சுடச்சுட

  

  அரசாங்கம் ரயிலில் அனுப்பும் ஐந்து லட்சம் டாலர் மதிப்புள்ள தங்கத்தைக் கடத்தி வந்து மெக்ஸிகன் புரட்சியாளர்களின் போராட்டத்துக்கு அளிப்பதுதான் 1969-ஆம் ஆண்டில் வெளியான "ஃபைவ் மென் ஆர்மி' என்கிற ஆங்கிலத் திரைப்படத்தின் கதை. அதுபோல இருக்கிறது சமீபத்தில் நடத்தப்பட்டிருக்கும் ரயில் கொள்ளை.

  சேலத்திலிருந்து சென்னைக்கு ரயில் மூலம் ரிசர்வ் வங்கிக்குக் கொண்டுவரப்பட்ட பல கோடி ரூபாயில் சுமார் ரூ.5.75 கோடியை ஒரு கும்பல், ரயில் பெட்டியின் மேல் தளத்தில் துளையிட்டுத் திருடியுள்ளது. இவ்வாறு வங்கிப் பணம் ரயிலில் கொள்ளையடிக்கப்படுவது இதுவே முதல் முறை என்று சொல்லப்படுகிறது.

  எந்த இடத்தில் இந்த சம்பவம் நடந்திருக்க வேண்டும், எத்தனை பேர் ஈடுபட்டிருக்க முடியும், பணத்தை ரயில் ஓடும்போது எடுத்தார்களா அல்லது ரயில் நிற்கும்போது எடுத்தார்களா என்றெல்லாம் போலீஸார் விசாரணை நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.

  இந்தக் கொள்ளையை யார், எப்படி, எங்கே நடத்தினார்கள் என்பது ஒருபுறம் இருக்கட்டும். இத்தனை ஆண்டுகளாக எந்தப் பிரச்னையோ சிக்கலோ இல்லாமல் பணம் பல்வேறு இடங்களுக்குக் கோடி கோடியாக எடுத்துச் செல்லப்பட்டுவந்த நிலையில், இவ்வாறு பணம் எடுத்துச் செல்லப்படுவதை இந்தியா முழுவதற்கும் அறிவித்த பெருமை நமது தமிழக அதிகாரிகளுக்கும் ஊடகங்களுக்குமே சேரும்.

  ஏ.டி.எம். இயந்திரங்களில் பணம் நிரப்பச் செல்லும் தனியார் நிறுவனங்களே இரண்டு பாதுகாப்பு வீரர்களுடன் செல்லும்போது, ரூ.570 கோடியை கொள்ளையர்களுக்கு சந்தேகம் ஏற்படாத வகையில் (அந்த லாரி டிரைவர்களே அறிந்திருப்பார்களா என்பதும் சந்தேகம்தான்), வங்கிகள் பத்திரமாக அனுப்பிவந்த சூழலை அம்பலப்படுத்தியது தமிழகம்தான்.

  கோவையிலிருந்து கொண்டுவரப்பட்ட ரூ.570 கோடி பணத்தை தேர்தல் பறக்கும்படையினர் சோதனையிட்டதும், அதைப் பிடித்து விசாரித்ததும் சரிதான். ஆனால் அது யாருடைய பணம் என்பதை உறுதிப்படுத்தும் முன்பாகவே பத்திரிகைகளுக்குத் தீனி போட்டது மிகப்பெரிய தவறு. அதுவே இந்த ரயில் கொள்ளைக்குக் காரணமாக இருந்தால்கூட வியப்படைய ஒன்றுமில்லை.

  தேர்தல் நேரத்தில் கண்டெய்னர் லாரிகளில் பிடிபட்ட பணம் ஸ்டேட் வங்கியுடையதல்ல, ஒரு அரசியல் கட்சியின் பதுக்கல் பணம் என்ற குற்றச்சாட்டு எழுப்பப்பட்டு, தற்போது வழக்கு சி.பி.ஐ. விசாரணை வரைக்கும் சென்றுள்ளது. அந்தப் பணம் வங்கியிருந்து ஆந்திர மாநிலத்துக்குக் கொண்டு செல்லப்பட்ட பணம் என்பதை நிரூபிக்க வங்கிகள் கொடுத்த ஆவணங்கள் அனைத்தும் ஒரு வாரப்பத்திரிகையில் வெளியாகும் அளவுக்கு அதிகாரிகள் தாராளமாகச் செயல்பட்டதுதான் மிகப்பெரிய தவறு. தற்போது விசாரணை நடத்தும் சி.பி.ஐ. போலீஸார் தங்கள் பங்குக்கு எல்லா விவரங்களையும் துளைத்தெடுத்து வேண்டியவர்களிடம் பேச்சு வாக்கில் பகிர்ந்துகொள்வதும் இந்த ரகசியத் தன்மையை உடைத்து சுக்குநூறாக்கப் போகிறது.

  இத்தனை காலமாக மிக எளிதாக, ரகசியமாக நடைபெற்றுவந்த பணம் கொண்டுசெல்லும் நடைமுறையை, தேவையில்லாமல் பொதுவெளிக்கு கொண்டுவந்ததன் விளைவே இந்தக் கொள்ளை. ஒவ்வொரு நாளும் வந்த பணம், கொடுக்கப்பட்ட பணம் என கணினியில் பதிவு செய்து வர்த்தகம் நடத்தும் ஒரு வங்கி, யாருடையதோ என சொல்லப்படும் ரூ.570 கோடியை தனது பணம் என்று கணக்கில் சேர்ப்பது அத்தனை எளிதா என்ற ஒரு கேள்வியை ரிசர்வ் வங்கியிடம் நீதிமன்றம் கேட்டிருக்கலாம்.

  வங்கிப் பணம் எவ்வாறு வெளி மாவட்டம், வெளி மாநிலங்களுக்கு லாரிகளில் அனுப்பப்படுகிறது, அதற்கான போலிப்பெயர் என்ன, எப்படி வழித்தடத்தைத் தீர்மானிக்கிறார்கள், இதில் வழக்கமாக ஈடுபட்டுவரும் வாகன நிறுவனங்கள் எவை எவை, பெட்டிகள் எவ்வாறு எந்த அளவில் உள்ளன என்ற அனைத்து விவரங்களும் வங்கிக்கு தொடர்பில்லாத நபர்களுக்கு தெரிய வந்த அந்த வேளையிலேயே சாத்தானின் சிந்தனை கிளறிவிடப்பட்டது என்பது சொல்லித்தெரிய வேண்டியதில்லை.

  லாரிகளை ஏதேனும் ஒரு கார் மடக்கி, டிரைவர்களைக் கொன்று லாரியைப் பணத்துடன் கடத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வங்கிகளும் கொஞ்சம் உஷாராகி ரயிலில் அனுப்பத் தீர்மானித்தன போலும்! வங்கிகளின் நடவடிக்கையைத் தொடர்ந்து கவனித்து வந்தவர்களுக்கு இந்த வாகன மாற்றத்தைத் தெரிந்து கொள்வது பெரிய விஷயமே அல்ல. வங்கிப் பணத்தை பிற இடங்களுக்கு அனுப்பும் பொறுப்புக்கான அதிகாரிகள், ஆவண முறைகள் எல்லாவற்றையும் அம்பலப்படுத்திவிட்ட பிறகு, கொள்ளையர்களுக்கு அவர்களைக் கண்காணிக்க தெரியாதா என்ன?

  இந்தக் கொள்ளையில் திட்டமிட்டவர்கள் மட்டுமே தொடர்புடையவர்களா அல்லது ரயில்வே ஊழியர்கள், ரயில்வே போலீஸாரும் உடந்தையா என்பதுதான் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. ரயில்வே துறை உதவி இல்லாமல் இந்தப் பணம் எந்தப் பெட்டியில் ஏற்றப்படும் என்பது தெரிந்து, அந்தப் பெட்டியில் முன்னதாகவே ஓட்டை போட்டு, ஒப்புக்கு மூடி வைத்திருக்க சாத்தியமுள்ளது. பணம் எந்தப் பெட்டியில் வைக்கப்பட வேண்டும் என்பதில் ரயில்வே ஊழியர்களுக்குத் தொடர்பு இருந்ததா என்பதைக் காவல் துறையின் விசாரணைதான் தெளிவுபடுத்தும்.

  இந்த ரயில் கொள்ளைக்கான விதையைப் போட்ட பெருமை தமிழக அதிகாரிகளுக்கும் ஊடகங்களுக்குமே உரியது. இப்போதே சுதாரித்துக் கொண்டு, முறையான பாதுகாப்பு ஏற்பாடுகளை உறுதிப்படுத்தாவிட்டால், இனி இதுபோன்ற கொள்ளைகள் அடிக்கடி நடப்பதைத் தவிர்க்க முடியாது!

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai