Enable Javscript for better performance
குறைகாணும் நேரமல்ல!- Dinamani

சுடச்சுட

  

  பதான்கோட் விமானப் படை தளத்தைத் தாக்கிய பயங்கரவாதிகள் அனைவரையும் சுட்டுவீழ்த்திய பிறகு, இப்போது அரசியல் கட்சிகள் மத்திய அரசை "சுட்டுத்தள்ளத்' தொடங்கியுள்ளன.
   இந்த நடவடிக்கையில் பல பிழைகள் இருப்பதாகவும், இதற்கு பிரதமர் மோடி பொறுப்பேற்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்துகின்றன. மத்திய அரசுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டும், சுமார் 20 மணி நேரம் வீணடிக்கப்பட்டுவிட்டது என்பது முதன்மையான புகார். பக்கத்திலேயே ராணுவம் இருந்தும்கூட, ஏன் தில்லியிலிருந்து தேசிய பாதுகாப்புப் படை (என்.எஸ்.ஜி.) வரவழைக்கப்பட்டது? இதனால்தான் நடவடிக்கை எடுப்பதற்குக் காலதாமதம் ஆனது என்பது இரண்டாவது புகார்.
   உண்மையில், ராணுவம் என்பது எதிர்படும் எதிரியைச் சுட்டுவீழ்த்தி முன்னேறும் பணியைத்தான் செய்யும். ஆனால், பதான்கோட்டில் உள்ளே நுழைந்தவர்கள் பயங்கரவாதிகள். விமானப் படை தளத்துக்குள் இருப்போரைப் பிணைக் கைதிகளாக வைத்து, நாசவேலையை நிதானமாக, பதற்றமே இல்லாமல் செய்யக்கூடியவர்கள். பிணைக் கைதிகளை மீட்பதற்கெனத் தனிப்பயிற்சி பெற்ற தேசியப் பாதுகாப்புப் படை வீரர்கள், பதான்கோட் விமானப் படை தளத்துக்கு அனுப்பப்பட்டதன் காரணம் இதுதான்.
   உள்ளே நுழைந்த பயங்கரவாதிகள் எத்தகையவர், அவர்களிடம் என்ன ஆயுதங்கள் இருக்கக்கூடும், எத்தனை பேர் வந்திருக்கிறார்கள், எதைத் தகர்க்க திட்டமிட்டிருக்கிறார்கள் என்பது எதுவுமே தெரியாத நிலையில், குறிப்பாக விமானப் படை தளம் செயல்பட்டுக் கொண்டிருக்கும் தளமாக இருப்பதால் நிறைய பேர் பிணைக் கைதிகளாக வைக்கப்பட நேரிடலாம் என்பதை உணர்ந்துதான் தேசிய பாதுகாப்புப் படை தில்லியிலிருந்து அனுப்பப்பட்டது. தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் தலைமையில், ராணுவம், விமானப் படை தளபதிகளுடன் நடந்த ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு எடுக்கப்பட்ட முடிவு இது.
   அவர்கள் மொத்தம் 7 பேர். சுமார் 11 அடி உயரமுள்ள சுவர் மீது, கயிறு போட்டு ஏறியிருக்கிறார்கள். அவர்களிடம் 50 கிலோ எடையுள்ள ஆயுதங்கள், 30 கிலோ எடையுள்ள வெடிகுண்டுகள் இருந்தன என்ற தகவல்கள் யாவும் பயங்கரவாதிகளுடனான சண்டைகள் ஓய்ந்த பிறகு அறியவருவன. ஆனால், அவர்கள் நுழைந்துவிட்டபோது, பயங்கரவாதிகள் உள்ளே இருக்கிறார்கள் என்ற ஒரு தகவலைத் தவிர வேறு எதுவுமே யாருக்கும் தெரியாது. இப்போது எல்லா விவரங்களும் தெரிந்த நிலையில், இந்தச் சண்டையை இப்படி நடத்தியிருக்கலாம் என்று அனைவராலும் ஆலோசனை சொல்ல முடிகிறது.
   பிழைகள், பாதுகாப்பில் குறைபாடுகள், எல்லைப் பணியில் சில ஓட்டைகள் இருந்தது வெளிப்படை. அதனால்தான் பயங்கரவாதிகள் இந்த விமானப் படை தளத்துக்குள் நுழைய முடிந்தது. ராணுவ விமானப் படை தளத்தின் சுற்றுச்சுவர்களின் ஒரு பக்கத்தில் மின்விளக்கு அன்றைய தினம் எரியவில்லை. அந்த இருள் பயங்கரவாதிகளுக்கு சாதகமாக அமைந்தது. இந்த இருள், மின்விளக்கு பழுதானதாலா அல்லது திட்டமிட்டுப் பழுதாக்கப்பட்டதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும்.
   குருதாஸ்பூர் காவல் கண்காணிப்பாளர் உடனடியாக தெரிவித்ததால்தான், சீக்கிரத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது உண்மையாக இருந்தாலும், இந்த நடவடிக்கைகளில் சுணக்கம் காட்டியது பஞ்சாப் காவல் துறைதான். புத்தாண்டு நள்ளிரவில் கிடைத்தத் தகவலை சரியாகப் புரிந்து கொள்ளாமல், கொண்டாட்ட போதையில் பயங்கரவாதிகள் வருவதாக முடிவுகட்டித் தாமதப்படுத்தியது பஞ்சாப் காவல் துறைதான்.
   சல்வீந்தர் சிங்கின் வாகனத்தை மட்டுமன்றி அவரது செல்லிடப்பேசியையும் பயங்கரவாதிகள் எடுத்துச் சென்றனர். அந்த செல்லிடப்பேசியிலிருந்து நான்கு முறை பகவல்பூரில் உள்ள தங்கள் இயக்கத்தாருடன் பேசியிருக்கிறார்கள். ஜனவரி 2-ஆம் தேதி காலை 1.58 மணிக்கு கடைசியாக ஒரு பயங்கரவாதி தனது தாயிடம் பேசியிருக்கிறார். பலவந்தமாக கொண்டுசெல்லப்பட்ட செல்லிடப்பேசியை ஒட்டுக்கேட்டிருந்தாலும் சில உண்மை நிலைமை தெரியவந்திருக்கும். பயங்கரவாதிகளைக் கொன்று மீட்கப்பட்ட பிறகுதான், யாரிடம் பேசினார்கள் என்பதெல்லாம் தெரிகிறது.
   பதான்கோட் விமானப் படை தளம் எல்லையிலிருந்து 40.கி.மீ. தூரத்தில் இருக்கிறது. இங்குதான் பல ராணுவ விமானங்களும், ராடார்களும், ஏவுகணைகளும் நிறுவப்பட்டிருக்கின்றன. எல்லையோர முள்வேலிகளுக்கு இடையே ஓடுகின்ற ஓடைகள் வழியாக பயங்கரவாதிகள் நுழைந்திருப்பதாகத் தெரிகிறது. கடந்த மாதம் குருதாஸ்பூரில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி இருக்கும் நிலையில், பதான்கோட் விமானப் படை தளத்தில் பலத்த எச்சரிக்கையும், பாதுகாப்பும் ஏன் உறுதிப்படுத்தவில்லை என்பது நியாயமான கேள்விதான்.
   இத்தகைய குறைபாடுகளை எவ்வாறு களைய வேண்டும் என்று தீர்மானிப்பதும், அதற்கான முனைப்பும்தான் இன்றையத் தேவை. அதற்கான ஆலோசனைகளை எதிர்க்கட்சிகள் வழங்கட்டும். இதுபோன்ற தேசப்பாதுகாப்பான பிரச்னைகளை அரசியலாக்கிக் கீழ்த்தரமான ஆதாயம் தேடுவது நீண்ட நாள் இந்தியாவை ஆட்சி செய்த காங்கிரஸ் போன்ற கட்சிக்கு அழகல்ல.
   பதான்கோட்டில் பயங்கரவாதிகளுடன் நடைபெற்றது ஏறக்குறைய ஒரு போர். இதில் வெற்றி என்ற ஒரு சொல்லுக்கு மட்டுமே மதிப்பு இருக்கும். ஏழு வீரர்களின் உயிர்த் தியாகத்தில் இந்தியாவின் கெளரவம் காப்பாற்றப்பட்டுள்ளது. போர்முறையின் பிழைகளையும் குறைகளையும் விலாவாரியாக விமர்சிப்பதன் மூலம் இந்தியாவுக்கு எந்தப் பெருமையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, பயங்கரவாதிகள்தான் அதனால் பலப்படுவார்கள் என்பதை நாம் உணர வேண்டும்!
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai