Enable Javscript for better performance
\\\"ஷாக்\\\' அடிக்கும் உண்மை!- Dinamani

சுடச்சுட

  

  தமிழகம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்னையான மின் பற்றாக்குறையைப் பொருத்தவரை நமது அரசியல் கட்சிகள் அனைத்துமே பொறுப்பற்ற முறையில்தான் நடந்து கொள்கின்றன என்பதைச் சுட்டிக் காட்டியாக வேண்டும். ஒட்டுமொத்த தமிழகத்தையுமே பாதிக்கும் மின்பற்றாக்குறையை உணர்ந்து செயல்பட வேண்டிய அரசியல் கட்சிகள், மின்பற்றாக்குறையைத் தேர்தல் குற்றச்சாட்டாக முன்வைத்து அரசியல் ஆதாயம் தேட முற்படும் அரசியல் கட்சிகள் எந்த அளவுக்கு மக்களை முட்டாள்களாகக் கருதுகின்றன என்பதை நாம் உணர மறுக்கிறோம்.

  தினந்தோறும் வெவ்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கும் பொதுக்கூட்டங்கள் பற்றிய புகைப்படங்களும், காட்சிகளும் ஊடகங்களில் பதிவு செய்யப்படுகின்றன. வண்ண வண்ண விளக்குகள், இருளைப் பகலாக்கும் நூற்றுக்கணக்கான மின்விளக்கு அலங்காரங்களுடன் மேடையும், பொதுக் கூட்டங்களும் என்று, அந்தப் பகுதியில் வசிக்கும் மக்கள் ஒரு மாதம் பயன்படுத்தும் மின்சாரத்தை ஒரே நாளில் பொதுக்கூட்டத்தில் அரசியல் கட்சிகள் வீணடிக்கின்றன.

  சராசரியாக, கட்சியின் பெரிய தலைவர்கள் பங்கு கொள்ளும் பொதுக் கூட்டங்களுக்கு 100 முதல் 150 கிலோவாட்ஸ் மின்சாரம் செலவாகிறது என்று கூறப்படுகிறது. தேர்தல் வேளையில், பொதுக்கூட்டங்கள் தேவைதான், மின்விளக்கு அலங்காரங்கள் அவசியம்தான். மறுப்பதற்கில்லை. ஆனால், அதற்கான செலவை அந்தந்த அரசியல் கட்சிகள் ஏற்றுக்கொள்வதுதானே சரி? அதை மக்கள் தலையில் கட்டுவது என்ன நியாயம்?

  விதிமுறைப்படி, பொதுக்கூட்ட அமைப்பாளர்கள் தமிழ்நாடு மின்சார வாரிய அலுவலகத்திற்கு, குறிப்பிட்ட தினத்தில் நடத்தப்பட இருக்கும் பொதுக்கூட்டம் பற்றியும், அதில் உபயோகப்படுத்தப்படும் மின் விளக்குகள் பற்றியும் எழுத்து மூலம் தகவல் தெரிவித்து, அதற்கான கட்டணத்தை முன்பணமாகச் செலுத்த வேண்டும். எத்தனை மணி நேரம் கூட்டம் நடக்கப்போகிறது, எத்தனை மின் விளக்குகள் பயன்படுத்தப்படுகின்றன போன்ற தகவல்களின் அடிப்படையில் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு முன்பணமாக செலுத்தப்பட வேண்டும்.

  ஆனால், எந்தவொரு அரசியல் கட்சியும் இந்த விதிமுறையைப் பின்பற்றுவதில்லை. பொதுக்கூட்டங்களுக்குத் தங்களது செலவில் ஜெனரேட்டர்களை பயன்படுத்துகிறார்களா என்றால் அதுவும் கிடையாது. கட்சித் தொண்டர்கள் அச்சமோ தயக்கமோ இல்லாமல், அருகில் இருக்கும் டிரான்ஸ்பார்மரிலிருந்து மின்சாரத்தை எந்தவித அனுமதியும் இல்லாமல் எடுத்துக் கொள்கிறார்கள். இது தெரிந்தும், மின்வாரிய அதிகாரிகள் எதுவுமே தெரியாததுபோல மௌனம் காக்கிறார்கள்.

  இதை தட்டிக் கேட்காதது ஏன் என்று கேட்டால், அதற்கு அதிகாரிகள் சொல்லும் காரணம் அதைவிட விசித்திரமானது. "ஆளுங்கட்சிப் பொதுக்கூட்டத்தில் தட்டிக் கேட்டால், இடமாற்றம் பதிலாகக் கிடைக்கும். எதிர்கட்சிக் கூட்டங்களில் தலையிட்டால், அவர்கள் ஆட்சிக்கு வந்தால் பழிவாங்கக்கூடும். அதனால் பார்த்தும் பார்க்காமலும் இருந்து விடுகிறோம்.' எப்படி இருக்கிறது விளக்கம்?

  பெரிய அளவில் மின்திருட்டு நடத்தும் அரசியல் கட்சிகளை விட்டுவிட்டு, மின்வாரியம் கண்துடைப்புக்கு சின்னச் சின்ன மின் திருட்டுக்களை கண்டுபிடித்து வழக்குத் தொடுக்கிறது. அந்த எண்ணிக்கையும் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது.

  மின்திருட்டில் ஈடுபட்ட அரசியல் கட்சிகள் மீது ஏதாவது வழக்குத் தொடரப்பட்டிருக்கிறதா? அப்படியானால் இதுவரை எத்தனை வழக்குகள் தொடரப்பட்டிருக்கின்றன என்று தகவல் உரிமை சட்டத்தின்கீழ் கேட்டால், தமிழ்நாடு மின்வாரியத்திடமிருந்து சரியான பதில் கிடைப்பதில்லை. மின்வாரியம்தான் அரசியல் கட்சிகள்மீது நடவடிக்கை எடுப்பதே இல்லையே, பிறகு எப்படி பதில் சொல்ல முடியும்?

  சாமானியப் பொதுமக்கள் ஒரு நாள் காலதாமதமாக மின் கட்டணம் செலுத்தினாலும் அபராதம் விதிக்கும் தமிழ்நாடு மின்வாரியம், அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டங்களுக்கு முறையாகக் கட்டணம் வசூலிக்காதது ஏன்? மின்வாரிய அதிகாரிகளும், ஊழியர்களும் "கவனிக்க'ப்பட்டு விடுவதாலா?

  தமிழகம் முழுவதும் வெவ்வேறு அரசியல் கட்சிகளின் நூற்றுக்கணக்கான பொதுக்கூட்டங்கள் நடைபெறுகின்றனவே, இதில் முறையாக அனுமதி பெற்று மின்சாரம் பெறும் அரசியல் கட்சி எது என்று வாக்களிக்கும் பொதுமக்கள் கேட்கவும், பதில் பெறவும்கூட உரிமையில்லாவிட்டால், பிறகு அது என்ன ஜனநாயகம்?

  தேர்தலில் போட்டியிடும்போதே முறைகேடாக மின்சாரம் திருடும் இந்த அரசியல் கட்சிகள், ஆட்சியில் அமர்ந்தால் மட்டும் முறையாக ஆட்சி நடத்துவார்களா என்பதை மக்களும் சிந்திக்கவோ, தட்டிக் கேட்கவோ தயாராக இல்லையே... அதனால்தான் ஜனநாயகத்தில் அடிக்கடி மின்வெட்டு நிலவுகிறது. அதனால்தான் நமது இந்திய ஜனநாயகம் அடிக்கடி இருளில் மூழ்கிறது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai