Enable Javscript for better performance
இது அரசியல், ஜாதியல்ல!- Dinamani

சுடச்சுட

  

  தமிழகத்தில் உள்ள அனைத்து அம்மன் கோயில்களிலும் ஒவ்வொரு ஆடி மாத வெள்ளிக்கிழமையும் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுவது தொன்றுதொட்டு நடைபெற்று வரும் வழக்கம். அண்மைக்காலமாக இந்த விழாக்களில் இரு தரப்பினருக்கு இடையே தகராறு ஏற்படுவதும் வழக்கமான சம்பவமாக மாறிக்கொண்டு வருகிறது.

  இன்று கோயில்களில் சாதிப்பாகுபாடு காரணமாக தகராறு ஏற்படுவதில்லை. ஆனால் தங்களில் யார் பெரியவர் என்ற ஆளுமையை நிறுவிக்கொள்ளும் களமாக மாற்றுவதிலும், அரசியல் காழ்ப்புணர்வு மற்றும் தேர்தல்நேர மனக்காய்ச்சலுக்கு இப்போது மருந்து தேடுவதாகவுமே இந்த சச்சரவுகள், இரு தரப்பிலும் முன்நிற்கும் மனிதர்களால் ஏற்படுத்தப்படுகின்றன என்பதே உண்மை.

  சில நாள்களுக்கு முன்பு, நாகை மாவட்டம் காளிமேடு பத்ரகாளியம்மன் கோயிலில் மண்டகப்படியை ஒரு தரப்பினருக்கு குறிப்பிட்ட நாளில் வழங்க இயலாது என்று மற்றொரு தரப்பினர் கூறியதாலும், இதுநாள்வரை வழக்கத்தில் இல்லாத ஒன்று என்று முரண்டு பிடித்ததாலும், அமைச்சர் ஓ.எஸ். மணியன் தலைமையில் நடைபெற்ற சமரசப் பேச்சும் பயனில்லாத நிலையில் கோயிலுக்குப் பூட்டுபோட உத்தரவிட்டிருக்கிறார் மாவட்ட ஆட்சியர். தற்போது மீண்டும் ஒரு பேச்சுவார்த்தை நடத்தலாம் என்று தாழ்த்தப்பட்ட பிரிவினர் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

  பெரம்பலூர் மாவட்டம், சிறுவாச்சூர் பெரியசாமி கோயிலில் ஒரு பிரிவினர் கொடுத்த ஆடு, கோழிகளை வாங்க மறுத்ததால் பிரச்னை ஏற்பட்டு, இதற்காக இரு பூசாரிகளை அறநிலையத்துறை பணியிடைநீக்கம் செய்ய உத்தரவிட்டுள்ளது.

  கிருஷ்ணகிரி மாவட்டம் அவதானப்பட்டி மாரியம்மன் கோயில் திருவிழாவில், இரு தரப்பினருடனும் ஏற்கெனவே பேச்சுவார்த்தை நடத்திதான் விழா ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இருப்பினும் வாணவேடிக்கை தகராறு கைகலப்பாக மாறியதும், போலீஸார் மீது தாக்க முற்பட்டதும் பிரச்னையை தீவிரமாக்கியதில் நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

  மேற்சொன்ன அனைத்து கோயில்களிலும் மாவட்ட ஆட்சியர், அல்லது அமைச்சர், வருவாய்த்துறை அதிகாரிகள் இரு தரப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தி, சுமுகமாக திருவிழாவை நடத்த முற்பட்டுள்ளனர் என்பது வெளிப்படை. ஆனாலும், அதையும் மீறி தகராறு செய்ய வேண்டும், குறிப்பாக அந்தப் பிரச்னை ஊடகங்களில் பெரிதாக்கப்பட வேண்டும் என்ற முனைப்பு அதிகமாக இருப்

  பதைக் காண முடிகிறது. இதில் ஜாதி காரணம் காட்டப்படுகிறதே தவிர, இந்தப் பிரச்னைகளுக்குப் பின்னால் அரசியல் இருக்கிறது என்பதுதான் உண்மை. இதனால் பாதிக்கப்படுவது கோயில் திரு

  விழாவும், இந்தத் திருவிழா காணக் காத்திருந்த ஊர் மக்களும்தான்.

  உள்ளூர் அரசியல் காழ்ப்புணர்வு ஒருபுறம் இருக்க, இந்த திருவிழா நேரத்தில் நடத்தப்படும் வசூல் வேட்டையும் தகராறுகளுக்கு வித்தாக அமைகிறது. திருவிழாவுக்கு என ஒரே குழுவாக வசூல் செய்யும் நிலைமை காணப்படாமல், இரு தரப்பும் தனித்தனியாக வசூல் வேட்டை நடத்துவதும், இதைச் செய்வதற்காகவே தங்கள் தலைமையை உறுதி செய்துகொள்ள வேண்டிய கட்டாயத்துக்

  காகப் பிரச்னை செய்து, தனது பலத்தை காட்டிக்கொள்ள விழை

  வதும் மிக இயல்பாக நடக்கின்றன. இதில் அவர்கள், இவர்கள் என்ற பாகுபாடு கிடையாது. இரு தரப்பிலும் கடவுளின் பெயரால் வசூல் நடத்தும் வேட்டைக்காரர்கள் இருக்கிறார்கள்.

  இந்தப் பிரச்னைகள் எல்லா இடங்களிலும் பரவக்கூடியதாகவும் அல்லது பரவ வேண்டும் என்கின்ற அரசியல் ஆசையும் பலருக்கு இருக்கும் சூழ்நிலையில் அரசு இந்த விவகாரத்தில் ஒரு முடிவு எடுத்தாக வேண்டிய கட்டாயம் உள்ளது.

  இப்படிப்பட்ட கூழ்ஊற்று சார்ந்த சிறு அம்மன் கோயில்கள் அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டுக்குள் வருவதில்லை. திரு

  விழாக்கள் அந்தந்த பகுதி மக்களின் கட்டுப்பாட்டிலேயே நடத்தப்பட்டு வருகின்றன. சில கோயில்கள் சில குடும்பங்களின் நிர்வாகத்தில் இருந்து வருகின்றன. சில கோயில்கள் சில உயர்ஜாதி இந்துக்

  களுக்கு உரிமைப்பட்டதாகவும் அனைத்து தரப்பினரும் வழிபாடு செய்யும் இடமாகவும் இருந்துவருகின்றன.

  இத்தகைய அம்மன் கோயில்களின் வகைப்பாடு எதுவாக இருந்தாலும், இன்றைய சூழ்நிலை இரு தரப்புக்கும் மோதலை ஏற்படுத்த வேண்டும் என்ற அரசியல் காழ்ப்புணர்வுடன் இருப்பதால், அரசு தலையிடுவது தவிர்க்கவியலாதது. அறநிலையத் துறை இந்தக் கோயில்களின் முழு பொறுப்பையும் ஏற்பது இயலாது என்ற போதிலும், திருவிழாக்களை மட்டுமே தீர்மானிப்பது, நடத்துவது, கண்

  காணிப்பது, திருவிழா முடியும்வரை காவல்துறையின் பாதுகாப்பை உறுதி செய்வது, கோயில் காணிக்கை வசூலில் செலவு போக மீதித்தொகையை கோயில் கணக்கில் சேர்ப்பது ஆகிய பணிகளை ஏற்பது காலத்தின் கட்டாயம்.

  அந்தந்த மாவட்ட ஆட்சியர் அல்லது டிஆர்ஓ, காவல் கண்காணிப்பாளர், அறநிலையத்துறை அதிகாரி ஆகிய மூன்று பேரை முதன்மையாகக் கொண்ட குழு, அந்தந்த சிறு கோயில்கள் சார்ந்த இரு தரப்பினரையும் அழைத்துப் பேசி, முதலிலேயே எல்லாவற்றையும் தீர்மானித்து, அதன்படி கோயில்விழா நடந்து முடிவதை உறுதிப்படுத்துவதைத் தவிர, வேறு வழி இருப்பதாகத் தெரியவில்லை.

  கோயில்கள் பெரும்பான்மையினருக்கு பக்திக்கான இடம். சிலருக்கு பதவி, பட்டம் பெறுவதற்கான இடம். பின்னவர் எண்ணிக்கை மிகமிகக் குறைவு. ஆனால் இவர்கள் மற்ற சாதாரண பக்தர்களுக்கு இடையூறாக மாறுகிறபோது, அரசு தலையிட்டே ஆக வேண்டும். ஜாதிய அரசியலை இவர்கள் முன்னெடுத்துச் செல்வதை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai