Enable Javscript for better performance
சுதந்திரக் கனவு!- Dinamani

சுடச்சுட

  

  இந்தியா தனது 70-ஆவது சுதந்திர தினத்தை இன்று கொண்டாடுகிறது. தில்லி செங்கோட்டையில் இந்தியாவின் 14-ஆவது பிரதமரான நரேந்திர மோடி மூவர்ணக் கொடியை ஏற்றி வைத்து சுதந்திர தின உரையாற்றப் போகிறார். இந்த நேரத்தில், இந்தியாவின் முதல் பிரதமர் பண்டித ஜவாஹர்லால் நேரு, அரசியல் நிர்ணய சபையில் ஆகஸ்ட் 14, 1947 நள்ளிரவில் நிகழ்த்திய அந்த உரை நினைவுக்கு வருகிறது.

  "முன்பு எப்பொழுதோ நாம் விதியுடன் செய்து கொண்ட அந்த ஒப்பந்தத்தை, முழுமையாக இல்லாவிட்டாலும் கணிசமாக நிறைவேற்றும் நேரம் கைகூடி இருக்கிறது. இன்னும் சில நொடிகளில், கடிகாரம் நள்ளிரவை அறிவிக்கும் அந்த வேளையில், உலகமே உறங்கிக் கொண்டிருக்கும் நேரத்தில் இந்தியா உயிர்த்தெழுந்து, சுதந்திரக் காற்றை சுவாசிக்க இருக்கிறது.

  இதுபோல, பழையதைத் துறந்து புதியதொரு பாதையில் அடியெடுத்து வைக்கும் தருணம், எப்போதாவதுதான் சரித்திரத்தில் அமைகிறது. ஒரு காலகட்டம் முற்றுப் பெறுகிறது. நீண்டகாலமாக ஒடுக்கப்பட்ட, அடக்கி வைக்கப்பட்ட தேசத்தின் ஆன்மா விழித்தெழுந்து தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது. அப்படிப்பட்ட இந்தத் தருணத்தில், இந்தியாவுக்காகவும், அதன் மக்களுக்காகவும், இன்னும் சொல்லப் போனால் ஒட்டுமொத்த மனித குலத்துக்காகவும் நம்மை அர்ப்பணிக்க நாம் உறுதி எடுத்து கொள்வோம்' என்று தொடங்குகிறது அந்த உரை.

  பண்டித ஜவாஹர்லால் நேருவின் அந்த உரையில் இருந்த நம்பிக்கை, எதிர்பார்ப்பு, ஆனந்தம், அதேநேரத்தில் அதில் பொதிந்துக் கிடந்த லட்சிய வெறியும் கடமையுணர்வும், இப்போதும் கூட மெய்சிலிர்க்க வைக்கின்றன. "நாம் கொண்டாடும் இந்த மகிழ்ச்சி என்பது முதல் அடி மட்டுமே, மிகப்பெரிய வாய்ப்புகள் நமக்குக் காத்திருக்கின்றன. வெற்றிகளும் சாதனைகளும் நமக்காகக் காத்திருக்கின்றன. ஆனால் அதே நேரத்தில், சுதந்திரமும் அதிகாரமும் தன்னுடன் பொறுப்புகளையும் கடமைகளையும் உள்ளடக்கியவை என்பதை நாம் மறந்துவிடக் கூடாது' என்று தொடரும் அவரது உரை.

  அன்று இந்திய விடுதலைக்காகத் தங்கள் ரத்தத்தையும், வியர்வையையும், சொத்து சுகத்தையும் துறந்த தியாகிகளின் கனவுகள் நனவாகி இருக்கிறதா என்று கேட்டால், "ஆமாம்' என்றோ "இல்லை' என்றோ தெளிவான பதிலைச் சொல்ல முடியாத நிலையில் நாம் இருக்கிறோம். இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு விடுதலை பெற்ற எண்பதுக்கும் மேற்பட்ட உலக நாடுகளில், இன்றும் தொடர்ந்து சுதந்திர நாடாகவும், அன்று ஏற்றுக்கொண்ட அதே அரசமைப்பின் அடிப்படையில் அமைந்த நாடாளுமன்ற ஜனநாயகமாகவும் இருக்கும் ஒரே தேசம் நமது பாரதப் புண்ணிய பூமி மட்டுமே. அதுதான் ஒரே ஆறுதல்.

  விடுதலை பெற்றபோது நமது மக்கள்தொகை வெறும் 36 கோடி. இப்போது 127 கோடி. ஆனால் அப்போது 70% மேற்பட்டவர்கள் கல்வியறிவு இல்லாதவர்கள். எழுதப்படிக்கத் தெரியாதவர்கள்தான் பெரும்பாலானவர்கள். இன்று அதுவா நிலைமை?

  1947-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26-ஆம் தேதி, இந்தியாவின் முதல் நிதியமைச்சரான ஆர்.கே. சண்முகம் செட்டி தாக்கல் செய்த இடைக்கால நிதிநிலை அறிக்கையின்படி இந்தியாவின் மொத்த வரி வருவாய் வெறும் ரூ.171.15 கோடி மட்டுமே. 2016-17இல் இந்திய அரசின் மொத்த வருவாய் ரூ.13,77,022 கோடி. இது பணவீக்கத்தினால் ஏற்பட்டதல்ல. பொருளாதார வளர்ச்சியால் ஏற்பட்டிருக்கும் சாதனை.

  சராசரியாக ஆண்டுக்கு 7.6% வளர்ச்சியுடன் பீடு நடைபோடும் இந்தியப் பொருளாதாரம், 30 ஆண்டுகளுக்குப் பிறகு விரைவிலேயே சீனாவை முந்திவிடும் என்கின்றன மேலைநாட்டுப் புள்ளிவிவரங்கள். அந்நிய நேரடி முதலீடு 48% அதிகரித்திருக்கிறது. அந்நியச் செலாவணிக் கையிருப்பு இதுவரை இல்லாத அளவில் 363.12 பில்லியன் டாலராக உயர்ந்திருக்கிறது. மக்களின் வாழ்க்கைத்தரம் அதிகரித்திருக்கிறது. வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ளவர்கள் எண்ணிக்கை குறைந்திருக்கிறது.

  எல்லாம் சரி. எழுபது ஆண்டுகளுக்கு முன்னால், சுதந்திரம் அடைந்தபோது நாம் கண்ட கனவு நனவாகி விட்டதா என்றால் இல்லை. இன்னும் அனைவருக்கும் உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க வீடு, செய்யத் தொழில், கல்வி என்பதெல்லாம் நிறைவேறவே இல்லை. அதெல்லாம் ஏன், அனைவருக்கும் கழிப்பறை என்கிற அடிப்படை நாகரிகத் தேவையைக்கூட இன்னும் நிறைவேற்றியபாடில்லை.

  இன்னும் நாடாளுமன்ற ஜனநாயகமாகத் தொடர்கிறோம். பண பலத்தையும், அதிகார பலத்தையும் மீறி வாக்குச் சீட்டுகளின் மூலமாக மாற்றத்தை ஏற்படுத்த முடிகிறது என்பது உண்மை. ஆனால், அனைவரும் தேர்தலில் போட்டி போடும் நிலைமையா நிலவு கிறது? இப்படி எத்தனையோ குறைகள்.

  வளர்ச்சிப் பாதையில் முன்னேற்றம் பற்றி சிந்தித்து செயல்பட வேண்டிய ஒரு நாடு, மாட்டுக் கறிப் பிரச்னையிலும், ஹரிஜனங்களுக்கும் சிறுபான்மையினருக்கும் எதிரான தாக்குதல்களை நடத்தும் துர்ஜன சமுதாயமாகத் தொடர்கிறதே, தேசப்பிதா காந்தி மகான் இருந்தால் ஏற்றுக்கொண்டிருப்பரா? எழுபதாவது சுதந்திர தினத்தில் அடியெடுத்து வைக்கும் இந்த நேரத்தில், தனது முதல் சுதந்திர உரையில் பண்டித நேரு கூறிய வார்த்தைகள்தாம் நினைவுக்கு வருகின்றன.

  அன்றைய முதல் சுதந்திர தின உரையின் முடிவில் பிரதமர் நேரு கூறுவார் - "சுதந்திர இந்தியா என்கிற உன்னத மாளிகையை, அதன் அத்தனை குழந்தைகளும் சம உரிமையுடனும் ஒற்றுமையுடனும் வாழ, கட்டமைக்க வேண்டிய நேரம் இது!'

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai