Enable Javscript for better performance
நழுவ விடும் வாய்ப்பு!- Dinamani

சுடச்சுட

  

  வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் மூலம் 2015-ஆம் ஆண்டு ஜனவரி முதல் நவம்பர் வரையிலான 11 மாதங்களில் இந்தியாவுக்கு ரூ.1,12,958 கோடி அன்னியச் செலாவணி கிடைத்துள்ளது. இந்த வளர்ச்சியின் அளவு 2.4% மட்டுமே! 2014-ஆம் ஆண்டு இதே காலகட்டத்தில் நாம் பெற்ற அன்னியச் செலாவணி, 2013 ஆண்டைக் காட்டிலும் 15.3% அதிகம்.
   இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டவர் எண்ணிக்கை 2015-ஆம் ஆண்டில் ஜனவரி முதல் நவம்பர் வரை 71 லட்சம் பேர். இது 2014-ஆம் ஆண்டைக்காட்டிலும் 4.5% அதிகம். 2013-ஆம் ஆண்டை ஒப்பிடும்போது 2014-ஆம் ஆண்டில் வந்தவர்கள் 10.5% அதிகம்.
   பதினைந்து நாடுகளிலிருந்து இந்தியாவுக்கு அதிகமாக சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். இந்த 15 நாடுகளின் பங்களிப்பு மொத்தத்தில் 74%. 2015 நவம்பர் மாதம்வரை இந்தியா வந்த வெளிநாட்டவர்களில் அதிகமானோர் அமெரிக்கர்கள் (15.7%). அதற்கு அடுத்த நிலையில் வங்கதேசம் (12%), இங்கிலாந்து (11%), கனடா (4.5%), ஆஸ்திரேலியா (4.3%) மலேசியா (3.43%),ரஷியா (3.4%), ஜெர்மனி (3.3%), பிரான்ஸ் 2.93%, இலங்கை 2.89%, சீனா 2.83%, சிங்கப்பூர் 2.19% தாய்லாந்து 1.5%.
   வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளைக் கவர்வதற்காக, இந்தியாவுக்கு வந்து இறங்கியதும் விசா பெற்றுக்கொள்ளும் முறை பல நாடுகளுக்கு விரிவுபடுத்தப்பட்டது. அதாவது, குறிப்பிட்ட சில நாடுகளிலிருந்து இந்தியா வரும் சுற்றுலாப் பயணிகள் முன்கூட்டியே விசா பெற வேண்டிய தேவையில்லை. ஆனால், இது குறித்த செய்தி வெளிநாட்டுப் பத்திரிகைகளில் பரவலாக இடம்பெறச் செய்யவில்லை. விளைவு? வருகைக்குப் பிறகான விசா எண்ணிக்கை 2014-இல் குறைந்துவிட்டது.
   இந்திய நாணய மதிப்பில் அன்னியச் செலாவணி மதிப்பு அதிகம் என்றாலும்கூட, அமெரிக்கர் வருகை மற்றும் அமெரிக்க டாலர் மதிப்பில் நாம் இன்னமும் பின்தங்கிப் போகிறோம். அப்படியானால், இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டவர் எண்ணிக்கையிலும், கிடைக்கும் அன்னியச் செலாவணியிலும் வளர்ச்சி காணப்பட்டாலும்கூட, இந்த வளர்ச்சி முந்தைய ஆண்டுகளைவிடக் குறைந்து போனதற்கு என்ன காரணம்?
   இந்தியாவில் மிகச் சில இடங்களில் நடைபெறும் வல்லுறவு, திருட்டு போன்ற நிகழ்வுகளை இந்தியா முழுமைக்குமாகப் பொதுமைப்படுத்திப் பரபரப்பாக்குவது 2012-இல் நடந்த நிர்பயா வல்லுறவு மற்றும் கொலை வழக்கு விவகாரம் 2015-இல் "இந்தியாவின் மகள்' குறும்படமாக வெளியாகி, உலக அளவில் இந்தியா ஒரு பாதுகாப்பற்ற நாடு என்ற தோற்றத்தை உருவாக்கியது. இதையும் மீறி வெளிநாட்டவர் பலர் இந்தியாவுக்கு வருகை தருகிறார்கள் என்பது ஆறுதலான செய்தி.
   சுற்றுலாப் பயணிகளைக் கவர்வதில், மலேசியா, சிங்கப்பூர், இலங்கை ஆகிய நாடுகள் முனைப்பு காட்டுகின்றன. பல்வேறு உலக நாடுகளின் சுற்றுலா முகவர்களை அழைத்துவந்து அவர்களுக்கு தங்கள் வசதிகளை அறிமுகப்படுத்துவதிலும் அந்த நாடுகள் கவனம் செலுத்துகின்றன. இதற்காக கணிசமான தொகையை முதலீடு போல செலவிடுகிறார்கள். இந்தியா இந்த விவகாரத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது.
   அண்மைக் காலமாக, தென்னிந்தியாவுக்கு வரும் வெளிநாட்டவர் எண்ணிக்கையில் கணிசமான வளர்ச்சி இல்லை. வெளிநாட்டுப் பயணிகள் எந்தெந்த விமான நிலையங்களுக்கு வருகிறார்கள் என்கிற புள்ளிவிவரத்தைப் பார்த்தோம் என்றால், சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்துக்கு வருவோர் 7% பேர், திருச்சிக்கு வருவோர் இவர்களில் 1.10% நபர்கள். திருவனந்தபுரம் வந்து இறங்குவோர் 1.62%. மற்ற விமான நிலையங்களில் இறங்கி, தென்னிந்தியாவுக்கும் வருவோர் இருக்கிறார்கள் என்றாலும் அவர்கள் மிகச் சிலராகவே இருப்பார்கள்.
   இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டவர் இங்கே பொழுதுபோக்கவோ, உழைப்பின் சலிப்பைப் போக்கிக்கொள்ளவோ வருபவர்கள் அல்ல. அத்தகையோர் தாய்லாந்து, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்குச் செல்வார்கள். இந்தியாவுக்கு வருவோர், இந்தியப் பண்பாடு, கலாசாரம், அதன் தொன்மை, ஆன்மிகம், கோயில்கள் இவற்றுக்காகவே வருகிறார்கள். இந்தியாவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் அனைவருமே பெரும் பணக்காரர்கள் அல்ல. பெரும்பாலானவர்கள் இந்தியாவைப் பற்றி, இந்தியர்களைவிட அதிகமாகப் படித்துவிட்டு வரும் நடுத்தர வர்க்கத்தினரே. இவர்களை இந்தியாவில் எவ்வாறு மதிக்கிறோம் என்பதே நம் சுற்றுலாவுக்கு நாம் தரும் மறைமுகமான விளம்பரமாக அமைகிறது.
   தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்கள், புராதன சின்னங்கள் மட்டுமே ஓரளவு நன்றாகப் பராமரிக்கப்படுகின்றன. மேலும், அங்கு வரும் வெளிநாட்டவருக்கு உதவிடும் பயிற்சிபெற்ற வழிகாட்டிகள் இருக்கிறார்கள். இந்தக் கோயில்களில் வெளிநாட்டவர் கருவறை வரையிலும் அனுமதிக்கப்படுகிறார்கள். ஆனால், இதே நிலை எல்லா கோயில்களிலும் இருப்பதில்லை. தஞ்சைப் பெரிய கோயில் வளாகத்தில் எல்லா இடங்களிலும் சுற்றிப் பார்க்கும் வெளிநாட்டவர், மற்ற கோயில்களில் இதேபோன்று தரிசனம் பெறுவது சாத்தியமில்லை.
   பல சுற்றுலாத் தலங்களில் சுகாதாரமானக் கழிப்பறை வசதிகள்கூட கிடையாது. இலங்கை போன்ற சிறு நாடுகள் தரும் முக்கியத்துவத்தைக்கூட நாம் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு இன்னமும் தரவில்லை என்பதே கசப்பான உண்மை. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேற்பட்ட சரித்திரமும் பாரம்பரியமும் உள்ள இந்தியா, உலக நாடுகள் அனைத்திலிருந்தும் மிக அதிகமான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் எல்லா அம்சங்களும் நிறைந்தது. ஆனால், அதை முறையாக பயன்படுத்திக்கொள்ள நாம் தவறுகிறோம்!
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai