Enable Javscript for better performance
தினமணி நடத்தும் இலக்கியத் திருவிழா: ஜூன் 21, 22 (சனி, ஞாயிறு) 2014- Dinamani

சுடச்சுட

    

    தினமணி நடத்தும் இலக்கியத் திருவிழா: ஜூன் 21, 22 (சனி, ஞாயிறு) 2014

    By dn  |   Published on : 19th June 2014 02:04 PM  |   அ+அ அ-   |    |  

    dinamani

    சென்னைப் பல்கலைக் கழக நூற்றாண்டு விழா அரங்கம், சென்னை - 600 005.

     

    தமிழ் இலக்கியத் திருவிழாவுக்கு இன்னும் இரண்டு நாள்களே இருக்கும் நிலையில், நூற்றுக்கணக்கான தொலைபேசி விசாரிப்புகள், கடிதங்கள். "இந்தவாரம்' பகுதியிலும், சிறப்புத் தலையங்கத்திலும் விளக்கமாகவே எடுத்துக் கூறிய பிறகும் பலருக்கும் பல்வேறு சந்தேகங்கள், கேள்விகள்.

    தமிழார்வலர்களின், வாசகர்களின் ஐயப்பாடுகளைத் தீர்ப்பதற்காகவே இரண்டு பேரை முழுநேரமாக ஒதுக்கியும்கூட, சந்தேகங்கள் தீர்ந்தபாடில்லை. தொடர்பு கொண்டு பேசாத பலருக்கும்கூட இதே சந்தேகம் எழக்கூடும் என்பதால், அதிமேலாக எழுப்பப்படும் கேள்விகளுக்கு விளக்கமளிக்க முற்பட்டிருக்கிறோம்.

    சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கம் என்பது மெரீனா கடற்கரையை ஒட்டிய காமராஜர் சாலையில் உள்ள சென்னைப் பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்திருக்கிறது. மூவாயிரத்துக்கும் அதிகமானவர்கள் அமரும் வசதியுடன் கூடிய இந்த அரங்கம்தான் சென்னையிலேயே பெரிய அரங்கம். சென்னைப் பல்கலைக்கழகத்திற்கு பஸ்ஸிலும் வரலாம், மின்சார ரயிலிலும் வரலாம், ஆட்டோ, டாக்சி என்று எதில் வேண்டுமானாலும் வந்தடையலாம்.

    இந்தியக் குடியரசின் மேனாள் தலைவர் டாக்டர் அப்துல் கலாம் தொடங்கி வைப்பதால், காலை 9 மணிக்குத் தங்களது பெயரைப் பதிவு செய்து அடையாள அட்டையைப் பெற்றுக் கொண்டு அரங்கத்தில் வந்து அமர்ந்துவிட வேண்டும். நுழைவுக் கட்டணம், முன்பதிவு, முன்கூட்டிய இருக்கை ஒதுக்கீடு என்பன எதுவும் கிடையாது. இலக்கிய அமைப்புகள் கடிதம் மூலம், அல்லது சுயவிவரக் குறிப்பின் மூலம் தங்களை அடையாளம் காட்டினால், அவர்களுக்கென்று சில இருக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

    மாணவர்களுக்கு, இந்த விழாவில் பங்கேற்றதன் அங்கீகாரமாக இரண்டாம் நாள் நிகழ்ச்சி முடிந்ததும் சான்றிதழ் வழங்கப்படும். இதில் கலந்துகொள்ளும் இலக்கிய அமைப்புகளுக்கும் அந்த அங்கீகாரம் தரப்படுகிறது.

    இரண்டு நாள்கள், எட்டு அமர்வுகள், அரங்கத்திலேயே இருந்தாக வேண்டும் என்பதில்லை. அவரவர் விரும்பிய அமர்வில் கலந்துகொள்ளவோ, வெளியில் செல்லவோ எந்தவொரு தடையும் இல்லை. ஆனால், தாங்கள் அமர்ந்த இடத்திலேயே மீண்டும் அமர முடியாது என்பதையும் தெரிவித்து விடுகிறோம்.

    தொடக்க விழா அன்று முதல் அமர்வு 12 மணிக்குத் தொடங்குகிறது. இரண்டாவது நாள் காலை 10 மணிக்குத் தொடங்குகிறது. இரவு 9 மணி வரை நிகழ்ச்சிகள் நடைபெற இருக்கின்றன.

    ஒவ்வொரு அமர்வுக்குப் பிறகும் ஓர் அரசியல் தலைவர் இம்மியும் அரசியல் கலப்பின்றி அரை மணி நேரம் இலக்கிய உரையாற்றுவார். விழா அமைப்பாளர்களைத் தவிர வேறு யாரும் அறிஞர்கள், தலைவர்களுக்கு மேடையில் ஏறி சிறப்பு செய்வதை அனுமதிக்க இயலாது.

    தங்கும் வசதி, உணவு வசதி ஆகியவை செய்து தருவது இயலாத ஒன்று. சிறப்புத் தலையங்கத்தில் குறிப்பிட்டிருப்பதுபோல, இது அரசு நடத்தும் மாநாடல்ல, "தினமணி' நாளிதழ் நடத்தும் இலக்கியத் திருவிழா. சென்னைப் பல்கலைக்கழக வளாகத்திலேயே தனியார் உணவு விடுதிக்கு ஏற்பாடு செய்யப்படுகிறது. கட்டணம் செலுத்தி அங்கே உணவருந்திக் கொள்ளலாம். பல்கலைக்கழகத்துக்கு வெளியே அருகிலேயே பல உணவு விடுதிகளும் உள்ளன. அவரவர் சொந்தச் செலவில்தான் தங்குமிட வசதியையும், உணவுத் தேவையையும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

    கோடைக் காலமாயிற்றே, தவித்த வாய்க்கு நிச்சயம் தண்ணீர் தருவோம். இலக்கிய தாகத்துடன் வருபவர்களின் தண்ணீர் தாகத்தை நிச்சயமாகத் தீர்த்து வைப்போம், கவலை வேண்டாம்.

    சிறு பத்திரிகை நடத்துபவர்கள் தயவு செய்து "பப்பாசி' புத்தக வெளியீட்டாளர்கள் சங்கத்தை அணுகி, அவர்களின் உதவியை நாடவும். சென்னைப் பல்கலைக்கழகத்துடன் இணைந்து நடத்தும் விழாவில், சிறு பத்திரிகைகளின் விற்பனைக்கு இந்த முறை இடமளிக்க இயலாமைக்கு வருந்துகிறோம். அடுத்த ஆண்டுத் திருவிழாவில் அதற்கான ஏற்பாட்டை செய்ய முயற்சிக்கிறோம். துண்டுப் பிரசுரங்கள், வேண்டாமே...

    சென்னை பெருநகரக் காவல்துறையும், சென்னை மாநகராட்சியும் மெரீனா கடற்கரையை ஒட்டிய பகுதிகளில், துண்டுப் பிரசுரம் விநியோகிப்போர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கக் கூடும் என்பதை அறிவுறுத்துகிறோம்.

    சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நடக்கும் விழா என்பதால், பல்கலைக்கழக வளாகத்திலும் மெரீனா கடற்கரைச் சாலையிலும் வாகனங்களை நிறுத்த நிறையவே இடமுண்டு.

    இலக்கியத் திருவிழா அமர்வுகளில் கலந்து கொண்டு அறிஞர்கள் முன்வைக்கும் பதிவுகள் "வேர்களைத் தேடி' என்ற தலைப்பில் புத்தகமாகத் தொகுக்கப்படுகிறது. இரண்டு நாள் அமர்வுகளும் தினமணி.காம் இணையதளத்தில் நேரடியாக ஒளிபரப்பப்படுகின்றன. அதுமட்டுமன்றி, தொலைக்காட்சிச் சேனல் மூலமாகவும் அமர்வு நிகழ்ச்சிகள் தொடராக ஒளிபரப்பும் முயற்சியும் நடைபெற்று வருகிறது.

    அனைவரும் வரலாம்; அழைப்பிதழ், முன்பதிவு போன்றவை தேவையில்லை. கட்டணமும் கிடையாது.

    "இது மாநாடா, திருவிழாவா? திருவிழா என்று கூறிவிட்டு அமர்வுகளாக இருக்கின்றனவே, ஏன்?' என்கிற கேள்விக்கு ஏற்கெனவே விளக்கம் அளித்திருக்கிறோம். அதை மறுபதிவு செய்கிறோம்- ""ஆக்கபூர்வமான மொழி வளர்ச்சிக்கான விவாதங்களை மையப்படுத்தி, தமிழ் உணர்வாளர்களையும், வாசக அன்பர்களையும், அறிஞர்களையும் ஓரிடத்தில் ஒருங்கிணைக்கும் முயற்சி இது!''

    ஊர் கூடித் தேர் இழுப்பதுபோல, தமிழை நேசிக்கும் அன்பர்களும், அமைப்புகளும், படைப்பாளிகளும், அறிஞர்களும் ஒன்றுகூடித் தமிழுக்கு விழா எடுத்து மகிழ்வோம், வாருங்கள்... தமிழால் இணைவோம்! தமிழுக்காக இணைவோம்!!

     

    இப்படிக்கு அன்பன்,

     

    ஆசிரியர் கே. வைத்தியநாதன்

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    kattana sevai
    flipboard facebook twitter whatsapp