ராணிப்பேட்டை எழுப்பும் கேள்விகள்...

ராணிப்பேட்டை தோல் தொழிற்சாலைக் கழிவுகளின் பொது சுத்திகரிப்பு நிலையத் திடக்கழிவு சேமிப்புத் தொட்டி உடைந்ததில், பக்கத்து தோல் தொழிற்கூடத்தில் உறங்கிக் கொண்டிருந்த

ராணிப்பேட்டை தோல் தொழிற்சாலைக் கழிவுகளின் பொது சுத்திகரிப்பு நிலையத் திடக்கழிவு சேமிப்புத் தொட்டி உடைந்ததில், பக்கத்து தோல் தொழிற்கூடத்தில் உறங்கிக் கொண்டிருந்த பத்து தொழிலாளர்களை திடக்கழிவு மூழ்கடித்துக் கொன்றது.

இறந்தவர்களில் ஒன்பது பேர் மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். ஒருவர் மட்டுமே ராணிப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர். ஆகவே, தமிழ் மண்ணில் வழக்கமான சாலை மறியல் நடக்கவில்லை. இறந்தவர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு, வாரிசுக்கு தமிழக அரசில் வேலை போன்ற அரசியல் அறிக்கைகள் இல்லை. இந்தப் பொது சுத்திகரிப்பு மையத்தில் இணைவு பெற்றுள்ள நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கூறி நழுவிக் கொண்டன அரசியல் கட்சிகள்.

ராணிப்பேட்டை பொது சுத்திகரிப்பு நிலைய திடக்கழிவின் ரசாயன நெடி தமிழகம் முழுவதும் பரவியிருக்கிறது. தமிழ்நாட்டில் பல்வேறு தொழிற்கூடங்களில் தனியாகவும், கூட்டாகவும் இயங்கும் பொது சுத்திகரிப்பு நிலையங்களும் இதே தரத்திலானவைதான் என்பதுதான் நிதர்சனமான உண்மை.

இந்த சுத்திகரிப்பு நிலையங்களை ஆண்டுதோறும் முறையாக சோதனை செய்ய வேண்டிய கடமை தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு உண்டு. அந்த அதிகாரிகள் முறையாக சோதனை செய்தார்களா என்பது முதல் கேள்வி. ராணிப்பேட்டை சிட்கோ தோல்தொழிற்சாலைக் கழிவுகள் பாலாறு நதியில் கலக்கவில்லை என்று மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் எழுத்து மூலம் உறுதியளித்து இருக்கிறார்களே, அது எப்படி?

ராணிப்பேட்டையில் சம்பவம் நடைபெற்ற பொது சுத்திகரிப்பு நிலையத்தில், அனுமதி பெறாமல் 1,000 கனமீட்டர் கொள்ளளவு கொண்ட திடக்கழிவு சேமிப்புத் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது ஆய்வில் தெரிய வந்திருக்கிறது. மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு தெரியாமல்  இப்படியொரு தொட்டி கட்டப்பட்டிருக்க முடியாது. இதற்கு அவர்களும் உடந்தை என்றுதானே பொருள்?

இதுபோல எத்தனை எத்தனையோ கேள்விகளை எழுப்ப முடியும். அதற்கான பதிலும் அனைவருக்கும் தெரியும். ஆனால், அதை வெளிப்படையாக சொல்ல யாரும் தயாராக இல்லை.

தமிழகத்தில் சாயக் கழிவுகளைவிட பல மடங்கு தீமை விளைவிக்கக்கூடியவை தோல் தொழிற்கூட ரசாயனக் கழிவுகள். இருந்தும், மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் மெத்தனமாக இருந்ததற்கு காரணம்- சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் உடந்தையும், வேலூர் மாவட்ட அரசியல்வாதிகளின் தலையீடும்தான். இந்தக் கழிவுகள் தொடர்ந்து பாலாறு நதியில் கலக்கப்பட்டுக் கொண்டிருந்தபோதிலும், அவை  அனுமதிக்கப்பட்ட அளவோடுதான் கலக்கப்படுகிறது என்று தொடர்ந்து கூறி வந்த வேலூர் மாவட்ட உள்ளாட்சி அமைப்புகளும், மாவட்ட நிர்வாகமும்தான் இந்த மரணங்களுக்கு காரணம். ஆனால், அவர்களிடம் கேள்வி கேட்கப்படாமல் தொழிற்சாலை உரிமையாளர்கள் மீது மட்டும் சட்டம் பாய்கிறது.

தோல் தொழிற்சாலை, காகிதத் தொழிற்சாலை, சாயத் தொழிற்சாலை, சர்க்கரைத் தொழிற்சாலை எனப் பல்வேறு தொழிற்சாலைகளிலும், அவர்கள் உருவாக்கும் ரசாயனக் கழிவுகளை அங்கேயே வடிகட்டி, வேதிகள் கலந்து நச்சுத்தன்மையை அகற்றி, ரிவர்ஸ் ஆஸ்மாஸிஸ் முறையில் நன்னீராக்கி, சூரிய ஒளியில் காயவைத்து, பிறகுதான் வெளியேற்ற வேண்டும். ஆனால், அவ்வாறு செய்வதில்லை. அதற்குக் காரணம், நிர்வாகத்துக்கு செலவு அதிகரிக்கும் என்பதுதான்.

பல நிலைகளில் தூய்மை செய்ய பல நாள்களாகும். ஆகவே, அன்றன்றைக்கு அவற்றை சுத்திகரிப்பு செய்யாமல் நள்ளிரவில் ஆற்றில் கொட்டி விடுகிறார்கள்.

இதனால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுகின்றன என்பது அவர்களுக்கும், துணை நிற்கும் அரசியல்வாதிகளுக்கும், அதிகாரிகளுக்கும் தெரியும். இதனால் குடிநீர் ஆதாரம் பாதிக்கும் என்பதும் அவர்களுக்குத் தெரியும். ஆனால், அவர்கள்  குடிப்பதற்கும், ஏன் சமைப்பதற்கும், மினரல் தண்ணீர் உபயோகிப்பவர்கள் ஆயிற்றே. ஆகவே, ஆலை ரசாயனக் கழிவுகளை ஆற்றில் கலக்கவிடுவதில் அவர்களுக்கு எந்தவிதமான கவலையோ வருத்தமோ கிடையாது. இதுபோன்ற விபத்துகள் ஏற்படும்போது அரசியல்வாதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் தர்மசங்கடம் ஏற்படுகிறதே தவிர, மாட்டிக் கொள்வது என்னவோ தொழிற்சாலை அதிகாரிகள்தான்.

ராணிப்பேட்டையில், சுத்திகரிப்பு நிலையத்திலும் சாலையிலும் விரவிக் கிடக்கும் தோல் ரசாயனக் கழிவுகளை அகற்ற 50-க்கும் மேற்பட்டோர் களத்தில் இருந்தாலும், இவர்கள் தொடர்ந்து சில மணி நேரங்களுக்கு மேல் அங்கே பணியாற்றுவது உயிருக்கு ஆபத்து என்பதால் முறை வைத்து, ஓரிரு மணி நேரம் மட்டுமே இப்பணியில் ஈடுபடுகிறார்கள். அந்த ரசாயன நச்சு அப்படியே பாலாறு ஆற்றில் கலக்கப்பட்டு, அந்த நீரை பயன்படுத்தும் மக்கள் தோல் புற்றுநோய் தொடங்கி பல்வேறு நோய்களால் பாதிக்கப்படுகிறார்கள். இந்த விபத்தில் இறந்திருப்பவர்கள் 10 பேர்தான். ஆனால், நாள்தோறும் நச்சுக் கழிவுகளின் பாதிப்பால் கொஞ்சம் கொஞ்சமாக இறந்து கொண்டிருக்கும் ராணிப்பேட்டை சுற்றுவட்டார மக்கள் ஏறத்தாழ 10 லட்சம் பேர்.

இது ராணிப்பேட்டையில் மட்டுமல்ல, திருப்பூர், ஈரோடு, கரூர் என ஆறு செல்லும் இடங்களிலெல்லாம் இத்தகைய ரசாயனக் கழிவுகள் மழைக் காலங்களில் அதிக அளவில் ஆற்றில் திறந்துவிடப்படுகின்றன. மழை பெய்தால் விவசாயிகளைவிட மகிழ்ச்சியடைபவர்கள் இந்த ரசாயனக் கழிவைத் தள்ளிவிடுபவர்கள்தான்.

இனியாகிலும், சுத்திகரிப்புப் பணிகள், பொது சுத்திகரிப்பு நிலையங்களை மாசுக் கட்டுப்பாடு அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு செய்ய வேண்டும். மாசுக்கட்டுப்பாடு வாரியத்துக்குத்தான் உடனடியாக பொது சுத்திகரிப்பு தேவைப்படுகிறது என்பதுதான் உண்மை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com