Enable Javscript for better performance
சரியான நேரம், சரியான கேள்வி!- Dinamani

சுடச்சுட

  

  தில்லியில் ஒற்றைப்படை, இரட்டைப்படை எண்கள் கொண்ட வாகனங்களுக்குத் தேதி வாரியாகக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள நிலையில், பொதுப் போக்குவரத்து வாகனங்களின் எண்ணிக்கையைப் போதுமான அளவுக்கு தில்லி அரசு அதிகரிக்கவில்லை என்று உச்சநீதிமன்றம் குறை கூறியுள்ளது.
   இந்த விவகாரத்தில் நீதிமன்றம் எழுப்பியுள்ள நியாயமான கேள்விகள் இரண்டு. முதலாவது, மகிழுந்துகளின் இயக்கத்துக்கு கட்டுப்பாடு விதித்த தில்லி அரசின் ஆணைக்குக் கட்டுப்பட்டு, மகிழுந்துகளை எடுக்காமல் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்த ஆர்வம் காட்டுவோர், நெரிசலில் பயணம் செய்வதை விரும்புவார்களா? இரண்டாவதாக, அரசு போக்குவரத்து வாகனங்கள் மட்டும் காற்று மாசினை ஏற்படுத்தலாமா? இந்த இரு கேள்விகளும் தில்லி பெருநகருக்கு மட்டுமே உரித்தானவை அல்ல. இந்தியாவில் உள்ள அனைத்துப் பெருநகரங்களுக்கும் பொருந்தக்கூடியவை.
   மகிழுந்துகளை வீட்டிலேயே விட்டுவிட்டுப் பொது வாகனத்தைப் பயன்படுத்தும்படி, வசதிபடைத்தவர்களை அழைக்கும்போது, அவர்கள் பயணம் செய்யத்தக்க வகையில், தூய்மையான, அதிக பயணிகளை ஏற்றி மூச்சுத்திணறல் இல்லாத பயணத்தை உருவாக்கித் தருவது அரசின் கடமை. இதற்கான கட்டணங்களை, சாதாரண கட்டணங்களைவிட மூன்று, நான்கு மடங்கு உயர்த்துவதை வசதி படைத்தோர் ஆட்சேபணை செய்ய மாட்டார்கள்.
   ஒரே அலுவலகத்தில் பணி புரியும் நண்பர்கள் மூன்று அல்லது நான்கு பேராக வாடகை மகிழுந்துகளில் (கால் டாக்ஸி) செல்வதும், கட்டணத்தைப் பகிர்ந்துகொள்வதுமான நடைமுறை தற்போது நகரங்களில் அதிகரித்து வருகிறது. இதற்கு முதன்மையான காரணம், பல வாடகை மகிழுந்து நிறுவனங்கள் செல்லிடப்பேசியில் தொடர்பு கொண்டாலே வீடு தேடி வரும் நிலை உருவாகிவிட்டது. இத்தகைய வாடகை மகிழுந்துகளின் கட்டணம், ஆட்டோக்காரர்களின் கட்டணத்தைக் காட்டிலும் குறைவாக இருக்கிறது.
   சென்னையை எடுத்துக் கொண்டால், தாழ்தள குளிரூட்டுப் பேருந்துகள் கூடுதல் கட்டணத்தில் இயக்கப்படுகின்றன. இவற்றைப் பயணிகள் விரும்புகிறார்கள். ஆனால், அவற்றின் எண்ணிக்கை மிகக் குறைவு. இத்தகைய பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதால், மகிழுந்து வைத்திருப்போரும் இந்த பொதுப் பேருந்துகளை பயன்படுத்த முனைவர். புறநகர் ரயில்கள், மெட்ரோ ரயில்களில் முதல் வகுப்புப் பெட்டி ஒன்றினை கூடுதலாக இணைத்தால் என்ன என்கிற நீதிமன்றத்தின் கேள்வியும் அர்த்தமுள்ளது. கூடுதலாக ஒரு பெட்டி சேர்ப்பதன் மூலம், வசதி படைத்த நூறு பேர் கூடுதலாக ரயில் சேவையைப் பயன்படுத்துவர். மகிழுந்துகள் சாலைக்கு வருவது மேலும் குறையும்.
   போக்குவரத்து நெரிசலுக்குக் காரணம் சாலையில் வாகனங்களின் எண்ணிக்கை பல மடங்காக உயர்ந்திருப்பதுதான். சாலையில் வாகனங்களின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டுமானால், பொதுப் போக்குவரத்து வசதியானதாகவும் அவரவர் வசதிக்கேற்ற வகை கட்டணங்களில் தூய்மையானதாகவும், நேரம் தவறாத வகையிலும் இயக்கப்படுவது மிகமிக அவசியம்.
   தில்லியில் அமல்படுத்தப்பட்டிருக்கும் தேதிவாரியான வாகனக் கட்டுப்பாடு எந்த அளவுக்கு வெற்றி பெறும் என்பதை சொல்வதற்கில்லை. உலகின் பல நாடுகளில் வெற்றி பெறவில்லை. இதை மெக்ஸிகோவில் நடைமுறைப்படுத்தியபோது வாகனங்களின் எண்ணிக்கை இரட்டிப்பான அவலம் ஏற்பட்டது. வீட்டிற்கு இரண்டு வாகனங்களை வாங்க முற்பட்டனர் பொதுமக்கள்.
   பெருநகரங்களில் உச்சமான போக்குவரத்து வேளைகளில், மகிழுந்துகள் எண்ணிக்கையைக் குறைப்பதுபோல, பள்ளி, கல்லூரிப் பேருந்துகளின் எண்ணிக்கையையும் குறைப்பது அவசியம். ஒவ்வொரு தனியார் பள்ளி, கல்லூரிகளும் குறைந்தது 10 பேருந்துகள் வைத்திருக்கின்றன. தில்லியில் மட்டுமே இத்தகைய பள்ளி, கல்லூரி வாகனங்களின் எண்ணிக்கை 2,000-க்கும் அதிகம். சென்னையிலும் இதே நிலைதான். பள்ளி, கல்லூரிகளின் நேரங்களை, அரசு அலுவலக நேரத்துக்கு சில மணி நேரம் முன்பாகவோ அல்லது பின்பாகவோ தொடங்கும் விதத்தில் மாற்றி அமைத்தால், இவை போக்குவரத்து நெரிசலைக் குறைக்க உதவும்.
   தனியார் பள்ளி நிறுவனங்களின் வாகனங்கள் சி.என்.ஜி.யில்தான் இயக்கப்பட வேண்டும் என்கிற கட்டாயம் ஏற்பட்டால், காற்று மாசு கணிசமாகக் குறையும். தில்லியில் உள்ளதுபோல, பொதுப் போக்குவரத்து வாகனங்கள் அனைத்துமே இயற்கை எரிவாயுவில் மட்டுமே இயக்கப்பட வேண்டும் என்கிற நிலைமை, சென்னையில் அமல்படுத்த வேண்டியது அவசியம்.
   நீதிமன்றம் கேட்டிருப்பதைப்போல, அரசு வாகனங்கள் மட்டும் காற்று மாசினை ஏற்படுத்தலாமா என்ற கேள்வியும் மத்திய - மாநில அரசு வாகனங்கள் அனைத்துக்கும் பொருந்தும். அரசு வாகனங்களையும் இயற்கை எரிவாயுவில் இயங்கச் செய்வதே இதற்கான எளிய தீர்வு.
   பொதுப் போக்குவரத்தை அதிகரிப்பது, தனியார் வாகனங்களை கட்டுப்படுத்துவது, காற்று மாசுவை கணிசமாகக் குறைப்பது இவை மூன்றும் அவசர அடிப்படைத் தேவைகள். உலகில் மிக அதிகமான காற்று மாசு காணப்படும் நகரங்கள் இந்தியாவில் தான் அதிகம். புற்றுநோய், காசநோய் போன்ற பல்வேறு பாதிப்புகளுக்கு இது வழிகோலும். அதுமட்டுமல்ல, போக்குவரத்து நெரிசல் என்பது கால விரயத்தின் மூலம் உழைப்பு நேரத்தை வீணடிப்பதால், உற்பத்திக் குறைவுக்கும் காரணமாகிறது.
   குறைந்த கட்டணத்துடனும் அதிக வசதியுடனும் அதிகரித்த பொதுப் போக்குவரத்து மட்டும்தான் பொதுமக்கள் சொந்தப் போக்குவரத்து வாகனங்களை பயன்படுத்துவதைக் குறைப்பதற்கான ஒரே வழி.
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai