Enable Javscript for better performance
லோதாவின் பரிந்துரைகள்!- Dinamani

சுடச்சுட

    

    இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தை மாற்றியமைப்பதற்காக நீதிபதி லோதா தலைமையிலான குழு அளித்துள்ள பரிந்துரைகளில் தலையாயது - கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் முதன்மை பொறுப்புகளிலிருந்து அரசியல் தலையீட்டைக் குறைக்கப் பரிந்துரைத்துள்ளதுதான். பி.சி.சி.ஐ. தலைவர், துணைத் தலைவர், செயலர், துணைச்செயலர், பொருளாளர் ஆகிய முக்கிய பொறுப்புகளை வகிப்பவர் அரசுப் பதவியில் இருக்கும் அதிகாரி அல்லது அரசியல்வாதியாக இருத்தல் கூடாது; இவர்கள் 70 வயது கடந்தவராக இருத்தல் கூடாது. இப்பதவிகளில் ஒரு முறைக்கு மூன்று ஆண்டுகள் வீதம் இரு முறை மட்டுமே பதவி வகிக்கலாம் எனும் பரிந்துரையைக் கிரிக்கெட் உலகம் வரவேற்கும்.
     அத்துடன், இவ்வளவு ஊழல் முறைகேடுகளுக்கு வித்திட்ட ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளுக்கு தனி ஆட்சிமன்றக் குழு அமைத்து, நிதி நிர்வாகம், போட்டிகளைத் தீர்மானிப்பது போன்றவற்றில் தனி அதிகாரம் அளிக்கப் பரிந்துரைக்கிறது. அதேவேளையில், பி.சி.சி.ஐ. கட்டுப்பாட்டில் இந்தக் குழு இருக்கவும் வேண்டும். பி.சி.சி.ஐ. செயலர், பொருளாளர் இருவரும் ஐ.பி.எல். ஆட்சிமன்றக் குழுவில் பதவிவழி உறுப்பினர்களாக இருப்பார்கள். இரண்டு பேர் பொதுக்குழுவால் தேர்வு செய்யப்படுவார்கள். இரண்டு பேர் போட்டிகளில் ஈடுபடும் அணிகளின் பிரதிநிதிகளாக இருப்பார்கள். இரண்டு பேர் இதுவரை இல்லாத நடைமுறையாக - விளையாட்டு வீரர்களின் பிரதிநிதிகளாக இருப்பார்கள். இதற்கும் மேலாக ஆச்சரியப்படுத்தும் ஒன்பதாவது உறுப்பினர் யார் என்றால்- பொதுக்கணக்குத் தணிக்கைத் துறையின் அதிகாரி.
     ஐ.பி.எல். போட்டிகள் நடத்தப்பட்டதில் பல நூறு கோடி ரூபாய் வரிஏய்ப்பு நடந்துள்ளதாக புகார்கள் கூறப்படும் தருணத்தில், பொதுக்கணக்குத் தணிக்கைத் துறையின் அதிகாரியை ஆட்சி மன்றக் குழுவில் இடம்பெறும்படி செய்வது வரவேற்புக்குரியது. வருமான வரித்துறை அதிகாரியையும் ஒரு பிரதிநிதியாக சேர்க்கலாம். தவறில்லை.
     ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் போல, கால்பந்து, டென்னிஸ் உள்பட பல்வேறு விளையாட்டுப் பிரிவுகளிலும் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி போன்று வீரர்களை ஏலத்தில் எடுத்து போட்டி நடத்தப்படும்போது, அவை அனைத்துக்கும் இதேபோன்ற ஆட்சிமன்றக் குழுவும், தணிக்கை அதிகாரிகளும் இடம்பெறச் செய்வது வரிஏய்ப்பைத் தடுக்க உதவும்.
     அரசுப் பதவி வகிக்கும் அதிகாரிகள், அரசியல்வாதிகள் இல்லாதபடி செய்வதால் அரசியல் தலையீடு குறையும். பி.சி.சி.ஐ. நிர்வாகம் முழுவதிலுமே பல அடுக்குகளை உருவாக்கி, ஒவ்வொன்றிலும் யார், யார் பொறுப்பில் இருக்க வேண்டும் என்பதையும் குழு பரிந்துரைத்துள்ளது. பி.சி.சி.ஐ. பொதுக்குழுவில் இடம்பெறுவோர் இந்தியாவின் அனைத்து மாநிலங்களின் பிரதிநிதித்துவம் பெற்றிருக்க வேண்டும். விளையாட்டு வீரர்களைத் தேர்வு செய்தல், போட்டிகளில் அவர்களது விளையாட்டுத் திறனை மதிப்பீடு செய்தல் ஆகியவற்றுக்கான குழுக்களில் கிரிக்கெட் வீரர்கள் எண்ணிக்கை மற்ற உறுப்பினர்களைவிடக் கூடுதலாக இருக்க வகை செய்யப்பட்டுள்ளது. இதனால் அரசியல் தலையீடு, செல்வாக்கு மூலம் அழுத்தம் பெற்று தேர்வு செய்யப்படுதல் தவிர்க்கப்படும்.
     கிரிக்கெட் வாரிய நிர்வாக அதிகாரம் அரசியல்வாதிகள், அதிகாரிகளிடமிருந்து கிரிக்கெட் வீரர்களுக்கு மாற்றப்படுவது வரவேற்புக்குரியது. இதுவரை அவர்கள் கிரிக்கெட் வாரிய நிர்வாகிகளின் கட்டுப்பாட்டில் இருந்ததுபோய், அவர்களது கருத்துக்கு மரியாதை ஏற்பட்டிருக்கும் நிலைமை வரவேற்புக்குரியது. அதேநேரத்தில், அவர்களும்கூடத் தொடர்ந்து இரண்டு முறை பதவி வகிக்க முடியாது. நிர்வாகரீதியான பிரச்னைகளுக்குக் கண்காணிப்பாளர், ஒழுங்கு முறை அதிகாரி, தேர்தல் அதிகாரி போன்ற பரிந்துரைகள் விளையாட்டு வீரர்கள் தவறு செய்யாமல் தடுக்கும்.
     நீதிபதி லோதாவின் 159 பக்கப் பரிந்துரை, இரண்டு அடிப்படைக் கேள்விகளை எழுப்பி அதற்கு விடைகாண முற்பட்டிருக்கிறது. இதன்மூலம் கிரிக்கெட் விளையாட்டு மேம்படுமா, இந்தியக் கிரிக்கெட் ரசிகர் என்ன விரும்புகிறார் என்பவைதான் அந்தப் பரிந்துரைகளின் அடிப்படை. இந்தியக் கிரிக்கெட்டில் மலிந்து கிடக்கும் முறைகேடுகளைக் களைவது என்பதுடன் விளையாட்டு வீரர்களுக்கு கூடுதல் அதிகாரம், அரசியல்வாதிகளின் தலையீட்டை முடிந்தவரை குறைப்பது என்பதில் தொடங்கி, கிரிக்கெட் ஆணைய நிர்வாகத்தைத் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவருவது வரை, மிகப்பெரிய மாற்றங்களுக்குப் பரிந்துரை செய்திருக்கிறது.
     எல்லாமும் சரிதான். ஆனால், பந்தயம் கட்டுவதை அனுமதிக்கலாம் என்று நீதிபதி லோதா குழு பரிந்துரை செய்திருப்பது ஆச்சரியம் அளிக்கிறது. கிரிக்கெட் சூதாட்டத்தை ஒழிப்பது இயலாது என்றும், சட்டப்படி முறைப்படுத்துவதே சரி என்றும் தோன்றியிருக்க வேண்டும். ஒழிக்க முடியாது என்பதற்காகக் கட்டுப்பாடுகளுடன் அனுமதித்து அதற்கு சட்டரீதியான அங்கீகாரம் அளிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. அப்படிச்செய்தால், அதே அளவுகோலை கொலை, கொள்ளை, கற்பழிப்பு, திருட்டு, ஊழல் என்று எல்லாவற்றிற்கும் கையாள வேண்டியிருக்கும். அது ஆபத்து.
     ஐ.பி.எல். போட்டிகள் மிகப்பெரும் நெருக்கடிக்கு உள்ளானதன் காரணமே கிரிக்கெட் சூதாட்டம்தான். சூதாட்டத்தில் பெரும்பணம் பெற வேண்டும் என்ற கெடுநோக்கமே, விளையாட்டு வீரர்கள் எப்படி விளையாட வேண்டும், எந்தெந்த போட்டிகளில் யார் வெற்றி பெறுவது என்றெல்லாம் முன்தீர்மானிப்புடன் நடத்தப்பட்டன. மற்ற பரிந்துரைகளை உச்சநீதிமன்றம் அப்படியே ஏற்றுத் தீர்ப்பு வழங்கினாலும், கிரிக்கெட் சூதாட்டத்தை அனுமதிப்பதில் மாற்றுக்கருத்தை கொண்டிருக்கும் என நம்புவோம், எதிர்பார்க்கிறோம்.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai