Enable Javscript for better performance
தாக்குதலும் காரணமும்!- Dinamani

சுடச்சுட

  

  பிரதமர் நரேந்திர மோடி, திடீர் பயணமாக லாகூர் சென்று பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் இல்லத்துக்குச் சென்றதும், அன்பை வெளிப்படுத்தியதும் பயங்கரவாதிகளுக்கு உடன்பாடில்லாதவை. இந்தியாவும் பாகிஸ்தானும் அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுவிடக் கூடாது என்கிற ஒரே எண்ணத்துடன்தான், தற்போது பஞ்சாப் மாநிலத்தில் பதான்கோட்டில் உள்ள இந்திய விமானப்படைத் தளத்தின் மீது பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
   இந்திய வீரர்கள் இந்தத் தாக்குதலை எதிர்கொண்டு, ஐந்து பயங்கரவாதிகளை ஜனவரி 2-ஆம் தேதியிலும், மேலும் இரண்டு பயங்கரவாதிகளை மறுநாளும் சுட்டு வீழ்த்தினர். இதில் இந்திய வீரர்கள் ஏழு பேரும் உயிர்த் தியாகம் செய்துள்ளனர்.
   இத்தகைய தாக்குதல் நடத்தப்படலாம் என்று இந்திய உளவுத் துறை ஏற்கெனவே எச்சரிக்கை செய்திருந்தது. இருப்பினும், இதற்காக இவர்கள் அலட்சியமாக இருந்தார்கள் என்று சொல்லிவிட முடியாது. நம் வீரர்களைக் குறை சொல்வதும் சரியல்ல. பயங்கரவாதிகள் நம்மைவிட எச்சரிக்கையாக, மாற்றுவழிகளை யோசித்துச் செயல்படுகிறார்கள் என்றுதான் இந்தச் சம்பவங்களைப் பார்க்க வேண்டும்.
   பதான்கோட் விமானப்படை தளத்தின் மீதான தாக்குதலுக்கான சதி பாகிஸ்தானில் தீட்டப்பட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக மத்திய உள்துறை இணையமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார். பயங்கரவாதிகளுக்கு மகிழுந்து ஓட்டியவரின் தொலைபேசிக்கு பாகிஸ்தானிலிருந்து அழைப்பு வந்திருப்பதும், அதே தொலைபேசியிலிருந்து மீண்டும் பல அழைப்புகள் பாகிஸ்தானுக்கு செய்யப்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளதால் இந்தத் தாக்குதல் பாகிஸ்தானிலிருந்து வழிநடத்தப்பட்டது உறுதியாகியுள்ளது.
   இத் தாக்குதல்கள் இரு நாடுகளின் பேச்சுவார்த்தையைத் தடுத்து விடாது என்பதில் இரு நாடுகளின் பிரதமர்களும், பாதுகாப்புத் துறைச் செயலர்களும் மிக உறுதியாக இருக்கிறார்கள். இந்த உறுதித்தன்மை மீது தாக்குதல் நடத்த பயங்கரவாதிகளால் முடியாது.
   வழக்கமாக, பயங்கரவாதிகள் தாக்குதல் என்பது பொது இடங்களில் இந்திய மக்கள் மீதான தாக்குதலாக இருக்கும். ஜம்மு - காஷ்மீரில் மட்டுமே பயங்கரவாதிகளுக்கும் ராணுவத்துக்கும் இடையே துப்பாக்கிச்சூடு நடக்கும். நாடாளுமன்றத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பிறகு, இந்திய விமானப்படைத் தளத்தின் மீது, அதாவது அரசு அமைப்பின் மீது நடத்தப்படும் தாக்குதலாக இது அமைந்துள்ளது. பயங்கரவாதிகள் ராணுவத்துக்குச் சவால் விடுகிறார்கள் என்றால் அவர்களது தொடர்புகள், நிதி ஆதாரங்கள் மிகவும் பரந்துபட்டதாக இருந்தாலொழிய இத்தகைய தாக்குதல்கள் சாத்தியமில்லை.
   பாகிஸ்தான் ராணுவத் தளபதி ரஹீல் ஷெரீப் அளித்துள்ள பேட்டியில், பயங்கரவாதத்தை ஒழிக்கும் ஆண்டாக 2016 அமையட்டும் என்று கூறியிருப்பதோடு, ஊழல் மற்றும் கருப்புப்பணம்தான் பயங்கரவாதிகளுக்கு ஊக்கம் தருகிறது என்றும், இது தடை செய்யப்பட்டால் மட்டுமே பயங்கரவாதமும் மட்டுப்படும் என்றும் கருத்து தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி வெளிநாட்டுப் பயணங்களில் எங்கு பேசினாலும், பயங்கரவாதிகளுக்கு நிதி அளிப்பதையும், அவர்களுக்கு நிதி சென்று சேர்வதையும் நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்.
   ஆனால், இந்தியாவில் பயங்கரவாதிகளுக்குப் பணம் கிடைக்கச் செய்வதில், சில அங்கீகாரம் பெறாத அரசியல் கட்சிகளும், மனித உரிமை சங்கங்கள் என்ற பெயரில் சில அமைப்புகளும், சில தொண்டு நிறுவனங்களும் முக்கியப் பங்காற்றுகின்றன. இது உளவுத் துறைக்கும் தெரியும். இத்தகைய நிறுவனங்களுக்கு வெளிநாட்டுப் பணம் வருவதையும், அவர்கள் அதை முறைப்படி தெரிவிக்கவில்லை அல்லது கணக்கு விவரம் தவறு என்று தடைசெய்தால் இந்திய ஊடகங்கள் அவர்களுக்காக நியாயம் பேசுவதும், சில நேரங்களில் நீதிமன்றங்கள்கூட இடைக்காலத் தடை வழங்குவதும் நடக்கிறது.
   பயங்கரவாதத்தை ஒடுக்க "பொடா' போன்ற சட்டங்களை அமல்படுத்தினாலும் இந்திய ஊடகங்கள் எதிர்க்கின்றன. அரசியல்சாசனத்தின்படி அமலில் உள்ள சட்டங்களே போதுமானவை என்கின்றன. ஆனால், வழக்கமான சட்டங்களைப் பயன்படுத்தி தொடர்ந்து வாய்தா வாங்குவதும், வரம்புமீறிய காலநீட்டிப்பும், கடைசியில் ஆதாரம் இல்லை என்று விடுவிப்பதும்தான் வழக்கமாகிவிட்டிருக்கிறது.
   அயோத்தி பாபர் மசூதி இடிப்புக்குப் பிறகுதான் இந்தியாவில் பயங்கரவாதத் தாக்குதல் அதிகரித்தது என்று சொல்வதை ஏற்றுக்கொள்வதற்கில்லை. இந்திய சுதந்திரமும் அதனையொட்டிய பிரிவினையும் ஏற்கெனவே தீவிரவாதத் தாக்குதலுக்கு ஆரம்பம் குறித்துவிட்டிருந்தன. பஞ்சாப், அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களில் அதற்கு முன்பே பயங்கரவாதிகள் செயல்பட்டு வந்தனர்.
   எத்தனை பயங்கரவாதத் தாக்குதல்களில் நடவடிக்கை எடுக்கப்பட்டது, கைது செய்தவர்களை விடுவிக்க வேண்டிய நிலை ஏன் ஏற்பட்டது, எத்தனை வழக்குகளில் எத்தனை பேர் தண்டனை பெற்றனர் என்கிற புள்ளிவிவரத்தைப் பார்த்தால், தண்டனை பெற்றவர்கள் மிகமிகக் குறைவு. இறந்தவர்கள் எண்ணிக்கைக்கும், தீர்ப்புக் கண்ட வழக்குகள் எண்ணிக்கைக்கும் மிகநீண்ட இடைவெளி இருக்கிறது.
   வாக்கு வங்கி அரசியல் மட்டுமன்றி, சில விவரங்களையும் சில ஆதாரங்களையும் பொதுநன்மை கருதி வெளிப்படையாக நீதிமன்றத்தில் முன்வைக்க முடியாத நிலையில் காவல் துறை இருப்பதும், சட்டத்தின் ஓட்டைகள் பயங்கரவாதத்தைத் தடுப்பதில் தடையாக இருக்கின்றன என்பதும் யதார்த்த உண்மைகள். பயங்கரவாதிகளுக்கு உதவி செய்வோரையும், அவர்களுக்கு நிதியுதவி செய்பவர்களையும், தண்டிக்கும் வழக்குகளின் எண்ணிக்கையும் பெருகினால் மட்டுமே, பயங்கரவாதிகளின் தாக்குதலைக் குறைக்கமுடியும்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai