சுடச்சுட

  

  மத்திய திட்டக்குழுவுக்கு மாற்றாக அமைக்கப்பட்டுள்ள நீதி ஆயோக், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள 74 பொதுத்துறை நிறுவனங்கள் நஷ்டத்தில் செயல்படுவதாகப் பட்டியலிட்டுள்ளது. இதில் எட்டு நிறுவனங்களை மூடுவதைத் தவிர வேறு வழியில்லை என்றும் பரிந்துரை செய்துள்ளது.

  இது பரிந்துரை மட்டுமே. இதேபோன்ற பரிந்துரைகள் முந்தைய அரசுகளுக்கும் அப்போது அமைக்கப்பட்ட குழுக்களால் செய்யப்பட்டிருக்கின்றன. இந்தப் பட்டியலில் உள்ள நிறுவனங்களில் எவற்றையெல்லாம் மீட்டெடுத்து லாபத்தில் இயக்க முடியும், எவற்றின் பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்வதன் மூலம் சீர் செய்ய முடியும், எவை சரிசெய்ய வாய்ப்பில்லாத நிலையில் மூடப்பட வேண்டும் என்று பட்டியல் அளிப்பது வழக்கமான ஒன்றுதான்.

  இத்தகைய பரிந்துரைப் பட்டியல் வெளியானவுடன் எதிர்க்கட்சிகள் தனித்தனியாக அறிக்கைவிடுவதோடு, ஆலையை மூடக்கூடாது, தனியாருக்குப் பங்குகளை விற்கக்கூடாது என்று அந்த நிறுவன ஊழியர்களின் குடும்பத்தோடு சேர்ந்து அறவழிப் போராட்டங்களையும் நடத்தும். இத்தகைய அழுத்தம் காரணமாக அரசும் தனது முடிவைத் தள்ளிப் போட்டுக்கொண்டே வரும்.

  தற்போதும் நீதி ஆயோக் பரிந்துரையை மத்திய அமைச்சரவை பரிசீலித்து எடுக்கும் நடவடிக்கைக்குப் பிறகுதான், இந்த பரிந்துரைகளில் எத்தனை ஏற்கப்படும், எத்தனை நிறுவனங்கள் மூடப்படப் போகின்றன என்பதெல்லாம் தெரியும். பட்டியல் வெளியானவுடன் அறிக்கைகளும் வெளிவரத் தொடங்குவது எதிர்பாராதது அல்ல.

  தமிழ்நாட்டைப் பொருத்தவரை சென்னை ஃபெர்டிலைசர்ஸ் நிறுவனத்தை மீட்டெடுக்க முடியும்; ஆனால், உதகை இந்துஸ்தான் போட்டோ நிறுவனத்தை மூடுவதைத் தவிர வேறு வழி இல்லை; சேலம் தேனிரும்பு ஆலையைப் பொருத்தவரை தனியாருக்குப் பங்குகளை விற்று, அவர்களின் கட்டுப்பாட்டில் விட்டுவிடலாம் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் உள்ள விஸ்வேஸ்வரய்யா இரும்பு, தேனிரும்பு ஆலையையும்கூட தனியாருக்கு விற்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதுவும் கடந்த பல ஆண்டுகளாகவே பரிசீலனையில் உள்ள யோசனைதான்.

  இப்போது, சேலம் தேனிரும்பு ஆலையை மூடக்கூடாது என்கின்ற அறிக்கைப் போரில் தமிழக அரசியல் கட்சிகள் இறங்கியுள்ளன. தி.மு.க., பா.ம.க., த.மா.கா., சி.பி.ஐ., சி.பி.எம்., ம.தி.மு.க. என எல்லா கட்சிகளும் அறிக்கை வெளியிட்டாகிவிட்டது. அனைவருமே சேலம் தேனிரும்பு ஆலையை தனியாருக்குத் தாரை வார்க்கக்கூடாது என்று வலியுறுத்துகின்றனர்.

  1970-ஆம் ஆண்டு 2,000 தொழிலாளர்களுடன் தொடங்கப்பட்ட, சேலம் தேனிரும்பு ஆலை கடந்த ஆறு ஆண்டுகளாக நஷ்டத்தில் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. 2011-12இல் ரூ.100 கோடியாக இருந்த நஷ்டம், 2015-16இல் ரூ.349 கோடியாக உயர்ந்துள்ளது. இத்தனைக்கும் சேலம் தேனிரும்புக்கு மிகப்பெரும் வரவேற்பு இருக்கிறது. ஆனாலும், வரவேற்புக்கு ஏற்ப உற்பத்தி செய்யப்படுவதில்லை. ஊழல், அதிக பணியாளர்கள் என நஷ்டத்துக்கு காரணங்கள் சொல்லப்படுகின்றன. எனவே தனியாருக்கு 51% பங்குகளை விற்று, ஆலையை அவர்களிடம் ஒப்படைத்துவிடுவது என்று சில ஆண்டுகளுக்கு முன்பே தீர்மானிக்கப்பட்டது. ஆனால், அரசியல் அழுத்தம் காரணமாக அது கைவிடப்பட்டது. "புலி வரு

  கிறது புலி' என்பதுபோல் அல்லாமல் இந்த முறை நிஜமாகவே தனியாருக்கு பங்குகள் விற்கப்படக்கூடும் என்று கருத வாய்ப்புள்ளது.

  பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்வதன் மூலம் அரசு ரூ.56,500 கோடியை திரட்டும் என்று நிதிநிலை அறிக்கையின்போது நிதியமைச்சர் அருண் ஜேட்லி மிகத் தெளிவாக தெரிவித்திருந்தார். ஆகவே, தொடர்ந்து பெருநஷ்டம் காட்டும் நிறுவனங்களை மூடுவதும், பங்குகளை விற்பதும் தவிர்க்க

  வியலாதது என்றுதான் தோன்றுகிறது. இந்த முறை அரசியல் அழுத்தம் பலன் அளிப்பது அரிதினும் அரிது.

  மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பொதுத்துறை நிறுவனங்களில் மட்டுமே இந்த நிலை என்றில்லை. மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பொதுத்துறை நிறுவனங்களில் பலவும்கூட நஷ்டத்தில் இயங்குகின்றன என்பதைச் சுட்டிக்காட்டி கண்டித்து வருகிறது பொதுக்கணக்குத் தணிக்கைக் குழு (சி.ஏ.ஜி.). இதில் எந்த மாநிலமும் விலக்கல்ல.

  தமிழ்நாட்டைப் பொருத்தவரை சி.ஏ.ஜி. அறிக்கை 2015-இன்படி, தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள 63 நிறுவனங்கள் மூலம் அரசுக்கு கிடைத்த வருவாய் ரூ.70,673 கோடி; நஷ்டம் ரூ.38,233 கோடி. இதில் மிக அதிகமான நஷ்டத்தை ஏற்படுத்துவது மின் உற்பத்தி வாரியம்தான். இலவச மின்சாரம் மற்றும் சலுகை கட்டணம் அனைத்துக்கும் அரசு ஈட்டுத்தொகை செலுத்திய பிறகும் ரூ.13,321 கோடி நஷ்டம். முழுக்க முழுக்க அதிகாரிகள், தொழிலாளர்கள் சார்ந்த நிர்வாக குறைபாடுதான் இதற்குக் காரணம்.

  அதேபோன்று, இரண்டாவதாக அதிக நஷ்டம் ஏற்படுத்தும் நிறுவனம் போக்குவரத்துக் கழகங்கள். ரூ.856 கோடி நஷ்டம். ஒரே வழித்தடத்தில் ஓடும் தனியார் பேருந்துகள் பெருலாபம் சம்பாதிக்கும்போது, அரசுப் பேருந்துகள் மட்டும் நஷ்டத்தில் இயங்குகின்றன. தமிழ்நாட்டில் மட்டுமல்ல, கேரளம், ஆந்திரம், கர்நாடகம் என எல்லா மாநிலங்களிலும் இதே நிலைமைதான். தவறு எங்கே இருக்கிறது என்பது சொல்லித்தெரிய வேண்டியதில்லை

  பொதுத்துறை நிறுவன ஊழியர்களை நிறுவனத்தில் குறிப்பிட்ட விழுக்காடு முதலீட்டுக்கு பங்குதாரர்களாக மாற்றிவிடுவதும், ஊதியத்தை செயல்திறன் சார்ந்ததாக மாற்றுவதும்தான் இதற்குத் தீர்வாக இருக்கும். மக்கள் வரிப்பணத்தில் பொதுத் துறை நிறுவனங்கள் தொடர்ந்து நஷ்டத்தில் நடத்தப்படுவதை யாரும் நியாயப்படுத்த முடியாது!

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai