Enable Javscript for better performance
நமக்கு லாபமில்லை!- Dinamani

சுடச்சுட

  

  மாநிலங்களவையில் 122-ஆவது அரசியல் சட்டத் திருத்த மசோதா வெற்றிகரமாக நிறைவேறி இருக்கிறது. இதன் மூலம் நாடு தழுவிய அளவில் சரக்கு மற்றும் சேவை வரி என்கிற பெயரில் ஒரே அளவிலான வரி உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. முந்தைய வாஜ்பாய் தலைமையிலான அரசு 2000-இல் முன்மொழிந்த இந்த வரி சீரமைப்பு முடிவு, 16 ஆண்டுகளுக்குப் பிறகு எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன் மாநிலங்களவையில் நிறைவேறி இருப்பது, நரேந்திர மோடி அரசுக்குக் கிடைத்த வெற்றி என்பதில் ஐயமில்லை.

  உலகில் உள்ள 160 நாடுகளில், "ஒரே நாடு ஒரே வரி' என்று இருக்கும்போது, இந்தியாவில் மட்டும் மத்திய வரிகள், மாநிலத்துக்கு மாநிலம் வரிகள் என்று இருப்பது தங்களுக்கு இடைஞ்சலாக இருப்பதால் பன்னாட்டு வணிகக் கூட்டாண்மை (கார்ப்பரேட்) நிறுவனங்கள் கொடுத்த அழுத்தத்தின் விளைவுதான் இந்த சரக்கு மற்றும் சேவை வரி என்கிற வரிச் சீர்திருத்தத்தின் பின்னணி.

  ஜி.எஸ்.டி. என்று பரவலாக அழைக்கப்படும் சரக்கு மற்றும் சேவை வரி என்பது ஒரு விதமான மறைமுக வரி விதிப்பு. இதன் மூலம் தயாரிப்பு நிறுவனங்களும், வணிகர்களும் பல்வேறு வரி விதிப்பு அலுவலகங்களுக்குக் கையூட்டுக் கொடுக்க வேண்டிய நிர்பந்தம் விலகும் என்பது அவர்களது ஆறுதல். இதனால் பாதிக்கப்படப் போவது மாநில அரசுகளும் அதைவிட அதிகமாக சாமானியர்களும் என்பது குறித்து யாருமே கவலைப்படுவதாகத் தெரியவில்லை.

  ஜி.எஸ்.டி. என்பது மறைமுக வரியை அதிகரிக்கும். அதனால் ஏழை எளியவர்கள் பாதிக்கப்படுவார்கள். வித்தியாசமில்லாமல் சேவைக்கும் சரக்குக்கும் பணக்காரர்கள் கொடுக்கும் அதே வரியை ஏழைகளும் செலுத்தியாக வேண்டும். பணக்காரர்கள் பயன்படுத்தும் கார், ஏ.சி. உள்ளிட்ட அதிக வரிகளை உடைய பொருள்களுக்கு வரிகள் குறைந்து வெறும் 18% (இன்னும் முடிவாகவில்லை) மட்டும் வசூலிக்கப்படும். ஆனால் 5%, 6% என்று இருக்கும் சாமானியர்களின் பயன்பாட்டுப் பொருள்களுக்கும் இனி 18% வசூலிக்கப்படுமே, அது குறித்து ஏன் யாரும் வாய் திறப்பதில்லை?

  இந்தியா போன்ற வளர்ச்சி பெறும் நாடுகளில் வருமான வரி போன்ற நேரடி வரி வருவாயை விட, சேவை வரி, விற்பனை வரி உள்ளிட்ட மறைமுக வரி வருவாய்தான் அதிகம். வளர்ச்சியடைந்த நாடுகளில் அப்படியல்ல. இந்தியாவில் நேரடி வரி வருவாய் மொத்த வரி வருவாயில் 37.7% மட்டுமே. 62.3% வரி வருவாய் மறைமுக வரிகளிலிருந்துதான் கிடைக்கிறது. இந்த வரி வருவாய் குறையும்போது, அரசு எப்படி சமாளிக்கப் போகிறது?

  ஜி.எஸ்.டி. என்று வந்துவிட்டால், சேவை வரி, மதிப்புக் கூட்டு வரி, மத்திய விற்பனை வரி, நுழைவு வரி, கலால் வரி, பகட்டு வரி (லக்ஸுரி டாக்ஸ்) ஆக்ட்ராய் எனப்படும் மாநிலச் சுங்க வரி போன்ற வரிகள் அனைத்தும் அகற்றப்படும். இதற்கு பதிலாக மத்திய, மாநில, மாநிலங்களுக்கிடையிலான ஜி.எஸ்.டி. என்று மூன்று வரிகள் மட்டுமே இருக்கும். சரி, பல வரிகள் ஒட்டுமொத்தமாக அகற்றப்படுகிறதே, அந்த அலுவலகங்கள் மூடப்படுகிறதே, அந்த அலுவலர்களை என்ன செய்யப்போகின்றன மாநில அரசுகள்? வீட்டுக்கா அனுப்ப முடியும்? தேவையில்லாமல் சம்பளம் கொடுத்து வைத்துக் கொள்ளப்போகிறோமா?

  அரசு ஊழியர்களுக்கு வேலை இருக்காது என்பதற்காக இத்தனை வரிகள் மூலம் சாமானியர்கள் கஷ்டப்படுத்தப்பட வேண்டுமா என்கிற கேள்வி நியாயமானதுதான். அதே நேரத்தில், இந்த வரி வருவாயை மாநிலங்கள் இழக்கப் போகின்றனவே, அப்போது அவை தங்களது திட்டமிடாச் செலவினங்களுக்கு (நான் பிளான் எக்ஸ்பென்டிசர்) என்ன செய்யும் என்பது குறித்து யோசிக்க வேண்டாமா? ஐந்து ஆண்டுகளுக்கு மத்திய உதவி அளிக்கப்படும் என்கிறார்கள். அதற்குப் பிறகு?

  ஜி.எஸ்.டி. அறிமுகப்படுத்துவதன் மூலம் பெரிய தொழில் நிறுவனங்கள் பல்முனை வரிச் சுமைகளிலிருந்து விடுபடும் என்பது சரி. ஆனால், இதனால் பல சிறிய, நடுத்தரத் தொழில்கள் அழியப் போகின்றன. ஏற்கெனவே பல சிறு தொழிற்சாலைகள் மூடிக்கிடக்கின்றன. இதனால் லட்சக்கணக்கானவர்கள் வேலை இழந்திருக்கிறார்கள். இந்தியப் பொருளாதாரத்தின் 65% இந்தக் குறு, நடுத்தரத் தொழில்களின் பங்களிப்புதான் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.

  ஆரம்பத்தில் விலைகள் சற்று குறைவது போன்ற தோற்றம் காணப்படும். ஆனால், விரைவிலேயே அந்த நிலைமை மாறி விலைகள் கூடுமே தவிரக் குறையாது. இதுதான் விலைகள் குறித்த அனுபவ உண்மை. இதில் இன்னொரு மிகப்பெரிய அபாயமும் இருக்கிறது. பெரிய அளவில் வரி ஏய்ப்புக்கான வாய்ப்பு இதில் உண்டு. அதன் விளைவாகப் போட்டிப் பொருளாதாரம் (பாரலல் எகானமி) வலுப்பெறும் சாத்தியக்கூறு அதிகம்.

  ஐரோப்பியக் கூட்டமைப்பில் பல நாடுகள் இணைந்து ஒரே வரி விதிப்பு என்று நடைமுறைப்படுத்தியது போல இந்தியாவிலும் செய்தால் என்ன என்கிற சர்வதேச நிதியத்தின், உலக வங்கியின் கேள்விக்கு ஒரே பதில், இந்தியா, ஐரோப்பியக் கூட்டமைப்பல்ல என்பதுதான். மகாராஷ்டிரம், ஹரியாணா, தமிழ்நாடு போன்ற தொழில் துறையில் முன்னேறிய மாநிலங்களைக் கடுமையாக பாதிக்கப்போகிறது இந்த ஜி.எஸ்.டி. தொழில்வளம் இல்லாத மாநிலங்களையும்தான்!

  காங்கிரஸும், பா.ஜ.க.வும் "நான் அடிப்பதுபோல அடிக்கிறேன், நீ அழுவதுபோல அழு' என்று நாடகமாடி, அனைவர் கண்ணிலும் மண்ணைத் தூவி முழுமையான புரிதல் இல்லாமல் அரைவேக்காட்டுத்தனமாக இந்த ஜி.எஸ்.டி.யை மாநிலங்களவையில் நிறைவேற்றி இருக்கின்றன. இதனால் மத்திய அரசேகூட பாதிக்கப்பட இருக்கிறது என்பது போகப்போகத்தான் தெரியும்!

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai