சுடச்சுட

  

  வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் தங்களை இந்தியர்களாகக் கருதுவதில்லை. இந்தியாவுடன் உணர்வுபூர்வமாக இணையவில்லை என்கிற குற்றச்சாட்டுக்குக் காரணம் இருக்கிறது. அங்கே நடக்கும் சம்பவங்களும், அவர்களது பிரச்னைகளும் இந்தியாவின் ஏனைய பகுதிகளில் வாழும் மக்களை எந்தவிதத்திலும் பாதிப்பதில்லை. அவர்கள் அது குறித்துக் கவலைப்படுவதுமில்லை. இதன் எதிர்வினைதான் வடகிழக்கு மாநிலங்களில் வாழும் மக்களிடம் காணப்படும் இந்திய அந்நியத்தனம்.

  வடகிழக்கு மாநிலங்களில் நடைமுறையில் இருக்கும் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்பதற்காக மணிப்பூர் மாநிலத்தில் கடந்த 16 ஆண்டுகளாக உண்ணாவிரதப் போராட்டம் செய்து வரும் 44 வயது இரோம் ஷர்மிளா தனது போராட்டத்தைக் கைவிட்டு நேரடி அரசியலில் குதிக்கப் போவதாக அறிவித்திருக்கிறார். மனித உரிமைப் போராளியாக உலகம் முழுவதும் அறியப்படும் இரோம் ஷர்மிளாவின் இந்த முடிவு இந்தியாவின் ஏனைய பகுதிகளில் ஏன் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்பதுதான் வியப்பாக இருக்கிறது.

  ஒரு சமூகப் போராளி அரசியலில் ஈடுபடப் போகிறார் என்பதல்ல இந்த முடிவு குறித்து நாம் சிந்திக்க வேண்டிய விஷயம். காஷ்மீரில் வன்முறையில் ஈடுபடுபவர்களும், குஜராத்தில் போராட்டம் நடத்துபவர்களும் மத்திய}மாநில அரசுகளுக்கு நெருக்கடி கொடுக்க முடிகிறது. ஆனால், அண்ணல் காந்தியின் அகிம்சை வழியில் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்ட இரோம் ஷர்மிளா, 16 ஆண்டு காலப் போராட்டத்தால் எந்தவித பயனும் இல்லாமல் போனதால் அதைக் கைவிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. அப்படியானால், போராட்டமும் வன்முறையும்தான் இந்தியாவில் பிரச்னைகளுக்குத் தீர்வு ஏற்படுத்துமா என்கிற மிக முக்கியமான தார்மிகக் கேள்வியை எழுப்புகிறது இரோம் ஷர்மிளாவின் இந்த முடிவு.

  மணிப்பூர் உள்ளிட்ட ஏழு வடகிழக்கு மாநிலங்களிலும், காஷ்மீரிலும் எல்லை கடந்த ஊடுருவலைத் தடுக்கவும், பிரிவினைவாதக் குழுக்களின் தாக்குதல்களை எதிர்கொள்ளவும் 1958-ஆம் ஆண்டு அன்றைய ஜவாஹர்லால் நேரு தலைமையிலான மத்திய அரசால் ஆயுதப் படை சிறப்பு அதிகாரச் சட்டம் அமல்படுத்தப்பட்டது. இதன் மூலம் இந்தப் பகுதிகளில் வாழும் மக்கள், பாதுகாப்புப் படையினரின் நேரடிக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டனர்.

  பாதுகாப்புப் படையினரால் மனித உரிமை மீறல்கள் நடத்தப்படுவதாகத் தொடர்ந்து குற்றச்சாட்டுக்கள் இருந்து வந்தன. கடந்த 2000-மாவது ஆண்டு மணிப்பூரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் கொல்லப்பட்டனர். இதுகுறித்து முறையாக எந்த விளக்கமும் தரப்படவில்லை என்பதால், மணிப்பூரில் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை ரத்து செய்யக் கோரி இரோம் ஷர்மிளா தனது காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார்.

  இரோம் ஷர்மிளாவை தற்கொலை முயற்சிக் குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்து சிறையில் அடைத்தனர். வலுக்கட்டாயமாக உணவு உட்கொள்ள வற்புறுத்தினர். இதையெல்லாம் மீறி 16 ஆண்டுகளாகத் தொடர்ந்த தனது உண்ணாவிரதத்தை ஆகஸ்ட் ஒன்பதாம் தேதி முடித்துக் கொள்ளப் போவதாக இரோம் ஷர்மிளா அறிவித்திருக்கிறார். அது மட்டுமல்ல. தனது 44 ஆண்டு வாழ்க்கையில் 16 ஆண்டுகள் போராடித் தோற்றுவிட்ட நிலையில், விரைவில் குடும்ப வாழ்க்கைக்குத் தயாராக விரும்புவதாகவும் அறிவித்திருக்கிறார். அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிட இருப்பதாகவும் அறிவித்திருக்கிறார்.

  ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் வடகிழக்கு மாநிலங்களிலும் காஷ்மீரத்திலும்தான் அமலில் இருக்கிறது. இது முன்பு பஞ்சாபில் காலிஸ்தான் தீவிரவாதிகளை ஒடுக்குவதற்காக பயன்படுத்தப்பட்டது. பயங்கரவாதம் கட்டுக்கடங்காமல் இருக்கும் நிலையில் இப்படியொரு சட்டமே வேண்டாம் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாதுதான். அதேநேரத்தில், எந்தவிதக் கேள்வியோ, வரைமுறையோ இல்லாமல் துப்பாக்கி ஏந்திய ராணுவ வீரர்களிடம் இப்படிப்பட்ட அதிகாரம் தரப்படுவது சரிதானா என்பதையும் நாம் சிந்தித்தாக வேண்டும்.

  சில ராணுவ வீரர்களால் இந்தச் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்பட்டு அப்பாவிகள் உயிரிழந்த சம்பவங்கள் ஏராளம் உண்டு. அந்த ராணுவ வீரர்கள் தண்டிக்கப்படாமலும், சட்டத்தின் முன் நிறுத்தப்படாமலும் இருப்பதால், இந்தச் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுவது அதிகரித்து வருகிறது என்பதும் உண்மை. சமீபத்தில், இதற்காக மத்திய அரசு உச்சநீதிமன்றத்தின் கண்டனத்துக்கு உள்ளாகி இருக்கிறது. மணிப்பூரில் நடைபெற்றிருக்கும் 1,528 என்கவுன்ட்டர் மரணங்கள் குறித்து விசாரித்து அறிக்கை தர வேண்டுமென மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

  பயங்கரவாதத்தைக் காரணம் காட்டி, அப்பாவிப் பொதுமக்கள் துன்புறுத்தப்படுவதும், காரணமில்லாமல் கொல்லப்படுவதும் மனிதாபிமானமுள்ள எவராலும் ஏற்றுக் கொள்ள முடியாது. தவறாக பயன்படுத்தப்படும் ஒரு சட்டத்திற்கு எதிராக அமைதியான முறையில் போராடிய இரோம் ஷர்மிளாவின் தோல்வி ஒட்டுமொத்த இந்தியாவுக்கே தலைகுனிவு. அவரைப் பேச்சுவார்த்தைக்கு அழைத்துத் தீர்வு காணாமல், அதிகார மமதையுடன் எதிர்கொண்டதே தவறு.

  இரோம் ஷர்மிளாவின் அமைதிப் போராட்டம் தோல்வி அடைந்திருக்கிறது. அவர் தேர்தலில் போட்டியிட இருக்கிறார். எந்தவொரு அரசியல் கட்சியும் அவருக்கு எதிராக வேட்பாளரைக் களமிறக்காமல் அவரது வெற்றியைப் போட்டியின்றி உறுதிப்படுத்த வேண்டும். இதில் அரசியல் ஆதாயம் தேட முயன்றால், அண்ணல் காந்தியடிகளின் ஆன்மா அவர்களை மன்னிக்காது!

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai