சுடச்சுட

  

  இந்தியக் கடற்படைக்காக மும்பையில் கட்டமைக்கப்பட்டு வரும் பிரான்ஸ் நிறுவனத்தின் "ஸ்கார்பின்' நீர்மூழ்கிக் கப்பல்கள் தொடர்பான ரகசியத் தகவல்களை "தி ஆஸ்திரேலியன்' பத்திரிகை தனது இணையதளத்தில் வெளியிட்டிருப்பது அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த ஆறு நீர்மூழ்கிக் கப்பல்களும் மும்பை கடற்படைத் தளத்தில் கட்டமைக்கப்பட்டு வருகின்றன. கட்டமைப்புப் பணிகள் முடிவடைந்து, முதலாவது "ஸ்கார்பின்' நீர்மூழ்கிக் கப்பல் இந்தியக் கடற்படையில் விரைவில் சேர்க்கப்படவிருந்த நிலையில், இந்த ரகசியத் தகவல்களை "தி ஆஸ்திரேலியன்' பத்திரிகை வெளியிட்டுள்ளது.

  பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த டி.சி.என்.எஸ். நிறுவனத்திடமிருந்து ரூ.23,562 கோடியில் அதிநவீனத் தொழில்நுணுக்கங்களுடன் கூடிய ஆறு "ஸ்கார்பின்' நீர்மூழ்கிக் கப்பல்களைக் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தத்தில் இந்தியா 2005-ஆம் ஆண்டு கையெழுத்திட்டது. பலத்த போட்டிக்கிடையே இந்த ஒப்பந்தத்தை பிரான்ஸின் டி.சி.என்.எஸ். நிறுவனம் பெற்றதால், அதை வீழ்த்த நினைக்கும் போட்டி நிறுவனங்கள் இந்தத் தகவல்களைக் கசிய விட்டிருக்கக் கூடும். அதேநேரத்தில், இந்தத் தகவல்கள் கசியவிடப்படவில்லை, திருடப்பட்டவை என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது.

  ஸ்கார்பின் நீர்மூழ்கி கப்பல் தொடர்பான ரகசியங்கள் இந்தியாவை வீழ்த்த விரும்பும் நாடுகளால் கசிய விடப்பட்டிருக்கலாம் என்கிற வாதத்தில் அர்த்தம் இருப்பதாகத் தெரியவில்லை. இந்த ரகசியங்களை பகிரங்கமாக வெளியிடுவதைவிட நமது பலவீனத்தை தெரிந்துக் கொண்டு தாக்குவதற்குத்தான் அவர்கள் முயற்சிசெய்வார்கள்.

  தற்போது ஆஸ்திரேலிய இதழ் வெளியிட்டுள்ள சிறப்புச் செய்தியில், இந்தக் கப்பலில் என்னென்ன தொழில்நுட்பங்கள், உளவு அறியும் வசதிகள், தாக்கும் திறன், வேகம், விசையின் ஒவ்வொரு நிலையிலும் உணரப்படக்கூடிய அதிரலைகளின் அளவு, எத்தனை ஆழம் வரை செல்லும், எத்தனை நாள் நீருக்குள்ளேயே இருக்க முடியும், இந்தக் கப்பல் கடல் மட்டத்திலிருந்து எத்தகைய ஆயுதங்களை எதிரிகள் மீது வீசும் வல்லமை கொண்டது போன்ற விவரங்கள் வெளியாகியுள்ளன. இந்த விவரங்கள் யாவும் இதுநாள்வரை பாகிஸ்தான், சீனா, அமெரிக்கா போன்ற நாடுகளின் பாதுகாப்புத்துறைக்கு தெரியாமல் இருந்ததாகவும், இப்போதுதான் கசிந்துள்ளதாகவும் கருதினால் அதைப்போன்ற பேதைமை வேறு இருக்க

  முடியாது.

  "ஸ்கார்பின்' கப்பல் ஒப்பந்தப்புள்ளியின்போது, ஆஸ்திரேலியாவும் இதற்கான முயற்சிகளில் ஈடுபட்டது. ஆனால் அதற்கு அந்த வாய்ப்பு கிடைக்காமல் போனது. இந்த வாய்ப்பை பிரான்ஸ் பெற்றது. இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டவேளையில் பதவியில் இருந்த கடற்படை அதிகாரி அதற்கு பிறகு பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த இரு சம்பவங்களையும் இணைத்துப் பார்க்கும்போது, 22,400 பக்கமுள்ள கப்பல் தொழில்நுட்ப ரகசியங்கள் "தி ஆஸ்திரேலியன்' நிருபருக்கு அவர் மூலம் கிடைத்திருக்கக் கூடும் என்றும் கருத வாய்ப்புள்ளது.

  இந்த விவகாரம் தொடர்பாக முழுமையாக விசாரணை நடத்தி விரைவில் அறிக்கை அளிக்குமாறு கடற்படைத் தலைமைத் தளபதியை பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பாரிக்கர் கேட்டுக் கொண்டுள்ளார். பிரான்ஸ் நிறுவனத்தையும் இதுகுறித்து விசாரணை நடத்தி, அதுதொடர்பான தகவல்களைத் தங்களுடன் பகிர்ந்து கொள்ளுமாறு இந்தியக் கடற்படை கேட்டுக் கொண்டுள்ளது.

  மேலும், இன்றைய கணினித் தொழில்நுட்பத்தில் எந்தத் தகவலையும் ஊடுருவ முடியும் என்பதால், காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசின் முகத்தில் கரிபூச நினைக்கும் பயங்கரவாத அமைப்புகள் இத்தகைய ஆவணங்களை பெருவிலை கொடுத்து வாங்கி, ஆஸ்திரேலிய பத்திரிகையில் வெளியிட ஏற்பாடு செய்திருக்கவும் வாய்ப்பு உள்ளது.

  இதற்கு முன்பு மும்பையில் ஒரு நீர்மூழ்கிக் கப்பல் வெடித்து, பல வீரர்கள் பலியானார்கள். சம்பவம் நடந்த அந்த நேரத்தில், அது எவ்வாறு நடந்தது என்பது குறித்து ஆய்வு நடத்துவதாக கடற்படை அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் அதன் உண்மை என்ன என்பது இதுவரை யாருக்கும் தெரியாது. அந்தக் கப்பல் குறித்த ரகசியங்களை தெரிந்துக் கொண்டு, அதனை எதிரிகள் தொலைவிலிருந்தே கணினிகளை இயக்கச் செய்து விபத்து ஏற்படுத்தியிருக்கக்கூடும்.

  இதேபோன்று ரகசியங்கள் வெளியாகியிருப்பதால் ஸ்கார்பின் நீர்மூழ்கி கப்பல்களையும் செயலிழக்கச் செய்யவோ அல்லது வெளியிலிருந்தே இதன் நுட்பமான பகுதிகளை இயக்கி, கப்பலை நாசம் செய்யவோ முடியும். ஆகவே இந்திய கடற்படை தனது எல்லா கப்பல்களையும் எதிரிகளின் கண்காணிப்பு வளையத்திற்குள் சிக்கிவிடாமல் பாதுகாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது.

  தற்போது ஸ்கார்பின் தொடர்பான ஆவணங்கள் வெளியாகிவிட்டன என்கின்ற உணர்வின் காரணமாக, தொழில்நுட்பத்தில் சிறு மாறுதல்கள், வடிவமைப்பில், தாக்குதிறனில் புதிய உத்திகளை மாற்றி அமைத்தாக வேண்டும். ஒரேயடியாக ஆறு நீர்மூழ்கிக் கப்பல்களுக்கான ஒப்பந்தத்தை ரத்து செய்வதோ அதன் மூலம் ரூ.23,562 கோடியை இழப்பதோ புத்திசாலித்தனமாகாது.

  இந்த விவகாரத்தில் நாம் வருத்தப்பட வேண்டியது இத்தகைய கப்பலை நாமே வடிவமைக்க முடியாமல், பிரான்ஸ் போன்ற ஒரு நாட்டை எதிர்நோக்கி இருக்கிறோமே என்பதுதான். சுதந்திர

  மடைந்து 70 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதுதான் தொழில்நுட்பத்துடன் இணைந்த அந்நிய முதலீட்டுடன் இந்தியாவிலேயே ராணுவத் தளவாடங்கள் உற்பத்தி செய்ய இந்தியா முன்வந்திருக்கிறது. அந்த முயற்சியை தகர்க்கும் முயற்சியாககூட இது இருக்கக் கூடும்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai