட்ட அப்பாவிகள் குண்டு வீச்சில் இறந்திருக்கிறார்கள். படுகாயம் அடைந்தவர்களின் எண்ணிக்கையோ பல மடங்கு அதிகம். தாக்குதல் தாற்காலிகமாக நிறுத்தப்பட்டிருக்கிறது என்றாலும், அமைதி திரும்புவதற்கான அறிகுறியே காணப்படவில்லை. இதை உலகமே வேதனையுடனும் செய்வதறியாமலும் கண் கலங்கிப் பார்த்துக் கொண்டிருக்க, இந்திய வெளி

யுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் மேற்கு ஆசியப் பிரச்னையில் இந்தியாவின் முந்தைய நிலைப்பாடு தொடரும் என்று சர்வ சாதாரணமாக மக்களவையில் தெரிவித்துத் தனது கடமையை முடித்துக் கொண்டு விட்டிருக்கிறார்.

மேற்கு ஆசியப் பிரச்னை என்பது இரண்டாம் உலகப் போரின் முடிவில் ஏற்பட்ட முரண். ஹிட்லரின் நாசிப் படைகளால் வேட்டையாடப்பட்டு, தங்களுக்கு என்று நாடு எதுவும் இல்லாமல் இருந்த யூதர்களுக்கு, விவிலியத்தின் பழைய ஏற்பாட்டை அடிப்படையாகக் கொண்டு, ஜெருசலேமைத் தலைநகராகக் கொண்டு இஸ்ரேல் என்கிற நாட்டை அமெரிக்கா, ரஷியா, பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகள் உருவாக்க முற்பட்டதே ஒரு சரித்திர மோசடி. எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு முன்பு இருந்ததாகக் கூறப்படும் ஒரு தேசத்தை, இப்போது அந்தப் பகுதியில் வசிப்பவர்களை அகற்றிவிட்டு

உருவாக்க முயல்வதும், உலக அளவில் தேசமில்லாமல் வாழுகின்ற யூதர்களுக்கு ஒரு தாயகம் அமைத்துக் கொடுக்க முற்படுவதும் அபத்தம் என்று தெரிந்தும், வல்லரசுகளின் வல்லமையால் "இஸ்ரேல்' உருவானது. யூதர்கள் அங்கே குடியேற்றப்பட்டனர்.

ஏறத்தாழ 70 ஆண்டுகள் ஆகப் போகின்றன. தங்களுக்கு என்று ஒரு நாடு கிடைத்துவிட்டது என்று திருப்தியடையாமல், பாலஸ்தீனியர்களால் வருங்காலத்தில் ஆபத்து ஏற்பட்டு, கிடைத்த நாடு பறிபோய்விடுமோ என்கிற பயத்தில் செயல்பட்டு வருகிறது

இஸ்ரேல். புதிதாக உருவாக்கப்பட்ட இஸ்ரேலின் அசுர வளர்ச்சியையும், தாயகம் கிடைத்த பெருமிதத்தில் அதை வல்லரசாக்க உழைத்த யூதர்களையும் பாராட்ட வேண்டும்தான். ஆனால், அதே நேரத்தில், தங்கள் தாயகத்தை விட்டுக் கொடுத்தவர்களின் மனக்கொதிப்பைப் புரிந்து கொண்டு செயல்படாமல், அப்பாவிப் பாலஸ்தீனியர்களைக் கொன்று குவிப்பதை எப்படிப் பாராட்டுவது?

இப்போதைய பிரச்னையின் ஆரம்பம் அசட்டுத்தனமானது. மூன்று இஸ்ரேல் இளைஞர்கள் ஏதோ ஒரு பாலஸ்தீனியத் தீவிரவாதக் குழுவால் கடத்திச் செல்லப்பட்டுக் கொல்லப்படுகிறார்கள். "ஹமாஸ்' தீவிரவாதிகள்தான் இந்தச் செயலுக்குக் காரணமாக இருப்பார்கள் என்கிற சந்தேகத்தில் 300}க்கும் அதிகமான இளைஞர்கள் விசாரிக்கப்படுகிறார்கள்.

இது நடந்து மூன்று வாரங்கள் கடந்துவிட்டன. ஹமாஸ் தீவிரவாதிகள் இஸ்ரேலின் எல்லைக்குள் நூற்றுக்கும் அதிகமான ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்துகிறார்கள். ஜூலை 8-ஆம் தேதி, இஸ்ரேல் திருப்பித் தாக்கத் தொடங்குகிறது. 500-க்கும் மேற்பட்ட ஹமாஸ் ஏவுகணைத் தாக்குதலில் ஒரு இஸ்ரேலியர்கூட மரணமடையவில்லை. ஆனால், இஸ்ரேலின் தாக்குதலில் ஆயிரக்கணக்கானோர் இறந்திருக்கிறார்கள்.

பாலஸ்தீனியத்திலுள்ள தீவிரவாதிகளின் மறைவிடங்களை அழிப்பது மட்டுமல்ல இஸ்ரேலின் நோக்கம். இஸ்ரேலிய மக்களவையான "நெஸ்ùஸ' உறுப்பினர் ஆயிலெட் ஷாகேத் கூறுவதுபோல, ஆண், பெண், குழந்தைகள் என்று ஒருவர்விடாமல் எல்லா பாலஸ்தீனியர்களும் அழிக்கப்படும் வரை இந்த யுத்தம் தொடரும் என்பதுதான் திட்டம்.

பாலஸ்தீனியர்களுக்கு ஒதுக்கப்பட்ட பல இடங்களை இஸ்ரேல் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது. அங்கே யூதர்களைக் குடியேற்றி இருக்கிறது. கடந்த ஜனவரி 2014-இல் மட்டும் 1,400 புதிய குடியிருப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. தாங்கள் தணிந்து போனால் பாலஸ்தீனியர்கள் தங்களை விரட்டி அடித்துத் தங்களுக்குக் கிடைத்திருக்கும் இஸ்ரேல் என்கிற தாயகத்தை இழந்துவிடுவோம் என்கிற யூத மக்களின் பயம்தான் இதற்கெல்லாம் அடிப்படைக் காரணம்.

இந்தியாவுக்கும் இஸ்ரேலுக்குமான நெருக்கம், அதிலும் குறிப்பாக மன்மோகன் சிங் பிரதமரான பிறகு ஏற்பட்ட நெருக்கம், அனைவருக்குமே தெரியும். பாலஸ்தீனியர்களின் நியாயமான கோரிக்கைகளை நீண்ட காலம் உலக அரங்கில் எதிரோலித்துக் கொண்டிருந்த நாடும் இந்தியாதான். இந்த சூழ்நிலையில் இந்தியா, தனது இரண்டு நண்பர்களுக்கு இடையில் நடக்கும் சச்சரவை வேடிக்கை பார்ப்பது சரியான அணுகுமுறை அல்ல.

இந்தியாவின் பொருளாதாரம் மேற்கு ஆசிய கச்சா எண்ணெயில்தான் அடங்கி இருக்கிறது. இஸ்ரேல் - பாலஸ்தீனிய சர்ச்சையில், சுமுகமான பேச்சுவார்த்தைகளுக்கு வழிகோல வேண்டிய கடமை இந்தியாவுக்கு உண்டு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com