சுடச்சுட

  

  வாடகைத் தாய் மூலம் குழந்தையைப் பெற்றெடுக்கும் நவீன முறைக்கு கடும் கட்டுப்பாடுகளை விதிக்க வகை செய்யும் வாடகைத் தாய் முறைப்படுத்தல் சட்ட வரைவை வருகிற நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத் தொடரில் மத்திய அரசு தாக்கல் செய்யவிருக்கிறது. தற்போது அறிவிக்கப்பட்டிருக்கும் கடுமையான நிபந்தனைகளையுடைய இந்த சட்ட வரைவு அதிர்ச்சி அளிக்கிறது.

  வாடகைத் தாய் முறை மூலம் இந்தியாவில் ஆண்டுக்கு சுமார் ரூ. 15,600 கோடி அளவுக்குப் பணம் புழங்குவதாக இந்தியத் தொழில் கூட்டமைப்பு தெரிவிக்கிறது. வாடகைத் தாயாக முன்வரும் பெண்களைப் பணத்தாசை கொண்ட சில மருத்துவர்களும், இடைத்தரகர்களும் பல்வேறு வகைகளில் சுரண்டுவதாகப் பல தரப்பிலிருந்தும் புகார்கள் எழுந்தன. இதை ஒழுங்குபடுத்தவும், அப்பாவிப் பெண்கள் சுரண்டப்படுவதைத் தடுக்கவும்தான் வாடகைத் தாய் ஒழுங்காற்று மசோதா 2016, நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவிருக்கிறது என்கிறது அரசுத் தரப்பு.

  திருமணம் செய்யாமலேயே சேர்ந்து வாழும் தம்பதியர், தனித்து வாழும் ஆண் அல்லது பெண், ஓரினச் சேர்க்கையாளர், வெளிநாட்டினர், வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்கள் ஆகியோர் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெறுவதைத் தடுக்க வகை செய்வதுதான் இந்த மசோதாவின் முக்கிய நோக்கம். இதேபோல, பிரசவ கால வேதனைகளைத் தங்களது மனைவியர் சுமக்க விரும்பாமல், இந்திய வாடகைத் தாய் மூலம் குறைந்த செலவில் குழந்தையைப் பெறலாம் என்ற வெளிநாட்டினரின் போக்குக்கு முற்றுப்புள்ளி வைப்பதும் இந்த மசோதாவின் நோக்கமாகும்.

  "சட்டப்படி திருமணமாகி 5 ஆண்டுகளைக் கடந்த தம்பதியர் மட்டுமே வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள முடியும். இந்த முறை மூலம் குழந்தையைச் சுமக்க முன்வரும் பெண், வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற விரும்பும் தம்பதியரின் நெருங்கிய உறவினராக இருக்க வேண்டும். அதுவும் குழந்தையைச் சுமக்கவிருக்கும் அந்தப் பெண் ஏற்கெனவே ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுத்தவராகவும் இருக்க வேண்டும். ஒரு பெண் ஒரே ஒரு முறை மட்டுமே வாடகைத் தாயாகச் செயல்பட முடியும்' என்றும் இந்த உத்தேச மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விதிகளை மீறிச் செயல்படுவோருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ.10 லட்சம் அபராதமும் விதிக்க இந்த மசோதாவில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

  வாடகைத்தாய் முறை வணிக நோக்கில் அமையக்கூடாது என்று பல்வேறு நிபந்தனைகள் விதிப்பது சரியே என்றாலும், அந்த நிபந்தனைகள் மிகவும் கடுமையானதாகவும், நடைமுறைக்கு ஒவ்வாதவையாகவும் உள்ளன.

  கரு சுமக்கும் தாய்க்கான காப்பீட்டுச் செலவு, மகப்பேறு செலவு தவிர, வேறு எந்த செலவுகளோ, தனிப்பட்ட பணப்பட்டுவாடா அல்லது பரிசுப்பணம் எதுவுமே கட்டணமாகக் கருதப்படும். கருவைச் சுமந்து பெற்றுத் தர எந்தவிதக் கட்டணமும் இல்லையென்றாலும் பரவாயில்லை, ஒரு மலட்டு சிநேகிதிக்காக கரு சுமக்கிறேன் என்று ஒரு தோழி (கே. பாலசந்தரின் கல்கி திரைப்படம்போல) முன்வருவதற்கும்கூடச் சட்டத்தில் இடம் இல்லை. உறவினர் அல்லாத யாரும் வாடகைத்தாயாக செயல்பட இயலாது என்பது எப்படி நடைமுறை சாத்தியம்?

  மணமாகி 5 ஆண்டுகளாக பிள்ளைச் செல்வம் இல்லாத தம்பதிகள், தங்களில் ஒருவர் மலடு என்பதை மருத்துவரீதியில் நிருபிக்க வேண்டும், அத்தோடு கூடுதல் நிபந்தனைகளாக, இவர்களுக்கு ரத்ததொடர்பிலான பிள்ளை இருந்தால் (அதாவது, யாராவது ஒருவர் முந்தைய திருமணத்தின் மூலம் பெற்ற குழந்தை உயிருடன் இருந்தால்) அல்லது ஏற்கெனவே ஒரு குழந்தையை தத்து எடுத்து இருந்தால், அவர்கள் வாடகைத்தாய் மூலம் பிள்ளை பெற சட்டம் அனு

  மதிக்காது. உயிருடன் இருக்கும் அக்குழந்தை மனநலம் குன்றியதாக, அல்லது மரணநோயில் இருக்கும்பட்சத்தில் வாடகைத்தாயை, சொந்த உறவினரில் ஒரு பெண்மணியை, இத்தம்பதி அமர்த்திக்கொள்ளலாம் என்பது சற்று ஆறுதல்.

  தம்பதியில் ஒருவருக்கு ஏற்கெனவே ஒரு குழந்தை இருந்தாலும், இரண்டாவது திருமணம் செய்துகொண்ட ஆண் அல்லது பெண் தனக்கான குழந்தை வேண்டும் என்று விரும்பினால் அது தவறா?

  இந்தியாவில் வாடகைத் தாய் முறையில், அந்த பெண்மணிக்கு உரிய தொகை தரப்படாமல் இடைத்தரகர்களால் சுரண்டப்படுதல் அல்லது குழந்தைக்கு உரியவர்கள் ஏமாற்றுதல் அல்லது மகப்பேறுக்கு பிந்தைய மருத்துவம் மற்றும் ஆரோக்கிய செலவுக்கான பணத்தைத் தராதது அல்லது பிள்ளை பிடிக்கவில்லை என்றால் அதை வாங்கிக்கொள்ள மறுப்பது போன்ற சிக்கல்கள் உள்ளன. இவை தீர்வு காணப்பட வேண்டியவை. அதேபோன்று, வாடகைத் தாய்க்கு இந்தக் குழந்தையின் மீது எந்தவிதமான உரிமையும் கிடையாது என்பதை உறுதிப்படுத்தவும் சட்டம் தேவை என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

  மேலும், வெளிநாட்டவர் யாருக்குமே, வெளிநாடுவாழ் இந்தியர்கள் உள்பட வாடகைத் தாய் முறை அனுமதிக்கப்படக் கூடாது என்பது எந்தவகையில் சரி? வெளிநாடு வாழ் இந்தியத் தம்பதியில் ஒருவர் மலடாக இருந்தால், அவர் இதே சட்டத்தின் கீழ் இந்தியாவில் தனது மண், மொழி சார்ந்த ஒரு பெண்ணை வாடகைத் தாயாக தேர்வு செய்ய நினைப்பதில் என்ன தவறு இருக்க முடியும்?

  பிரச்னையை முழுமையாக உணராமல் அரைகுறையாகத் தயாரிக்கப்பட்டிருக்கிறது இந்த மசோதா. பிரச்னைக்குத் தீர்வு காண்பதற்கு பதிலாகப் புதிய பல பிரச்னைகளை உருவாக்குவதாக இது அமைந்திருக்கிறது. இது சட்ட வரைவு மட்டுமே என்பது ஆறுதல். இப்படியொரு சட்டம் கொண்டுவருவதைவிட, இதை நிறைவேற்றாமலே இருப்பதுதான் நல்லது.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai