Enable Javscript for better performance
நேர்மையான தேர்வு!- Dinamani

சுடச்சுட

  

  இத்தனை ஆண்டுகளாகியும் நமது நிர்வாக அமைப்பு சரியாக இயங்குவதில்லை என்பதற்கு எடுத்துக்காட்டு, ரிசர்வ் வங்கியின் ஆளுநர் நியமனம் குறித்த சர்ச்சை. முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசால் ரிசர்வ் வங்கியின் ஆளுநராக நியமிக்கப்பட்ட ரகுராம் ராஜன், நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு ஆட்சிப் பொறுப்பேற்றதும் மாற்றப்பட்டிருந்து அது சர்ச்சையானால் புரிந்து கொள்ளலாம். ஆனால், தனது மூன்றாண்டு பதவிக் காலத்தை அவர் நிறைவு செய்து, பதவி நீட்டிப்புத் தரப்படாமல் போனால் அதில் சர்ச்சை ஏற்பட வேண்டிய அவசியம்தான் என்ன என்று புரியவில்லை.

  ரகுராம் ராஜன் மீண்டும் தான் தாய்நாடாக வரித்துக் கொண்ட அமெரிக்கா திரும்புவதாக அறிவித்தது முதல், அடுத்த ரிசர்வ் வங்கியின் ஆளுநர் யாராக இருக்கும் என்பது குறித்த சர்ச்சைகளும், யூகங்களும் தொடங்கி விட்டன. இப்போது, ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநராகப் பதவி வகிக்கும் உர்ஜித் படேல் வரும் செப்டம்பர் 4-ஆம் தேதி, ரகுராம் ராஜனின் பதவிக் காலம் முடிந்ததும் ரிசர்வ் வங்கியின் 24-ஆவது ஆளுநராகப் பதவி ஏற்க இருக்கிறார்.

  துணை ஆளுநராக இருக்கும் உர்ஜித் படேலை ரிசர்வ் வங்கியின் ஆளுநராக நியமிக்கும் நரேந்திர மோடி அரசின் முடிவை யாருமே எதிர்பார்க்கவில்லை என்பதுதான் உண்மை. அரசுடன் அனுசரித்துப் போகக்கூடிய, வணிகக் கூட்டாண்மை நிறுவனங்களின் வாராக் கடன் குறித்துப் பிரச்னை எழுப்பாத, விலைவாசி குறித்துக் கவலைப்படாத "சொல் பேச்சுக் கேட்கும்' ஆளுநர் ஒருவரை அரசு நியமிக்க இருக்கிறது என்று ஊடகங்களில் பரவலாக கருத்துத் திணிப்புகள், விவாதங்கள் என்று பரபரப்பு ஏற்படுத்தப்பட்டது. அதுபோல நடக்கவில்லை என்பது பலருக்கும் ஏமாற்றமாக இருக்கக்கூடும்.

  ரகுராம் ராஜனுக்கு ரிசர்வ் வங்கியின் ஆளுநராகப் பதவி வகிப்பதற்கு என்னவெல்லாம் தகுதிகள் உண்டோ, அத்தனை தகுதிகளும் உர்ஜித் படேலுக்கும் உண்டு. ஆப்பிரிக்காவிலுள்ள கென்யா நாட்டில் 1963 அக்டோபர் 28-ஆம் தேதி பிறந்த 52 வயது உர்ஜித் படேல் "லண்டன் ஸ்கூல் ஆப் எக்னாமிக்ஸ்' கல்லூரியில் தனது பொருளாதார இளங்கலைப் பட்டமும், ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் எம்.பில். பட்டமும் பெற்றவர். அமெரிக்க யேல் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்ற பிறகு சர்வதேச நிதியத்தில் (ஐ.எம்.எப்.) பணிக்குச் சேர்ந்தார்.

  1991-94 ஆண்டுகளில், பிரதமர் நரசிம்ம ராவ் இந்தியாவின் பொருளாதார சீர்திருத்தத்திற்கு வழிகோலியபோது, சர்வதேச நிதியத்தின் இந்தியப் பிரிவில் பணியாற்றியவர் உர்ஜித் படேல். சர்வதேச நிதியத்தால் இந்திய ரிசர்வ் வங்கிக்கு மாற்றுப் பணியில் (டெபுடேஷன்) அனுப்பப்பட்ட உர்ஜித் படேல், 1998-2001 காலகட்டத்தில், நிதியமைச்சகத்தின் பொருளாதாரத் துறையில் ஆலோசகராகவும் பணியாற்றியவர். ரகுராம் ராஜன் ரிசர்வ் வங்கியின் ஆளுநராக நியமிக்கப்பட்ட அதே 2013-ஆம் ஆண்டில்தான் உர்ஜித் படேலும் ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநராக நியமிக்கப்பட்டார்.

  துணை ஆளுநராக இருந்த உர்ஜித் படேல் ரிசர்வ் வங்கி பல முக்கியமான முடிவுகளை எடுப்பதற்கும், பல நடவடிக்கைகளை முடுக்கி விடுவதற்கும் காரணமாக இருந்திருக்கிறார். ஐரோப்பியக் கூட்டமைப்பிலிருந்து பிரிட்டன் விலகியபோது, உலகின் முக்கியமான பொருளாதாரங்கள் அதனால் பாதிக்கப்பட்டன. அந்த நேரத்தில், ரிசர்வ் வங்கியின் ஆளுநராக இருந்த ரகுராம் ராஜன் வெளிநாட்டுச் சுற்றுப்பயணத்தில் இருந்தார். ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநரான உர்ஜித் படேலின் தலைமையில்தான், "பிரெக்சிட்' தாக்கத்தை எதிர்கொள்ளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டன. அந்தச் சூழ்நிலையை உர்ஜித் படேல் திறமையுடன் கையாண்ட விதம்தான், அவருக்கு சாதகமாக மாறி ரிசர்வ் வங்கியின் ஆளுநர் பதவியைப் பெற்றுத் தந்தது என்றுகூடக் கூறுகிறார்கள்.

  ரகுராம் ராஜனைப் போலவே, உர்ஜித் படேலும், அடித்தட்டு, நடுத்தர மக்களை பாதிக்கும் விலைவாசி ஏற்றத்தைக் கட்டுப்படுத்துவதில் முனைப்புக் காட்டுபவர். முன்பெல்லாம் கடைப்பிடிக்கப்பட்ட மொத்த விற்பனை விலைக் குறியீட்டின் அடிப்படையிலான நிதி நிர்வாக முறைக்கு முற்றுப்புள்ளி வைத்து, நுகர்வோர் விற்பனை விலையின் அடிப்படையில் நிதி நிர்வாகத்தை மாற்றிய பெருமை உர்ஜித் படேலுக்கு உண்டு. சாமானியன் வாங்கும் விலைதான் விலைவாசியின் குறியீடாக இருக்க முடியுமே தவிர, மொத்த விற்பனை விலையல்ல என்கிற உர்ஜித் படேலின் கோட்பாடு, உலகெங்கிலும் பாராட்டப்படுகிறது.

  உர்ஜித் படேலும், ரகுராம் ராஜனைப் போலவே, வங்கிகளின் சீர்திருத்தம் குறித்து மிகவும் தெளிவான கருத்தைக் கொண்டிருப்பவர். வங்கிகள் தங்கள் வரவு-செலவுக் கணக்கில் வெளிப்படைத் தன்மையை உறுதிப்படுத்த வேண்டும் என்பதிலும், வாராக் கடன்கள் வசூலிக்கப்பட வேண்டும் என்பதிலும் குறியாக இருப்பவர். இதை எந்த அளவுக்கு வணிகக் கூட்டாண்மை நிறுவனங்களும், நிதியமைச்சகமும் ஏற்றுக் கொள்ளும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

  எல்லா நிதியமைச்சர்களும் வட்டி விகிதத்தைக் குறைத்து ரிசர்வ் வங்கி வளர்ச்சியை முடுக்கிவிட வேண்டும் என்றுதான் எதிர்பார்ப்பார்கள். ரகுராம் ராஜனைப் போல தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ளாமல், அதே நேரத்தில் தான் நினைத்த கொள்கை முடிவுகளை ஆர்ப்பாட்டமே இல்லாமல் செயல்படுத்துபவர் உர்ஜித் படேல். அதனால், இந்தியப் பொருளாதாரம் எதிர்கொள்ளும் சவால்களை சமாளித்து, ரிசர்வ் வங்கியின் சுதந்திரத்தையும் காப்பாற்றி புதிய சரித்திரம் படைப்பார் உர்ஜித் படேல் என்று எதிர்பார்க்கலாம்!

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai