Enable Javscript for better performance
தலைநிமிர்கிறான் தமிழன்!- Dinamani

சுடச்சுட

  

  வலைதளச் சேவையில் மிக முக்கிய நிறுவனங்களில் ஒன்றான கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக, சென்னையில் பிறந்து வளர்ந்து படித்து கல்விச் சிறகு பெற்று கடல் கடந்த சுந்தர் பிச்சை (43) என்கிற சுந்தர்ராஜன் பிச்சை தேர்வு செய்யப்பட்டிருப்பது இந்தியாவுக்குப் பெருமை; தமிழனுக்குத் தலை நிமிர்வு! இன்னோர் இணையசேவை நிறுவனமான மைக்ரோசாப்டின் தலைமைப் பொறுப்பிலும் சத்யா நாதெல்லா என்கிற இந்தியர் இருக்கிறார் எனும்போது, சர்வதேச அளவில் இந்தியாவின் மரியாதை மேலும் உயர்கிறது.
   இன்று சர்வதேச அளவில் பல பன்னாட்டு வணிகக் கூட்டாண்மை நிறுவனங்களின் தலைமைப் பொறுப்பில் இந்திரா நூயி (பெப்சிகோ), அஜய் பங்கா (மாஸ்டர் கார்ட்), சஞ்சய் மெஹ்ரோத்ரா (சேன்டிஸ்க்), சஞ்சய் ஜா (குளோபல் பவுண்டரிஸ்), பிரான்சிஸ்கோ டிசெüசா (காக்னிசன்ட்), ராஜீவ் சூரி (நோக்கியா) போன்றவர்கள் இருப்பது, எந்த அளவுக்கு மேலைநாடுகளுக்கு இணையாக அறிவுசார் துறைகளில் இந்தியா வளர்ச்சி அடைந்திருக்கிறது என்பதை வெளிச்சம் போடுகிறது.
   லாரி பேஜ், செர்ஜி பிரின் என்கிற நண்பர்களால் 1998-இல் தொடங்கப்பட்ட கூகுள், அண்ட சராசரத்தை விரல் நுனியில் கொண்டுவந்து சேர்த்து, தகவல் தொழில்நுட்பப் புரட்சிக்கு வித்திட்டது. எதைப் பற்றி வேண்டுமானாலும் கூகுள் சேவையை இணையத்தில் தொடர்பு கொண்டு தேவைப்பட்ட தகவலைப் பெற முடியும் என்கிற பிரம்மாண்ட கலைக் களஞ்சியத்தை உருவாக்கித் தந்ததுடன் அவர்கள் நின்றுவிடவில்லை. ஜி மெயில் மின்னஞ்சல் சேவை, குரோம் என்கிற செயலி, யூ-டியூப், ஆண்ட்ராய்ட் செல்லிடப்பேசி பயன்பாடு என்று கூகுளின் செயல்பாடுகள் பரந்து விரிந்தவை.
   கூகுள் நிறுவனம் மிகப் பெரிய நிறுவனமாக வளர்ந்துவிட்ட நிலையில், ஆல்பபெட் என்ற புதிய நிறுவனத்தை இணைய சேவைக்கென உருவாக்கி, அதன் கீழ் இயங்கும் சகோதர நிறுவனமாக கூகுள் மாற்றப்பட்டுள்ளது. இதுவரை கூகுள் நிறுவனத்தின் பொறுப்பை நிர்வகித்த லாரி பேஜ், ஆல்பபெட் நிறுவனத் தலைவராகச் செல்வதால், இந்த வாய்ப்பு சுந்தர் பிச்சைக்கு கிடைத்துள்ளது.
   மேலைநாடுகளைப் பொருத்தவரை, திறமை மட்டுமே மதிக்கப்படும் என்பதையும், ஒரு மனிதனின் அர்ப்பணிப்பான, திறன் மிளிர் உழைப்புக்கு (ஸ்மார்ட் வொர்க்) மிகப் பெரும் மரியாதை கிடைக்கிறது என்பதையும் உணர்ந்தவர்களுக்கு சுந்தர் பிச்சை என்ற தனி மனிதனின் சாதனை எத்தகையது என்பது தெரியும். அதையடுத்து, அவர் இந்தியர் என்பதால் நமக்கு ஏற்படுத்தி இருக்கும் பெருமிதமும் புரியும். அதற்கும் மேலாக சென்னையில் பிளஸ் 2 வரை படித்தவர் என்பதால் தமிழர்களை தலைநிமிரச் செய்கிறார். ஒரு மனிதனின் உலகளாவிய வளர்ச்சியை இப்படித்தான் நாம் பார்க்க வேண்டும்.
   மேற்கு வங்கம், கரக்பூர் ஐ.ஐ.டி.யில் படித்து முடித்த பிறகு, மேலாண்மைப் பட்டமும் பெற்று 2004-ஆம் ஆண்டு கூகுள் நிறுவனத்தில் சேர்ந்த சுந்தர் பிச்சை, கூகுள் குரோம் என்கிற வலைதள மென்பொருள் வடிவமைப்பில் முக்கியப் பங்காற்றியவர். இந்த மென்பொருளே தற்போது உலக அளவில் அதிகம் பயன்பாட்டில் உள்ளது. கூகுள் நிறுவனத்தின் ஆபரேடிங் சிஸ்டம் உள்பட பல்வேறு புதிய மென்பொருள் செயலிகள், செல்லிடப்பேசியில் ஆண்ட்ராய்ட் உள்ளிட்டவற்றை உருவாக்குவதிலும் முக்கியப் பங்காற்றியவர்.
   சுந்தர் பிச்சையின் வளர்ச்சி இன்றைய இளைஞர்களுக்குச் சொல்லாமல் சொல்லும் அறிவுரை இதுதான்: இன்றைய உலகத்தின் தேவை கடின உழைப்பு மட்டும் அல்ல. திறன்மிளிர் உழைப்பு (ஸ்மார்ட் வொர்க்). இரண்டாவதாக, அர்ப்பணிப்பும், தகுதியும் இருந்தால் வளர்ச்சியைப் பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை. உழைப்பும், திறமையும் இருந்தால் வளர்ச்சி தேடி வரும் என்கிற ஆக்கப்பூர்வ நம்பிக்கையை விதைத்திருக்கிறார் சுந்தர் பிச்சை. கூகுள் நிறுவனத்தின் தலைவர் பதவி என்பது இத்தகைய விளைவுகளையே இந்திய இளைஞர்கள் மனதில் கொண்டு சேர்க்கும். இதுதான் இன்றையத் தேவையும்கூட.
   இத்தகைய சிந்தனைகள் உருவாகும்போது, இந்தியாவுக்கு மட்டுமேயான கூகுள் போன்ற மற்றொரு வலைதள சேவை நிறுவனத்தை உருவாக்கவும், விரிவாக்கவும் இளைஞர்கள் ஆர்வம் கொள்வார்கள். சீனாவில் கூகுள், யாஹூ, முகநூல் (ஃபேஸ்புக்) போன்றவற்றுக்கு கட்டுப்பாடுகள் உள்ளன. பல்வேறு இணைய சேவைகள், செயலிகளை சீனா தன் நாட்டுக்கு மட்டுமானதாக உருவாக்கிக் கொண்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி இங்கே சுட்டுரையில் கருத்து தெரிவித்தாலும், சீனா செல்கிறபோது, அங்கே டுவிட்டருக்கு இணையான மற்றோர் இணைய சேவை நிறுவனத்தின் மூலமாகத்தான் தனது வருகையையும் சீனர்களுக்கு தன் முகமனையும் தெரிவிக்க முடிந்தது.
   கூகுள் நிறுவனத்தின் பல்வேறு சேவை, செயலிகளுக்கு மூலகாரணமாக ஓர் இந்தியர், தமிழர் இருக்க முடியுமானால், ஏன் இந்தியாவுக்கான தனித்துவமான சேவை நிறுவனங்கள் உருவாதல் கூடாது? இத்தகைய சிந்தனையை சுந்தர் பிச்சையின் உயர்வு ஏற்படுத்தும், ஏற்படுத்த வேண்டும்.
   சென்னை அசோக் நகரில் உள்ள ஜவஹர் வித்யாலயா மெட்குரிலேஷன் பள்ளியில் படித்த, சாதாரண, நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த சுந்தர் பிச்சையால் சர்வதேச அளவில் புகழ்பெற முடிந்திருக்கிறது என்பதைத் தமிழகத்தில் உள்ள மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் கல்வி நிலையங்கள் உணர்த்த வேண்டும். சுந்தர் பிச்சைக்கு தினமணியின் வாழ்த்துகளும், பாராட்டும். ஆயிரக்கணக்கான சுந்தர் பிச்சைகள் தமிழகத்திலிருந்து உருவாக வேண்டும் என்பதுதான் நமது எதிர்பார்ப்பும், நம்பிக்கையும்!
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai