Enable Javscript for better performance
செய்வன திருந்தச் செய்!- Dinamani

சுடச்சுட

  

  யாழ்ப்பாண நூலகத்துக்கு நூல்களைத் திரட்டி அனுப்பும் பணியில் ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவை ஈடுபட்டுள்ளது. இதேபோன்ற பணியில் சில தமிழ் அமைப்புகளும் ஈடுபட்டுள்ளன. மக்களிடம் புத்தகங்களைப் பெற்று, இலங்கை அரசின் அனுமதி

  யுடன் யாழ்ப்பாண நூலகத்துக்கு அவை அனுப்பி வைக்கப்படவுள்ளன. இதற்கு தமிழர்களின் ஆதரவு பெருமளவு இருப்பதும் நிறைய புத்தகங்கள் கிடைத்துள்ளதும் மிகவும் மகிழ்ச்சிக்குரியது.

  இத்தகைய பணி பாராட்டுக்குரியதே என்றாலும், யாழ்ப்பாண நூலகத்தின் தேவை என்ன என்பதை உணர்வுபூர்வமாகவும், வரலாற்றுப்பூர்வமாகவும் புரிதல் இல்லாமல் புத்தகங்களை சேகரித்து அனுப்புவதால் மெய்யான பலன் கிடைக்காது.

  யாழ் நூலகத்துக்கான புத்தகங்கள் தேவை என்று வேண்டுகோள் விடுத்தால், கிடைக்கப்பெறும் நூல்களின் தன்மை எத்தகையதாக இருக்கும் என்பது தமிழ்கூறு நல்லுலகம் அறியாததல்ல. விற்பனையாகாத நூல்கள், பேராசிரியர்கள் தங்கள் ஆசைக்காக பதிப்பித்த அவர்களது ஆய்வுக் கட்டுரைகளின் திணிப்பு, யாரும் அறிந்திராத கவிஞர்களின் கவிதைத் தொகுப்புகள் என்பதாகவே வந்து குவியும். தமிழர்களைக் காட்டிலும் பரந்துபட்ட வாசிப்பு உள்ள இலங்கைத் தமிழர்களுக்கு இந்த நூல்கள் வெறும் கேலிக்குரியதாகவே தெரியும். ஏனென்றால் அவர்களது தேவையும் தேடலும் முற்றிலும் வேறானவை.

  யாழ் நூலகத்தின் தேவை, தமிழ்நாட்டினர் எழுதிய நாவல்களும் கவிதைகளும் கட்டுரைத் தொகுப்புகளும் அல்ல. இன்றைய சிறந்த தமிழ் இலக்கியங்களைத் தேடிப் பிடித்து படிக்கிறவர்கள் தமிழர்

  களைவிடவும் அதிகமானோர், உலகம் முழுதும் புலம்பெயர்ந்து வாழும் இலங்கைத் தமிழர்களே. எனவே இவை ஏற்கெனவே யாழ்ப்பாண நூலகத்தில் இருக்கும். ஆகையால் யாழ் நூலகத்தைப் பொருத்தவரை, இப்போது அச்சாகி வெளிவந்துகொண்டிருக்கும் தமிழ் நூல்கள் அதிகம் தேவைப்படாது.

  யாழ்ப்பாண நூலகம் 1981-ஆம் ஆண்டு மே 31 மற்றும் ஜூன் 1 சிங்கள ராணுவத்தால் எரித்து அழிக்கப்பட்ட மாபெரும் கொடூரம் உலகம் அறிந்தது. சிங்கள இனவாதத்தின் கட்டவிழ்த்து

  விடப்பட்ட அராஜகமும் அரசின் வேடிக்கை பார்க்கும் மனநிலையும் இந்தத் துயர நாடகம் அரங்கேறக் காரணமாக அமைந்தன. உலகமெங்கும் வரலாற்றில் இனஅழிப்பு அராஜகத்தில் எப்போதுமே கரு புகுத்தலும் கருத்து அழித்தலும் முதலிடம் பெறுகின்றன. கருத்தழித்தலின் முதல் நடவடிக்கையாக ஒரு இனத்தின் வரலாற்றையும், சிந்தனையையும் அழிக்க எதிரிகள் தேர்ந்தெடுக்கும் வழிமுறை, அந்த இனத்தின் பாரம்பரிய அடையாளங்களான, வரலாற்றுச் சுவடுகளான கல்வெட்டுகள், கோயில்கள், கோட்டைகள் ஆகியவற்றையும் நவீன உலகில் நூல்களையும் எரித்து அழிப்பதுதான். அதைத்தான் சிங்கள அரசும் செய்தது.

  இலங்கை சார்ந்த தமிழர் வரலாறு; இலங்கையின் மேம்பாட்டுக்கு தமிழர் பங்களிப்பு தொடர்பான நூல்கள்; சிங்கள இனவாதத்தின் பல்வேறு தாக்குதல் குறித்த தொடர்ச்சியான பதிவுகள்; அதனால் பாதிக்கப்பட்ட இலங்கைத் தமிழர்களில் மிகப் பிரபலமானவர்கள் பலரும் பதிவு செய்த நூல்கள்; ஈழம் என வரையறுக்கப்படும் நிலப்பரப்பு எவ்வாறு தொன்றுதொட்டு, ராஜராஜ சோழன் ஆட்சிக் காலம் முதலாக தமிழர் பகுதியாக இருந்துவந்துள்ளது என்பதற்கான ஆதாரங்களாக விளங்கிய ஏட்டுச்சுவடிகள்; அம்மண்ணின் பிரபல தலைவர்களின் வாழ்க்கை வரலாறு; தமிழ் மொழியியல் நூல்கள் என மிக அரிய நூல்கள் அங்கே இருந்ததால்தான், இலங்கைத் தமிழர்தம் இனவரலாற்றை அழிக்கும் முயற்சியாக யாழ்ப்பாணம் நூலகம் தீக்கிரையாக்கப்பட்டது. இந்தப் புரிதலுடன் நாம் யாழ் நூலகத்துக்கான நூல்கள் அனுப்பும் பணியைச் செய்வதே சரியானதாக இருக்கும்.

  ஆகவே, இந்த நல்ல முயற்சியை மேலும் பயனுள்ளதாகச் செய்ய வேண்டுமென்றால் மேலும் சிலவற்றையும்கூட நாம் செய்தாக வேண்டும்.

  புலம்பெயர்ந்து தமிழ்நாட்டில் வாழும் இலங்கைத் தமிழ்ச் சான்றோர் பலர் இருக்கிறார்கள். அவர்களைக் கொண்ட ஒரு குழுவை அமைத்து, யாழ் நூலகத்தில் இருந்த அரிய நூல்கள், சுவடிகள் எவையெவை, அவை எரிந்துபோனபோதிலும் அங்கே ஆராய்ச்சியில் ஈடுபட்ட அறிஞர்கள் சேகரித்த குறிப்புகளும், நகல்களும் கிடைக்குமா அல்லது அந்த நூல்களின் நகல்கள் கிடைக்குமா என்று கண்டறிதல், இத்தகைய நூல்களின் பிரதிகள் வைத்திருக்கும் வெளிநாட்டு நூலகங்கள், தனிநபர்கள் பற்றிய தகவல்களை சேகரித்து அந்த நூல்களைப் பெற்று மறுபதிப்பு செய்தல், மைக்ரோ பிலிம் பிரதி எடுத்தல், மென்படிவமாக (சாஃப்ட் காப்பி) இணையத்தில் ஏற்றுதல் ஆகிய முயற்சிகள்தான் யாழ் நூலகத்துக்குப் பேருதவியாக அமையும்.

  மேலும், இலங்கை யாழ் நூலகத்தில் என்னென்ன நூல்கள் இடம் பெறுகிறதோ அதற்கு நேர்இணையாக ஒரு நூலகத்தை, தேவைப்படின் யாழ் நூலகத்தின் அதே கட்டுமான வடிவமைப்பில் தமிழகத்தில் அமைத்து, உலகத் தமிழர் அனைவருடைய வரலாற்று கலாசாரப் பதிவுகளின் "சங்கப் பலகையாக' ஒரு நூலகத்தை தமிழ் மண்ணில் ஏற்படுத்தும் முயற்சியும் இன்றியமையாதது. இதற்குத் தேவைப்படும் நிதிநல்கையை தமிழக அரசும், நடுவண் அரசும் செய்வதோடு, தன்னார்வ அமைப்புகளும் உதவலாம்.

  இத்தகைய நடவடிக்கைகள் இல்லாமல், தமிழ் மண்ணில் தமிழ் வாசகர்களால் புறக்கணிக்கப்பட்ட நூல்களையும், ஏற்கெனவே பரவலாக எல்லா இடங்களிலும் கிடைக்கும் நூல்களையும் சேகரித்து அனுப்பினால், அங்கே நூல்கள் எண்ணிக்கை கூடும், இடத்தை அடைக்கும். அதுவன்றி ஒரு பயனும் இருக்காது. யாழ்ப்பாணம் நூலகத்திற்கு அனுப்பப்படும் நூல்கள் பழந்தமிழ் இலக்கியங்களாக மட்டுமே இருத்தல் வேண்டும் என்பதை மனதில் கொள்ள வேண்டும்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai