சுடச்சுட

  

  நாடு முழுவதிலும், பதினைந்து ஆண்டுகள் பழைமையான

  கனரக டீசல் வாகனங்களின் உரிமத்தை ரத்து செய்யவும், அந்த வாகனங்கள் சாலையில் ஓடினால் அல்லது நிறுத்தப்பட்டுக் கிடந்தால் அதைப் பறிமுதல் செய்யவும் வகை செய்யும் சட்ட வரைவு, விரைவில் மத்திய அமைச்சரவையின் ஒப்புதலைப் பெறவிருக்கிறது.

  ஏற்கெனவே, பசுமைத் தீர்ப்பாயத்தின் தீர்ப்பில் தில்லி நகரில் 15 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழைமையான டீசல் கார்கள் இயங்கக்கூடாது என்று உத்தரவிடப்பட்டது. இந்த விவகாரத்தில் நீதிமன்றத்தில் தடைகோரும் மனு, மேல்முறையீடு என்று வழக்குகள் தொடர்வதால், இதைச் சட்டமாகவே கொண்டுவந்து, முதல்கட்டமாக 15 ஆண்டுகள் பழைமையான கனரக வாகனங்களை இயந்திரக் குப்பையாகக் கருதி அகற்றுவது என மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி நாடு முழுவதிலும் சுமார் 15 லட்சம் கனரக டீசல் வாகனங்களின் ஆயுள் முடிவுக்கு கொண்டுவரப்படும்.

  உடனடியாக பாதிக்கப்படும் இத்தகைய கனரக சரக்கு லாரி உரிமையாளர்களை அமைதிப்படுத்த, குப்பையாக தள்ளப்படும் லாரிகளுக்கு சுமார் ரூபாய் இரண்டு லட்சம் அல்லது ரூபாய் மூன்று லட்சம் வரை இழப்பீடு கொடுப்பது என்று மத்திய அரசு தீர்மானித்துள்ளது. இந்தத் தொகை அளவு மாறுபடக்கூடும். ஆனால், நிச்சயமாக ஒரு தொகை லாரி உரிமையாளர்களுக்கு வழங்கப்படவிருக்கிறது.

  நீதிமன்றங்கள் மற்றும் பசுமைத் தீர்ப்பாயம் அனைத்தும் சாலை பாதுகாப்பு, காற்று மாசுபடுவதைத் தடுத்தல் ஆகியவற்றுக்கு அண்மைக்காலமாக அதிக கவனம் செலுத்தி வருகின்றன. இதற்காக என்ன நடவடிக்கை எடுத்தீர்கள் என்று மத்திய, மாநில அரசுகளை அவர்கள் தொடர்ந்து விளக்கம் கேட்டு வலியுறுத்தி வருவதுதான் அரசை இத்தகைய சட்ட வரைவுக்குக் கட்டாயப்படுத்தியுள்ளது என்பது சொல்லித்தெரிய வேண்டியதில்லை. இத்தகைய சட்டத்தால் சாலையிலிருந்து அகன்றுபோகும் பழைமையான கனரக வாகனங்களால் காற்றுமாசு 30% குறையும். எரிபொருள் திறன் மேம்பாடு காரணமாக, ஆண்டுக்கு 3.2 பில்லியன் லிட்டர் டீசல் மிச்சமாகும். இதனால் அரசுக்கு ரூ.7,000 கோடி மிச்சமாகும் என கூறப்படுகிறது.

  15 ஆண்டுகள் பழைமையான கனரக டீசல் வாகனங்களை சாலையிலிருந்து அப்புறப்படுத்துவதால் நிச்சயமாக இதே அளவுக்கு புதிய கனரக லாரிகள் வந்துவிடும் என்பது உறுதி. இதனால் அரசுக்கும் வாகன உற்பத்தி நிறுவனங்களுக்கும் மிகப்பெரிய வருவாய் காத்திருக்கிறது. வாகன உற்பத்தி நிறுவனங்களுக்கு ரூ.27,000 கோடி வருவாய் உயரும்.

  இதுமட்டுமல்ல, இந்த கனரக வாகனங்களுக்கு கட்டுமானம் (பாடிபில்டிங்) செய்யும் தொழிற்கூடங்களுக்கு திடீரென மிகப்பெரிய அளவில் வேலைவாய்ப்பு ஏற்பட இருக்கிறது. கரூர், நாமக்கல் போன்ற இடங்களில்தான் இந்தத் தொழில் பெருமளவு நடைபெறுகிறது. இங்கே மிக அதிகமான எண்ணிக்கையில் லாரிகள் வரத்தொடங்கும்போது, இதனால் அதிகமான தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கவிருக்கிறது. அதுமட்டுமல்ல, பழைய லாரிகளை இரும்புக் குப்பையாக எடுத்து அதை உடைத்து மீண்டும் இரும்பு உருக்காலைகளுக்கு அனுப்பும் தொழிலாளர்களுக்கும் அதிக வேலைவாய்ப்பு காத்திருக்கிறது.

  புதிய வாகனங்களுக்கான வங்கிக் கடன் வழங்குவதன் மூலம் வங்கிகளுக்கு வட்டி கிடைக்கும். மாநில போக்குவரத்துத் துறைக்குப் புதிய வாகனப் பதிவு மூலமும் அதிக வருவாய் கிடைக்கும். ஒரு சட்டம் பல விதங்களில் பயன் அளிப்பதாக இருக்கப்போகிறது என்பதால் பல துறையினரும் இதை ஆவலுடன் எதிர்நோக்கியிருக்கிறார்கள்.

  பொருளாதார ரீதியில் இது சரியான நடவடிக்கை. இதேபோன்று, கனரக வாகன ஓட்டுநர்கள் உடல்நலன், அவர்களுக்கான குறைந்தபட்ச கல்வித்தகுதி, அரசு செலவில் ஒவ்வோர் ஆண்டும் ஒருவார காலத்துக்கான புத்தாக்கப் பயிற்சி ஆகியவற்றையும் இதே சட்ட வரைவுக்குள் கொண்டு வர வேண்டும்.

  சாலை பாதுகாப்பில் உலகிலேயே மிக மோசமான நாடுகளில் நமது இந்தியாவும் ஒன்றாக இருக்கிறது. ஆண்டுதோறும் ஐந்து லட்சத்துக்கும் அதிகமான சாலை விபத்துகள் இங்கே நடைபெறுகின்றன. இதில் ஏறத்தாழ 1.5 லட்சம் பேர் மரணமடைகிறார்கள். லட்சக்கணக்கானோர் உடல் ஊனமடைகிறார்கள். நாளொன்றுக்கு 400 சாலை மரணங்கள், அதாவது, நிமிடத்துக்கு 3.6 பேரின் உயிரிழப்பு என்பது எத்தகைய கொடுமை என்பதை நாம் எண்ணிப் பார்ப்பதில்லை.

  எப்போதோ செய்திருக்க வேண்டிய மாற்றத்தை இப்போதுதான் மத்திய அரசு முனைப்புடன் செயல்படுத்த முற்பட்டிருக்கிறது. மோட்டார் வாகனச் சட்டத்தில் 68 திருத்தங்களை கொண்டு வரு

  வதுடன் புதியதாக 28 பிரிவுகளையும் சேர்க்கிறது மத்திய அரசின் மோட்டார் வாகன சட்டத்திருத்த மசோதா. 15 ஆண்டுகளுக்கு மேற்பட்ட டீசல் வாகனங்களுக்கு தடையும் விதிக்க இருக்கிறது. இதன்மூலம், 2020-க்குள் சாலை விபத்துகளின் எண்ணிக்கை பாதிக்குப் பாதியாக குறையும் என்று அரசு எதிர்பார்க்கிறது.

  சாலையில் நடைபெறும் பல்வேறு விபத்துகளுக்குக் காரணம், ஓட்டுநர் மது அருந்தியிருப்பதும், வாகனம் கட்டுப்பாட்டை இழக்கும் அளவுக்கு அதிக சரக்கு ஏற்றப்பட்டிருப்பதும் அல்லது சரக்கை உடனே போய் கொண்டுவர வேண்டும் என்பதற்காக அதிவேகத்தில் செல்வதும்தான். இத்தகைய விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்பு, அங்கங்கள் இழப்பு, குடும்பத்தின் சோகம், நாட்டின் பொருளாதார இழப்பு மட்டுமல்லாமல் அதிக சுமை ஏற்றுவதால் சாலைகள் விரைந்து சேதமடைவதைப் புரிய வைத்தல் என பல்வேறு படிப்

  பினைகளை லாரி ஓட்டுநர்களுக்கு ஆண்டுதோறும் நினைவூட்டுவது அரசின் கடமை.

   

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai