Enable Javscript for better performance
தீர்ப்பல்ல.. திணிப்பு!- Dinamani

சுடச்சுட

  

  ஐபி.எல். கிரிக்கெட் போட்டி என்பது ஒரு சிலரின் கொள்ளை லாபத்துக்கான விளையாட்டுப் போட்டி என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால், ஐ.பி.எல். போட்டிகளை தண்ணீர்ப் பஞ்சம் நிலவும் மகாராஷ்டிரத்தில் நடத்தாமல் வேறு மாநிலங்களுக்கு மாற்றுங்கள் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது தவறான முன்னுதாரணம் ஆகிவிடக்கூடும். இதே தீர்ப்பை மற்ற கலாசார நிகழ்வுகளுக்கும் பொருத்திப் பார்ப்பது வழக்கமாக மாறுமேயானால் என்ன ஆகும் என்ற கவலையே இந்த அச்சத்திற்குக் காரணம்.
   உதாரணமாக, தமிழ்நாட்டில் "ஆடிப் பெருக்குக்காக மேட்டூர் அணையைத் திறந்துவிடக் கூடாது. அதனால், எந்தப் பயனும் இல்லை. தண்ணீர் வீணாக ஓடி, கடலில் கலக்கிறது. மாறாக, விவசாயிகள் கோரும் காலத்தில் மட்டுமே தண்ணீர் திறந்துவிட வேண்டும்' என்று ஒரு பொதுநல வழக்கு தொடுக்கப்படுமேயானால், அது நியாயமான காரணமாக இருக்கலாம். அதை நீதிமன்றமும் ஏற்கலாம். ஆனால், மக்கள் ஏற்பார்களா? இது தமிழக கலாசாரத்தின் மீதான திணிப்பு ஆகாதா?
   திருவண்ணாமலை கிரிவலத்தால் வாகனம், பக்தர்கள் எண்ணிக்கை பெருகி, காற்று மாசும், குப்பையும் அதிகரிக்கிறது என்பது உண்மை. அதற்காக கிரிவல பக்தர்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த உத்தரவிடலாமா? அல்லது நிறுத்திவிட முடியுமா?
   குடிநீர் போத்தல் தயாரிப்புக்காக இதே மும்பை, புணேயில் பன்னாட்டு நிறுவனங்கள் நிலத்தடியிலிருந்து பல லட்சம் லிட்டர் தண்ணீரை எடுத்துக் கொண்டிருக்கின்றன. கோக கோலா உள்ளிட்ட மற்ற மென்பானங்கள் தயாரிப்புக்காக பல லட்சம் லிட்டர் தண்ணீர் இதே மும்பை, புணேயில் நகராட்சிகளிடமிருந்து பெறப்படுகின்றன. குடிநீர்த் தட்டுப்பாட்டை, வறட்சியைக் காரணம் காட்டி, இந்த தண்ணீர் சார்ந்த தொழிற்கூடங்களை மூட வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட முடியுமா?
   எல்லா மாநிலங்களிலும் கோடைகாலத்தில் தண்ணீர் பற்றாக்குறை நிலவுகிறது. மகாராஷ்டிரத்தைப் போலவே எல்லா மாநிலங்களிலும், ஐ.பி.எல். போட்டிகளை நடத்தக் கூடாது என்று பொதுநல வழக்கு தொடுக்கப் பலரும் முன்வரக்கூடும். அதற்கு இது முன்னுதாரணமாக இருக்கும்.
   மக்கள் திரளும் பொது நிகழ்வு நடத்தப்படுமேயானால் அதில் பார்வையாளர்களாக வரும் மக்களுக்குப் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும், அவர்களுக்கான வசதிகள் அளிக்கும் சாத்தியங்கள் குறித்தும், அதைச் செய்யும்படி வற்புறுத்துவதும் நியாயமானதே. ஆனால், அந்த நிகழ்ச்சி நடக்கும் பகுதியில் மக்கள் துயரத்தில் இருக்கும்போது அந்த நிகழ்ச்சியே கூடாது என்பது சரியல்ல. ஏனெனில், இவை ஏற்கெனவே திட்டமிடப்பட்டவை.
   ஒரு தெருவில் ஒரு வீட்டில் கல்யாணம், இன்னொரு வீட்டில் இழவு. அதற்காக, கல்யாணத்தை நிறுத்து அல்லது வேறு எங்காவது நடத்திக்கொள் என்று யாரும் சொல்வதில்லை. மாறாக, சாவு வீட்டினர் மிக விரைவாகக் குறுகிய நேரத்தில் அடக்கம் செய்யவே முற்படுவர். அதுவரை கல்யாண வீட்டினரும் மகிழ்ச்சிக் கூச்சல்கள் இல்லாமல், ஆட்டம்-பாட்டு இல்லாமல் அமைதி காப்பர்.
   நீதிமன்றமே தனது உத்தரவில், இவ்வாறு போட்டிகளை மாற்றுவதால் மகாராஷ்டிரத்தின் வறட்சி, தண்ணீர்ப் பற்றாக்குறை மாறப்போவதில்லை. ஆனால், இது ஒரு தொடக்கமாக இருக்கட்டும் என்றுதான் கூறுகிறது. மும்பை, புணே நகர மக்கள் மட்டுமன்றி, அனைத்து மக்களுமே தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தவும், குடிநீரை வேறு தேவைகளுக்குப் பயன்படுத்தாமல் இருக்கவும் கற்றுக்கொள்வது இந்தப் பிரச்னையின் தீர்வுக்குத் தொடக்கமாக இருக்குமே தவிர, கிரிக்கெட் போட்டிகளை நிறுத்துவது அல்லது வேறு இடத்துக்கு மாற்றுவது தீர்வாகாது.
   ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான மைதானத்தை மேம்படுத்தும் தண்ணீர், சுத்திகரிக்கப்பட்ட கழிவு நீர் என்று கூறியிருக்கிறார்கள். மாநிலத்தின் வறட்சி நிவாரணத்துக்காக ரூ.5 கோடி தருவதாகவும் சொன்னார்கள். நீதிமன்றம் குறிப்பிடும் பகுதிக்கு, தண்ணீர்ப் பற்றாக்குறையைப் போக்கும் நடவடிக்கையில் தங்கள் பங்காக, 60 லட்சம் லிட்டர் குடிநீரை விநியோகம் செய்கிறோம் என்றும் கூறினார்கள். ஆனால், நீதிமன்றம் ஏற்கவில்லை.
   ஐ.பி.எல். போட்டி நடத்துவோர் மிகப்பெரும் லாபம் சம்பாதிப்பதால், அந்தப் போட்டிக்கு வரும் பார்வையாளர்கள் பயன்படுத்தும் குடிநீர் உள்ளிட்ட தண்ணீருக்கான ஏற்பாடுகளை கிரிக்கெட் வாரியம் தானே செய்து கொள்ள வேண்டும் என்றும், மகாராஷ்டிர மாநிலத்தின் குடிநீர் வாரியத்தின் தண்ணீரைப் பயன்படுத்தக் கூடாது என்றும் தடை விதிப்பது வேண்டுமானால் இந்தப் பிரச்னைக்கு சரியான முடிவாக இருக்கும். அது சாத்தியமும்கூட.
   மும்பை, புணே ஐ.பி.எல். போட்டிகளில் கிடைக்கும் லாபத்தின் 50% பகுதியை, குடிநீர் பஞ்சம் நிலவுகிற கிராமங்களுக்கு லாரிகள் மற்றும் ரயில் மூலம் தண்ணீர் வழங்கிடச் செலவிட வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கலாம். அடுத்தவர் பட்டினி கிடக்கும்போது உனக்கு விருந்தா என்று விரட்டுவதைக் காட்டிலும், உன் விருந்தில் அவர்களுக்கும் உணவிடலாமே என்று சொல்வதே நியாயமாக இருக்கும்.
   ஐ.பி.எல். போட்டிகள் நடத்தப்படுவது சரியா, தவறா, விளையாட்டு சூதாட்டமாகிறது உள்ளிட்ட பிரச்னைகளை இந்த வழக்குடன் தொடர்புபடுத்திப் பார்க்க வேண்டிய அவசியமில்லை. இதே ஐ.பி.எல். போட்டிகளை வெளிநாட்டில் நடத்தி, அதை இந்தியாவில் ஒளிபரப்பி, அவர்களால் பணம் சம்பாதிக்க முடியும். அதை ஏற்கெனவே செய்த அனுபவமும் உண்டு. அப்படிச் செய்தால் மகாராஷ்டிரத்துக்குத்தான் வருவாய் இழப்பு. அதை ஏன் நீதிமன்றம் கருத்தில் கொள்ளவில்லை என்பது வியப்பாக இருக்கிறது.
   
   
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai