சுடச்சுட

  

  முதுநிலை மருத்துவப் படிப்புகளில் சேர விண்ணப்பிக்கும் கிராமப்புறங்களில் பணியாற்றும் அரசு மருத்துவர்களுக்கு நுழைவுத் தேர்வில் 30 சதவீத அளவுக்கு கூடுதல் மதிப்பெண்கள் வழங்கலாம் என உச்ச நீதிமன்றம் அண்மையில் பிறப்பித்த உத்தரவு மிகவும் வரவேற்கத்தக்கதாகும்.

   இந்திய மக்கள் தொகையில் பெரும்பான்மையினர் கிராமப்புறங்களில் வசிப்பதால், அவர்களுக்குத் தரமான மருத்துவச் சிகிச்சை கிடைப்பதற்கு இந்த உத்தரவு வழிகோலக் கூடும்.2016, ஆகஸ்ட் 15 நிலவரப்படி இந்தியாவின் மொத்த மக்கள்தொகை சுமார் 133 கோடி. தமிழகத்தின் மொத்த மக்கள்தொகை சுமார் 7.21 கோடி. இந்தியாவில் மொத்தமுள்ள கிராமங்களின் எண்ணிக்கை 6,49,481. மிக அதிக அளவு கிராமங்களைக் கொண்ட மாநிலங்களாக உத்தரப்பிரதேசம் (1,07,753), மத்தியப்பிரதேசம் (55,429), ஒடிஸா (51,583), பிகார் (45,076), ராஜஸ்தான் (44,981), மகாராஷ்டிரம் (44,198), மேற்கு வங்கம் (40,996), ஜார்க்கண்ட் (33,623) ஆகியவை திகழ்கின்றன. தமிழகத்தில் 17,089 கிராமங்கள் உள்ளன.

  அதிக அளவு கிராமப் பகுதிகளைக் கொண்ட வட மாநிலங்களில் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில்தான் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் உள்ளன. தமிழகத்தில் 17 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளும், சென்னையில் அரசின் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையும் செயல்படுகின்றன.கிராமப்புறங்களைச் சேர்ந்த மக்கள், குறிப்பாக, ஏழைகள் மருத்துவச் சிகிச்சைக்கு அரசு மருத்துவமனைகளையும், ஆரம்ப சுகாதார நிலையங்களையுமே பெரிதும் நம்பியுள்ளனர். ஆனால், இந்தியாவில் பெருவாரியாக உள்ள கிராம மக்களின் மருத்துவத் தேவைகளை நிறைவு செய்யும் அளவுக்கு அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் போதுமான அளவு இல்லை. அவை தரமான வசதிகளையும், மருத்துவர்களையும் உடையனவாகவும் இல்லை.

  கிராமப்புறங்களில் செயல்படும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலோ சிறிய மருத்துவமனைகளிலோ பணியாற்ற மருத்துவர்கள் ஆர்வம் காட்டுவதில்லை என்ற குறைபாடு இருந்து வருகிறது. அதற்குக்

  காரணம், எம்.பி.பி.எஸ். முடித்து அரசு மருத்துவராகும் எவரும் நகர்ப்புறங்களில் பணியாற்றுவதையே பெரிதும் விரும்புகின்றனர். இதனால், பெரும்பாலான கிராமப்புற மக்கள் உரிய மருத்துவச் சிகிச்சை

  கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

  இந்தியாவில் உள்ள 423 மருத்துவக் கல்லூரிகளில் ஆண்டுதோறும் சுமார் 50,000 மாணவர்கள் எம்.பி.பி.எஸ். படிப்பை முடித்து வெளியேறுகின்றனர். இவர்களில் மிகமிகக் குறைந்த எண்ணிக்கையிலானவர்கள் மட்டுமே கிராமப்புறங்களுக்குச் சென்று மருத்துவச் சேவையாற்றுகின்றனர்.

  அதேநேரத்தில். எம்.பி.பி.எஸ். முடித்த அனைவரும் எப்படியாவது சிறப்பு மருத்துவராகிவிட வேண்டும் என விரும்புவதால், முதுநிலை மருத்துவப் பட்டப் படிப்புகள், பட்டயப் படிப்புகளில் சேர இன்று கடும் போட்டி நிலவுகிறது. முதுநிலை மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் நகரங்களில் மட்டுமே உள்ளன. எம்.பி.பி.எஸ். முடித்தவர்கள் கிராமங்களில் பணியாற்ற விரும்பாததற்கு இதுவும் ஒரு காரணமாகும். கிராமங்களில் இருந்து கொண்டு முதுநிலைப்

  படிப்புக்கான நுழைவுத் தேர்வுக்குத் தயாராவது சிரமம் என அவர்கள் கருதுகின்றனர்.

  இந்த நிலையில், முதுநிலை மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கு கிராமப்புறங்களில் பணியாற்றும் அரசு மருத்துவர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் விதத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு அமைந்துள்ளது.

  முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வுகளை எழுதும் கிராமப்புறங்களில் பணியாற்றும் அரசு மருத்துவர்களுக்கு 30 சதவீத கூடுதல் மதிப்பெண்கள் வழங்கலாம் என்ற உச்ச

  நீதிமன்றத்தின் உத்தரவு, கிராம மக்களுக்கு உரிய மருத்துவ சேவை கிடைப்பதற்கு ஓரளவுக்காவது உதவும்.உத்தரப்பிரதேசத்தில் கிராமப்புறங்களில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு முதுநிலைப் படிப்புகளில் சேர்வதற்கு சிறப்பு ஒதுக்கீடு செய்யப்பட்டு வந்ததை அலாகாபாத் உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையின்போது உச்ச நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்தது. உச்ச நீதிமன்றத்தின் இந்த வழிகாட்டுதலை அனைத்து மாநிலங்களும் பின்பற்றும் வகையில், முதுநிலை மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கு தேசிய அளவிலான விதிமுறைகளை மத்திய அரசு வகுக்க வேண்டும்.

  தமிழகத்தில் கிராமப்புறங்களில் பணியாற்றும் அரசு மருத்துவர்கள் முதுநிலைப் படிப்புகளில் சேர விரும்பினால், அவர்களது பணிக் காலத்தின் அளவுக்கு ஏற்ப நுழைவுத் தேர்வில் கூடுதலாக 1- 10

  மதிப்பெண்கள் வரை வழங்கும் நடைமுறை ஏற்கெனவே அமலில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இது 30 விழுக்காடாக உயர்த்தப்படும்போது பல மருத்துவர்களும் கிராமப்புறங்களில் சேவை செய்ய

  நிச்சயம் முன்வருவார்கள்.பெரும்பாலான கிராமங்களில் எம்.பி.பி.எஸ். முடித்த மருத்துவர்கள் இல்லாததால், அந்த மக்கள் போலி மருத்துவர்களின் பிடியில் சிக்கி, தவறான சிகிச்சைகளால் உயிரிழக்கும் நிலை உள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் இனி நிகழாமல் இருக்க, கிராமப்புற மக்களுக்கும் தரமான மருத்துவ சேவை கிடைப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் விரைந்து எடுக்க வேண்டும். அப்போதுதான் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் தரமான மருத்துவ சேவை என்பதை உறுதிப்படுத்த முடியும்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai