சுடச்சுட

  

  கர்நாடகத்தின் கனகபுரா வட்டத்தில் அமைந்துள்ள மேக்கேதாட்டு என்ற இடத்தில் காவிரியின் குறுக்கே புதிய அணை கட்டுவதற்கு ரூ.5,912 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என, அந்த மாநில முதல்வர் சித்தராமையா சுதந்திர தின விழாவில் பேசுகையில் வெளியிட்ட அறிவிப்பால், தமிழக விவசாயிகள் மத்தியில் மீண்டும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.

  காவிரி நீர்ப் பங்கீடு தொடர்பாக நடுவர் மன்றமும் உச்சநீதிமன்றமும் தெளிவான தீர்ப்பை அளித்துள்ள போதிலும், அதை மீறும் வகையில் கர்நாடக ஆட்சியாளர்கள் அவ்வப்போது புதிய அறிவிப்புகளை வெளியிட்டு, இரு மாநிலங்களுக்கு இடையே பதற்றமான சூழ்நிலையை உருவாக்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

  கடந்த ஆண்டு, மார்ச் 13-ஆம் தேதி கர்நாடக சட்டப் பேரவையில் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தபோது, மேக்கேதாட்டுவில் புதிய அணை கட்டுவதற்கான திட்ட அறிக்கையை தயாரிக்க ரூ.25 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என முதல்வர் சித்தராமையா அறிவித்தார். அப்பொழுதே இதற்கு தமிழகம் சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

  கர்நாடகம் புதிய அணையைக் கட்டுவதை பிரதமர் தடுத்து நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி தமிழக சட்டப் பேரவையில் கடந்த ஆண்டு, மார்ச் 27-இல் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த பிரச்னை தொடர்பாக, அதற்கு அடுத்த நாள் (மார்ச் 28) தமிழகத்தில் விவசாய சங்கங்கள் சார்பில் முழு அடைப்புப் போராட்டமும் நடத்தப்பட்டது. அன்றைய தினம் தமிழக எம்.பி.க்கள் குழுவினர் பிரதமர் மோடியைச் சந்தித்து, கர்நாடகத்தின் இந்தப் புதிய அணை முயற்சியைத் தடுத்த நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தியும் அதனால் எந்தப் பலனும் ஏற்படவில்லை.

  இந்த ஆண்டு தென் மேற்குப் பருவமழை வழக்கத்தைவிடக் குறைவாகப் பெய்துள்ளதால், தமிழகத்துக்கு உரிய தண்ணீரை காவிரியில் திறந்துவிட இயலாது என கர்நாடகம் கைவிரித்துவிட்டது. கர்நாடகத்தின் இந்தப் போக்கைக் கண்டித்தும், தமிழகத்துக்கு உரிய தண்ணீரை காவிரியில் திறந்துவிட மத்திய அரசு நட

  வடிக்கை எடுக்க வலியுறுத்தியும் இடதுசாரிக் கட்சிகள் சார்பு விவசாய சங்கங்கள் காவிரி டெல்டா மாவட்டங்களில் இன்று (வெள்ளி) முழு அடைப்பு போராட்டம் நடத்த அழைப்பு விடுத்துள்ளன.

  இந்த நிலையில், தமிழக விவசாயிகளுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக, நேரடி நெல் விதைப்பு மூலமாக சம்பா சாகுபடியை மேற்கொள்வதற்கு ஏதுவாக ரூ.64.30 கோடி மானிய உதவியுடன் கூடிய விரிவான தொகுப்புத் திட்டத்தை சட்டப் பேரவையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளது வரவேற்புக்குரியது. மேலும், இந்த மாத இறுதிக்குள் தமிழகத்துக்கு உரிய காவிரி நீரை கர்நாடகம் திறந்துவிடாவிட்டால், உச்சநீதிமன்றத்தில் இடைக்கால மனு ஓரிரு நாள்களில் தாக்கல் செய்யப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

  இதேபோல, மேக்கேதாட்டுவில் புதிய அணை கட்டும் முயற்சியை கர்நாடகம் கைவிடாவிடில், அதை எதிர்த்து தமிழகம் சட்ட ரீதியான நடவடிக்கையை எடுக்கும் என்றும் முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.காவிரி நீர்ப் பங்கீடு விவகாரத்தில் நடுவர் மன்றமும், உச்சநீதிமன்றமும் ஏற்கெனவே தெளிவாகத் தீர்ப்பு அளித்துள்ளபோதிலும், கர்நாடகத்தின் செயல்பாடுகளால் மீண்டும் நீண்டதொரு சட்டப் போராட்டத்தை தமிழகம் எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

  தமிழகம், கர்நாடகத்துக்கு இடையேயான காவிரி நீர்ப் பங்கீட்டுப் பிரச்னைக்குத் தீர்வு காண, கடந்த 1990-ஆம் ஆண்டு நடுவர் மன்றத்தை மத்திய அரசு அமைத்தது. சுமார் 17 ஆண்டுகளுக்குப் பிறகு, அதாவது 2007-இல் நடுவர் மன்றம் தனது இறுதித் தீர்ப்பை வழங்கியது. எனினும், இந்தத் தீர்ப்பு விவரங்கள் மத்திய அரசிதழில் 2013, பிப்ரவரி 19-இல்தான் வெளியிடப்பட்டன.

  நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படி, தமிழகத்துக்கு காவிரியில் ஆண்டுதோறும் 192 டி.எம்.சி. (ஒரு டி.எம்.சி. என்பது 100 கோடி கன அடி) தண்ணீரை கர்நாடகம் திறந்துவிட வேண்டும். பருவமழை பொய்த்துப் போனால், காவிரி நீரை இரு மாநிலங்களும் எவ்வாறு பங்கிட்டுக் கொள்ள வேண்டும் என்பதையும் நடுவர் மன்றம் வரையறுத்துக் கூறியுள்ளது.

  அதோடு, நதி நீர்ப் பங்கீட்டைக் கண்காணிக்க காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க வேண்டும் என்று நடுவர் மன்றம் உத்தரவிட்டும், இதுவரை அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

  மேலும், இரு மாநிலங்களுக்கு இடையே ஓடும் நதியின் குறுக்கே புதிய அணை கட்டுவதற்கு ஒரு மாநிலம் முயன்றால், அதற்கு அந்த நதியால் பயனடையும் மற்ற மாநிலங்களின் ஒப்பு

  தலைப் பெற வேண்டும் என்று உச்சநீதிமன்றமும், காவிரி பாசனப் பகுதிகளில் கர்நாடகம் தனது சாகுபடிப் பரப்பை அதிகரிக்கக் கூடாது என்று நடுவர் மன்றமும் தீர்ப்பளித்துள்ளன.

  இதை மனதில் கொண்டே, பெங்களூரூ மாநகர மக்களின் குடிநீர்த் தேவைக்காகவே மேக்கேதாட்டுவில் புதிய அணை கட்டப்பட இருப்பதாக கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார். அதோடு, கடலில் கலந்து வீணாகும் தண்ணீரைத் தடுத்து, 400 மெகாவாட் மின்சார உற்பத்தி செய்யவும் இந்த அணை கட்டப்பட இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

  கர்நாடகத்தின் இந்த முயற்சியைத் தொடக்கத்திலேயே தடுத்து நிறுத்த மத்திய அரசு உறுதியான நடவடிக்கையை எடுக்க வேண்டும். காவிரியில் கர்நாடகம், முல்லைப் பெரியாறில் கேரளம், பாலாற்றில் ஆந்திரம் என்று தமிழகத்தின் உரிமை தொடர்ந்து வஞ்சிக்கப்படுவதற்கு எப்போதுதான் முடிவு ஏற்படுமோ தெரியவில்லை...

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai