Enable Javscript for better performance
மழையும் அழிவும்!- Dinamani

சுடச்சுட

  

  இந்தியா எதிர்கொள்ளும் மிகப் பெரிய சவால், கோடையில் கடுமையான வறட்சியும் மழைக் காலங்களில் வெள்ளமும்தான். ஊழலைவிட, பாதுகாப்பு செலவினங்களைவிட நமது முன்னேற்றத்துக்கு மிகப்பெரிய தடையாக இருப்பவை இவைதான்.

  அஸ்ஸாம், பிகார், ஒடிசா, மகாராஷ்டிரம், கர்நாடகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் பலத்த பருவமழை காரணமாக சுமார் 100 பேர் இறந்துள்ளனர். பல லட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு தாற்காலிகமாக இடம் பெயர்ந்துள்ளனர். பெருமழை விளைவித்த சேதங்கள் குறித்துப் பல தரப்பிலும் பல விதமான மதிப்பீடுகள் சொல்லப்பட்டு வந்தாலும், மத்திய அரசு நிர்ணயிக்கும் குழு, இப்

  பகுதிகளை நேரில் சென்று பார்த்த பிறகுதான் தனது மதிப்பீட்டையும், தேவையான நிதியுதவியையும் அறிவிக்கும்.

  நகர்ப்புற மக்கள் போக்குவரத்து நெரிசலால் பாதிக்கப்பட்டார்கள். கட்டடங்கள் சரிந்து விழுந்ததில் சில இடங்களில் சிலர் இறந்தார்கள். நகரத்தின் மையப்பகுதியில் உள்ள குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது. குடிசைப் பகுதியில் வாழ்ந்தவர்கள் பெருமளவு பாதிக்கப்பட்டனர். ஆனால், கிராமப்புறங்களில் வீடுகளுக்கும் கிராமத்துக்கும் ஏற்பட்ட சேதத்தை அந்த மக்கள் பொருட்படுத்தவில்லை. அவர்களது வாழ்வாதாரமான பயிரும், கால்நடைகளும் நாசமானதுதான் அவர்களது மெய்யான துயரம்.

  இருப்பினும், ஊடகங்களின் பார்வையும் அழுத்தமும் நகர்ப்புற மக்களின் துயரத்துக்கே முன்னுரிமை தருவதாக அமைந்தன. பெருமழையால் தில்லியின் குர்கான் நகர் சாலைகளில் வெள்ளம் ஓடியதில் பல மணி நேரத்துக்கு போக்குவரத்து ஸ்தம்பித்ததையும், தகவல் தொழில்நுட்ப நகரமான பெங்களூரூ அண்மையில் சென்னை மாநகர் மூழ்கியதைப் போலவே வெள்ளத்தில் மூழ்கியதையும் அனைத்து ஊடகங்களும் பரவலாக பேசின; அழுத்தம் தந்தன. இந்தத் துயரத்தை களைவதற்கு முன்னுரிமை தரப்பட்டு அரசு இயந்திரம் முடுக்கிவிடப்பட்டது. கிராம மக்களின் துயரங்கள், அழிந்த பயிர்கள், இழந்த கால்நடைகள் குறித்த தகவல்கள் போகிறபோக்கில் சொல்லப்பட்டன, அவ்வளவே.

  பெருமழை கொட்டித் தீர்க்கப்போகிறது என்பதை வானிலை மையங்கள் மிகத் துல்லியமாக அறிவிக்கும் வகையில் தொழில்நுட்பம் இருக்கிறது. நகர்ப்புற மனிதர் வெளியே போகாமல் இருக்கலாம், அல்லது இடம் பெயரலாம். ஆனால் ஒரு விவசாயி, தான் விளைவித்த பயிரை அள்ளிச் சுருட்டிக்கொண்டு போக முடியுமா? கண்ணெதிரில் தன் உழைப்பு வெள்ளத்தால் அழிக்கப்படுவதை வேதனையுடன் வேடிக்கை பார்ப்பதைதவிர, கிராம விவசாயி செய்யக்கூடியது வேறு ஒன்றுமில்லை.

  இந்த நிலை ஏற்படக் காரணம், ஆற்றில் மணல் அள்ளப்பட்டு, நீரோட்டப் பாதைகளின் ஒழுங்கு குலைந்து போனதுதான். இதனால், பெருவெள்ளம் பாதை மாறிப் பயணம் செய்கிறது. விவசாயி விளைவித்த பயிர்களின் மேல் ஓடி நாசப்படுத்துகிறது. பாசன வாய்க்கால் பராமரிப்பில் நடந்த ஊழல்கள் காரணமாக சிறு வெள்ளத்திலும் கரைகள் கரைந்துவிடுகின்றன. இவர்களுக்கும் இழப்பீடு கிடைக்கும். ஆனால், அவை மிகச் சொற்பமானதாகவே இருக்கும்.

  ஆக்கிரமிப்புகளைத் தெரிந்தே செய்த நகர்ப்புற மனிதர்களுக்குத் தரப்படும் முக்கியத்தைவத்தைக் காட்டிலும் அதிகமான அக்கறை, எந்தக் குற்றமும் செய்யாத நிலையில் மழையால் பாதிப்புக்கு உள்ளாகும் விவசாயிக்குத்தான் தரப்பட வேண்டும். தில்லி, பெங்களூரூ மட்டுமன்றி வடஇந்திய நகரங்கள் ஒவ்வொன்றும் இந்த பருவமழையினால் ஒவ்வொரு விதமான பிரச்னையை எதிர்கொண்டன.

  எதுவாக இருப்பினும், இந்தப் பெருமழை உணர்த்துவது ஒன்றுதான். இந்தியாவில் உள்ள அனைத்து நகரங்களும் பெருமழையை சமாளிக்கும் திறன் அற்றவையாக இருக்கின்றன. மழை நீரை வெளியேற்றும் வாய்க்கால் வசதிகள் நகரங்களில் இல்லை. அல்லது ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி இருக்கின்றன. நீர்நிலை சார்ந்த பகுதிகள் அனைத்தும் நகர் விரிவாக்கம் என்ற பெயரில் வீடுகளாலும் அலு

  வலக கட்டடங்களாலும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு, பிறகு அரசியல் அழுத்தம் காரணமான முறைப்படுத்தப்பட்டன. இவற்றைத்தான் வெள்ளம்சூழ் நகரங்கள் யாவும் அம்பலமாக்குகின்றன.

  இனி, இந்த நகரங்களை மாற்றி அமைப்பது சாத்தியமில்லை. ஆனால் ஒன்று செய்ய முடியும். இந்த நகரங்களின் நடுவே, எங்கெல்லாம் வெள்ளம் பாய்கிறதோ அந்தப் பகுதிகளில் புதைவாய்க்கால் அமைத்து, இயல்பான ஓட்டத்தில் அல்லது விசைபம்புகள் உதவியுடன் அனைத்து மழை நீரையும் நகருக்கு வெளியே கொண்டு செல்வதும், தற்போது இருக்கும் நீர்நிலைகள் அல்லது இதற்காக புதிதாக உருவாக்கப்படும் நீர்நிலைகளில் கொண்டு சேர்ப்பதும் சாத்தியம்தான். ஏற்கெனவே கட்டப்பட்ட கட்டடங்களின் அடியில் மெட்ரோ ரயில் பாய்ந்து செல்ல இடவசதி தரமுடிந்த நகரத்தால், மழைவெள்ளப் புதை வாய்க்கால் அமைக்க முடியாதா என்ன?

  பொலிவுறு நகரத் திட்டத்தின் ஒரு பகுதியாக, வெள்ளம்சூழ் நகர்ப் பகுதியில் இத்தகைய மழைநீர்ப் புதைவாய்க்கால்களை அமைப்பதில் கவனம் செலுத்த வேண்டும்.

  ஒவ்வொரு மழையின்போதும் நகரங்களின் சிதிலமான சாலையைச் சீரமைத்தல், நிவாரணத்தொகை வழங்கல், நட்டஈடு, பொருளாதார இழப்பு அனைத்தையும் கணக்கில் கொண்டு இத்தகைய மழைநீர்ப் புதைவாய்க்கால்களை நகரங்களில் உருவாக்குவது நிரந்தரத் தீர்வாக இருக்கும். நகருக்குள் இருந்த ஏரி குளங்களை ஆக்கிரமித்துவிட்ட நிலையில், ஊருக்கு வெளியே, புதிதாக நீர்நிலைகளை உருவாக்கியே தீர வேண்டும்.

  "ஏரி குளங்களை அழித்தவனே! அதே எண்ணிக்கையில் ஏரி குளங்களை உருவாக்கித் தா' என்று முற்றுகையிட்டுச் சொல்கிறது பெருமழை. காதுள்ளவன் கேட்கக் கடவன்!

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai