சுடச்சுட

  

  நேபாளத்தில் முன்னணி மாவோயிஸ்ட் தலைவரான "பிரசண்டா' என்று அழைக்கப்படும் புஷ்ப கமல் தாஹால் கடந்த புதன்கிழமையன்று மீண்டும் பிரதமராகப் பதவி ஏற்றிருக்கிறார். நேபாளப் பிரதமராக இருந்த கே.பி. சர்மா ஓலி பதவி விலகியதால் ஏற்பட்ட அரசியல் நிலையற்ற தன்மை இப்போது முடிவுக்குக் கொண்டுவரப்பட்டிருக்கிறது.

  1996 முதல் 2006 வரையிலான மாவோயிஸ்ட் கலவரங்களின் விளைவாக 240 ஆண்டு பழமையான மன்னராட்சி நேபாளத்தில் முடிவுக்கு வந்தது. அது ஆரோக்கியமான மக்களாட்சி முறைக்கு வழிகோலும் என்கிற எதிர்பார்ப்பு ஏனோ நிறைவேறவில்லை. கடந்த 26 ஆண்டுகளில் 24 பிரதமர்களை நேபாளம் சந்தித்திருக்கிறது. ஆனால், இன்னும்கூட நிலையான ஆட்சியை யாராலும் அமைக்க முடியாத நிலைதான் தொடர்கிறது.

  அரசமைப்புச் சட்டம் வடிவமைத்து அறிவிப்பதற்குப் பல தடவை நாள் குறித்தும்கூட அது தள்ளிப் போய்க்கொண்டே இருந்தது. பல கெடுக்களுக்குப் பிறகு அரசமைப்புச் சட்டம் உருவானபோது, அது நேபாளத்தின் மதேசிகளின் உணர்வுகளைப் பிரதிபலிப்பதாக அமையவில்லை. அவர்கள் தங்களுக்குப் போதுமான இடங்களை அரசின் எல்லா மட்டங்களிலும் உறுதிப்படுத்தக் கோரி போராட்டத்தில் இறங்கினர். நேபாளத்தில் கூட்டாட்சி முறையை உறுதிப்படுத்தக் கோரினர்.

  கே.பி. சர்மா ஓலியின் பதவி விலகல் எதிர்பார்த்த ஒன்றுதான். பிரதமராவதற்காக அவர் அளித்திருந்த வாக்குறுதிகள் அனைத்தையும் காற்றில் பறக்கவிட்ட பிறகும் அவரை ஆதரித்த மாவோயிஸ்டுகளும் ஏனைய கூட்டணிக் கட்சிகளும் அவரைத் தொடர்ந்து ஆதரிக்கும் என்று அவர் எதிர்பார்க்க முடியாது. மலைவாழ் குடிமக்களுக்கும், இந்திய எல்லையை ஒட்டிய சமவெளிப் பிரதேசங்களில் வாழும் மதேசிகள் என்று அழைக்கப்படும் மக்களுக்கும் இடையே ஓலியின் ஆட்சியில் மிகப்பெரிய இடைவெளி உருவாக்கப்பட்டு விட்டது. மதேசிகளின் போராட்டத்தை அவர் கையாண்ட விதம்தான் அவரது வீழ்ச்சிக்கு முக்கியமான காரணம்.

  நேபாளத்தின் புதிய அரசமைப்புச் சட்டத்தின்படி, தங்களுக்குப் போதிய பிரதிநிதித்துவம் தரப்பட வேண்டும் என்பது மதேசிகளின் கோரிக்கை. அதை ஓலி அரசு பொருள்படுத்தவில்லை என்பதால்தான் மதேசிகள் இந்திய - நேபாள எல்லையை முடக்கி, எந்தப் பொருளும் ஏனைய நேபாளப் பகுதிகளுக்குக் கிடைக்காமல் செய்தனர். அவர்களது ஐந்து மாத பொருளாதாரத் தடையை, பேச்சுவார்த்தைக்கு அழைத்து முடிவுக்குக் கொண்டுவராமல், மதேசிகள் இந்திய அரசால் தூண்டிவிடப்படுவதாக ஒரு தோற்றத்தை ஏற்படுத்த முற்பட்டார் முன்னாள் பிரதமர் ஓலி.

  அனைவரையும் அரவணைத்துச் செல்ல ஓலி முயலவில்லை என்பது மட்டுமே அவரது வீழ்ச்சிக்குக் காரணமல்ல. நேபாளத்தையே முடக்கிப்போட்ட பூகம்பத்திற்குப் பிறகு நிவாரண வேலைகளை முடுக்கிவிட்டு, சீரமைப்புப் பணிகளை மேற்கொள்வதில் அவரது அரசு மெத்தனமாகச் செயல்பட்டதும் மக்கள் மத்தியில் அவரது செல்வாக்கு வீழ்ச்சியடைய இன்னொரு காரணம்.

  இரண்டாவது முறையாக நேபாளத்தில் பிரதமராகப் பதவி ஏற்றிருக்கும் நேபாள கம்யூனிஸ்ட் - மாவோயிஸ்ட் சென்டர் கட்சியின் தலைவர் பிரசண்டா மூன்று முக்கியமான பிரச்னைகளுக்குத் தீர்வு கண்டாக வேண்டும். இந்த மூன்று பிரச்னைகள்தான் ஓலியின் வீழ்ச்சிக்குக் காரணமாக அமைந்தன என்பதால், உடனடியாக பிரதமர் பிரசண்டா அவற்றில் கவனம் செலுத்தியாக வேண்டும்.

  முதலாவதாக, மதேசிகளின் பிரச்னைக்கு பேச்சுவார்த்தை மூலம் நியாயமான தீர்வு கண்டாக வேண்டும். அவர்களுக்கு முறையான அரசமைப்புச் சட்ட உத்தரவாதங்களும், அங்கீகாரங்களும், ஆட்சி அமைப்பில் எண்ணிக்கைக்கேற்ற பங்களிப்பும் தரப்பட்டாக வேண்டும். இரண்டாவதாக, நிர்வாக இயந்திரத்தை முடுக்கிவிட்டு ஏப்ரல் 2015-இல் நேபாளத்தை சீர்குலைத்த பூகம்பத்தின் பாதிப்புகளை சரிசெய்தாக வேண்டும். மூன்றாவதாக, ஓலியின் ஆட்சியில் ஏறத்தாழ சிதைந்து போயிருக்கும் இந்திய - நேபாள நட்புறவை மீண்டும் வலுப்படுத்திப் பழைய நிலைமை ஏற்படச் செய்ய வேண்டும்.

  நேபாள மக்கள்தொகையில் பாதிக்கும் மேற்பட்ட எண்ணிக்கை பலத்தில் இருக்கும் மதேசிகளைப் புறக்கணித்துவிட்டு, நிலையான ஆட்சியை அமைத்துவிட முடியாது. இந்திய எல்லையை ஒட்டிய சமவெளிப் பிரதேசத்தில் வாழ்கிறார்கள் என்பதாலும், அவர்களுக்கும் இந்தியாவில் வாழும் மக்களுக்கும் நெருங்கிய உறவு இருப்பதாலும், அவர்கள் நேபாள தேசத்தவர்கள் அல்ல என்று ஒதுக்கிவிட முடியாது. இந்தப் பிரச்னையை புதிய பிரதமர் எந்த அளவு சாமர்த்தியமாகக் கையாள்கிறார் என்பதில்தான் அவரது வெற்றி அடங்கி இருக்கிறது.

  இந்தியாவையும், சீனாவையும் எப்படி அவர் நட்புறவுடன் வைத்துக்கொள்ளப் போகிறார் என்பது அடுத்த பெரிய சவால். ஓலி செய்ததுபோல, வெளிப்படையாகச் சீனாவைக் காட்டி இந்தியாவை பயமுறுத்தும் அணுகுமுறையை பிரதமர் பிரசண்டா கடைப்பிடிக்கமாட்டார் என்று எதிர்பார்க்கலாம். கொள்கை ரீதியாக பிரசண்டா சீனாவுடன் நெருக்கமானவராக இருந்தாலும், இந்தியாவில் படித்து, இந்தியக் கலாசாரச் சூழலில் வாழ்ந்த பிரசண்டாவுக்கு பூகோள, சரித்திர ரீதியாக நேபாளத்துக்கும் இந்தியாவுக்குமிடையேயான நட்பும் உறவும் எத்தகையது என்பது நன்றாகவே தெரியும்.

  கடந்த முறை ஆட்சியில் இருந்தபோது செய்த தவறுகள் அவருக்கு நல்ல பாடமாக அமைந்திருக்கும் என்று நம்பலாம். எந்தவொரு முடிவும் நல்லதொரு தொடக்கத்துக்குக் காரணமாக அமையக்கூடும். பிரசண்டாவின் ஆட்சியில் தவறுகள் திருத்தப்பட்டு, நேபாளத்தில் புதியதொரு சரித்திரம் படைக்கப்படும் என்று எதிர்பார்ப்போமாக!

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai