சுடச்சுட

  

  இயற்கையின் சீற்றத்தால் மரணங்கள் ஏற்படுவதை நம்மால் தவிர்க்க முடியாது. மனிதத் தவறால் நேரிடும் விபத்து மரணங்களையும்கூட மன்னித்துவிடலாம். ஆனால் மானுட அலட்சியத்தால் நேரிடும் மரணங்களுக்கு யாரைப் பொறுப்பாக்குவது?

  மகாராஷ்டிர மாநிலம், மஹாத் என்ற இடத்தில் சாவித்ரி நதியின் மீது கட்டப்பட்டிருந்த பாலம் பெருவெள்ளத்தில் உடைந்து, ஆற்றோடு அடித்துச்செல்லப்பட்டதில் இரு பேருந்துகள், சில வாகனங்கள் அடித்துச்செல்லப்பட்டன. 42 பேர் காணாமல் போனதாக சொல்லப்படும் இந்த சம்பவத்தில் 20 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

  ஆற்றில் விழுந்த பேருந்து, கார் இவற்றை கிரேனில் சக்திவாய்ந்த காந்தத்தை பொருத்தித் தேடுகிறார்கள். இரு நாள்களாக கழிமுகம் வரை இரு கரைகளிலும் சடலங்களைத் தேடிக்கொண்டிருக்கிறது ஒரு குழு. தேசியப் பேரிடர் மீட்புக் குழுவுக்கு உதவுதற்காக மீனவர் குழாம் ஒன்றும் வந்திருக்கிறது. இறந்தவர்கள் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் கருணைத்தொகை அறிவித்துள்ளது மகாராஷ்டிர அரசு. நீதிவிசாரணையும் நடத்தப்போகிறார்களாம்!

  ஒரேயொரு நடவடிக்கை எடுத்திருந்தால் இத்தனை கஷ்டங்களையும் செலவுகளையும் இல்லாமல் செய்திருக்க முடியும். பாலம் பழுது; புதுப்பாலத்தை பயன்படுத்தவும் என்ற ஒரேயொரு அறிவிப்புப் பலகை இருந்திருந்தால் அது இந்த மரணங்களைத் தடுத்திருக்கும். அல்லது ஒரு காவலரை நிறுத்தி வைத்திருந்தாலும் போதும்.

  இந்தப் பாலம் பிரிட்டிஷ் ஆட்சியில் கட்டப்பட்டு நூறு ஆண்டுகளை கடந்துவிட்டது. பாலம் உறுதியில்லாமல் இருக்கிறது என்று அண்மையில் இதனைப் பார்வையிட வந்திருந்த பிரிட்டிஷ் பொறியாளர்கள் கூறியதாக உள்ளூர் மக்கள் சொல்கிறார்கள். இந்தப் பாலத்தை சோதனையிட்ட பொதுப்பணித் துறை அதிகாரிகளோ, பாலம் உறுதியாக இருக்கிறது என்று சான்று அளித்திருக்கிறார்கள்.

  ஒரு பாலத்தின் வலுவை அளவிடுதல் என்பது, சாதாரண சூழலில் அதன் மீது எத்தனை கனரக வாகனங்கள் எந்த அளவு பளுவுடன் சென்றால் அந்தப் பாலம் தாங்கும் என்பதைக் கண்டறிவது மட்டும்தானா? அந்த ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் அந்த வெள்ளத்தின் விசை எத்தனை உயரத்தில் என்ன அளவில் இருக்கும், அந்த வேளையில் பாலத்தின் மீது கனரக வாகனங்கள் சென்றால் மேலும் வலுவிழக்க நேரும் என்றெல்லாம் கணக்கிட்டுச் சொல்வதும் அவர்களது கடமையல்லவா? இந்த ஆற்றில் இந்த அளவுக்கு வெள்ளம் வரும் என்று எதிர்பார்க்கவில்லை என்று சொல்லப்படும் பதில் சரியானதா? ஏற்புடையதா?

  பக்கத்திலேயே ஒரு புதிய பாலம் வலுவான நிலையில் இருப்பதால், ஒரு வழித்தடமாக இருக்கும் பாதையை மாற்றி, புதிய பாலத்தை இருவழித்தடமாக மாற்ற எத்தனைக் காலமாகும்? ஒரு காவலர் போதுமே. பாலம் பழுது என்ற ஒரு பலகை போதுமே.

  நெடுஞ்சாலையில் உள்ள பழைய பாலங்களில் மட்டும்தான் இந்த பிரச்னை என்றில்லை. இந்தியாவில் உள்ள ரயில்வே பாலங்களில் 40% நூறு ஆண்டுகளைக் கடந்தவை. அதாவது சுமார் 1.27 லட்சம் ரயில் பாலங்களில் 51,000 பாலங்கள் நூறு ஆண்டுகளைக் கடந்தவை. இவை அனைத்தும் பழுதடைந்தவை (Dilapidated) அல்லது பாதுகாப்பற்றவை (Unsafe)  என்று அறிவிக்கப்படவில்லை. கவலைக்குரிய பாலங்கள் (Distressed) என்றுதான் குறிப்பிடப்படுகின்றன. இவற்றில் மிகச் சில பாலங்களே பழுதுபார்க்கப்பட்டுள்ளன. அல்லது கைவிடப்பட்டு, புதிய பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. ரயில்வே நிதிநிலை அறிக்கையில் பாலங்களைப் புனரமைக்கும் திட்டத்துக்கு அதிக கவனம் தரப்படுவதும் இல்லை.

  பிரிட்டிஷ் ஆட்சியில் கட்டப்பட்ட பாலங்களாவது 100 ஆண்டுகளைக் கடந்தும் நிற்கிறது. ஆனால் சுதந்திர இந்தியாவில், நம் அரசியல்வாதிகளின் பினாமிகள் கட்டிய பாலங்கள் பலவும் மோசமான நிலையில்தான் உள்ளன. அண்மையில் சென்னை மதுரவாயல் அருகே ஒரு புதுப்பாலம் கூவம் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டது.

  இதேபோன்று, புறநகர்ப் பகுதிகளில் ஆறு, வாய்க்கால்களில் உள்ள தரைப்பாலங்களை மக்கள் கடக்கும்போது வெள்ளத்தில் அடித்துச்செல்லப்படும் சம்பவங்களும் ஒவ்வொரு மழைக்காலத்திலும் நடந்துகொண்டிருக்கிறது. தரைப்பாலங்களில் எந்த அளவுக்கு (உயரத்துக்கு) வெள்ளம் போகிறது என்பதை மக்கள் அறிவதற்காக தரைப்பாலத்தின் ஓரமாக இரும்புத் தண்டவாளம் நிறுத்தப்பட்டிருக்கும். அதுதான் ஆற்றுப்படுகையில் ஓடும் வெள்ளத்தின் அளவுக்குறியீடு. ஆனால் அந்த இரும்புத் தண்டவாளங்கள் திருடப்படுகின்றன. வெள்ளத்தின் உயரம், நதியின் விசை தெரியாத மக்கள் வெள்ளத்தின் தீவிரத்தன்மை தெரியாமல் இறங்கி, தண்ணீரில் அடித்துச் செல்லப்படுகிறார்கள்.

  தற்போது நேர்ந்துள்ள விபத்தைக் கருத்தில் கொண்டாவது அனைத்து பாலங்களையும் சரிபார்க்க வேண்டும். அவற்றின் திறன், வெள்ளக்காலத்தில் எந்த அளவுக்கு மேலாக வெள்ளம் சென்றால் அந்தப் பாலத்தைப் பயன்படுத்தக்கூடாது என்பதைக் குறிக்கும் வகையில் பாலத் தூண்களில் சிவப்பு வண்ணம் பூசுதல், அது போஸ்டர்களால், அரசியல் விளம்பரங்களால் மறையாதபடி கண்காணித்தல் போன்றவை அவசியம். தரைப்பாலங்களில் வெள்ளத்தின் உயரத்தைக் குறிக்கும் இரும்புத் தண்டவாளங்கள், அல்லது கான்கிரீட் தூண்கள் எப்போதும் இருக்கும்படி பார்த்துக்கொள்வதும் அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளின் கடமை.

  மத்திய அரசானாலும் மாநில அரசுகளானாலும் புதிய பாலங்களும் மேம்பாலங்களும் கட்டுவதில் காட்டும் அக்கறையை ஏற்கெனவே கட்டப்பட்ட பாலங்களை பாதுகாப்பதிலும் புனரமைப்பதிலும் காட்டுவதில்லை. இதற்கு என்ன காரணம் என்பது சொல்லி தெரிய வேண்டியதில்லை. மஹாத் சம்பவம் ஆட்சியாளர்களின் கண்களை திறக்கட்டும்!

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai