Enable Javscript for better performance
அழிவுக்கு அச்சாரம்!- Dinamani

சுடச்சுட

  

  வட கொரியா, முதல் முறையாக ஹைட்ரஜன் வெடிகுண்டுப் பரிசோதனையை பூமிக்கு அடியில் நடத்தியதாக உலகுக்கு அறிவித்திருக்கிறது. இந்த அறிவிப்பு உலக நாடுகள் அனைத்துக்கும் பேரதிர்ச்சி அளிப்பதாக அமைந்தது. ஐக்கிய நாடுகள் சபை கண்டனம் தெரிவித்திருப்பதுடன் பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்துக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளும் கண்டிக்கத் தவறவில்லை.
   "நமது முதல் ஹைட்ரஜன் குண்டின் காதைப்பிளக்கும் உற்சாக ஓசையுடன் புத்தாண்டு பிறந்திருக்கிறது' என்று வட கொரியா சர்வாதிகாரி கிம் ஜோங்-உன் தெரிவித்திருக்கிறார். பிங்கியோ-ரி அணுசோதனைத் தளத்திற்கருகில் 5.1 ரிக்டர் சக்திவாய்ந்த நில அதிர்வு ஏற்பட்டதற்குக் காரணம், வட கொரியா பூமிக்கடியில் நடத்திய ஹைட்ரஜன் குண்டு சோதனைதான் என்று கூறப்படுகிறது. வட கொரியா வசம் இருக்கும் அணு குண்டுகளின் எண்ணிக்கை ஒரு டஜனிலும் அதிகம்.
   ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் நெறிமுறைகளை மீறி வெடிகுண்டுப் பரிசோதனை நடத்தி, தைரியமாக உலகுக்கும் அறிவிக்க முடிந்துள்ள வட கொரியாவின் செயல், தனக்குப் பகை நாடாக உள்ள தென் கொரியாவுக்கும், அண்டை நாடான ஜப்பானுக்கும் விடுத்துள்ள எச்சரிக்கை. வட கொரியா தனது பலத்தை உணர்த்துகின்ற உத்தி என்பதாகத்தான் இதை நாம் பார்க்க வேண்டும்.
   வட கொரியா எப்போதுமே அடங்க மறுக்கிற நாடு என்பதை பல முறை நிரூபித்துள்ளது. நெறிமுறைகளுக்கு எதிராக இதுவரை மூன்று முறை அணுகுண்டு வெடித்துச் சோதனை நடத்தியுள்ளது. தற்போது முதல் முறையாக ஹைட்ரஜன் குண்டு வெடித்திருக்கிறது.
   ஹைட்ரஜன் குண்டு என்பது அணுகுண்டைக் காட்டிலும் பல மடங்கு ஆற்றல் மிக்க, பலமடங்கு சேதம் விளைவிக்கக் கூடியது. அதனைத் தயாரிக்கும் தொழில்நுட்பமும் அத்தனை சுலபமல்ல. அணுகுண்டை வெடிக்கச் செய்வதென்பது, அணுவை மேலும் பிளவுபடுத்தும் தொழில்நுட்பம். இது பரவலாகப் பல நாடுகளுக்கும் தெரிந்திருக்கும் ஒன்று. ஹைட்ரஜன் குண்டை வெடிக்கச் செய்வதென்பது, அணுக்களின் சேர்க்கை. இது மிகவும் கடினமான தொழில்நுட்பம்.
   இத்தகைய கடினமான, நுட்பமான தொழில்நுட்பம் வட கொரியாவிடம் இருக்க வாய்ப்பில்லை என்பதே அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகளின் சந்தேகம். மேலும், வட கொரியாவைத் தங்கள் சோதனைக் களமாக வேறு நாடுகள் ஏதேனும் (சீனா?) பயன்படுத்திக்கொள்கிறதோ என்ற சந்தேகமும் உள்ளது. இதற்கான வாய்ப்புகள் அதிகம்.
   வட கொரியா, எந்தவொரு பொருளாதாரத் தடைக்கும் அச்சப்படாத நாடு. அதன் தலைவர் கிம் ஜோங்-உன் தனது தலைமையைத் தக்க வைத்துக்கொள்ள எதையும் செய்யக்கூடியவர். ஆகவே, அணுகுண்டு கட்டுப்பாடு ஒப்பந்தத்தில் இடம்பெற்றுள்ள ஒரு நாடு, குறிப்பாக சீனா, தன் பெயருக்குக் களங்கம் ஏற்படாமலும் அதேநேரத்தில் சோதித்துப் பார்க்கவும் வட கொரியாவைப் பயன்படுத்தியிருக்குமோ என்ற சந்தேகம் எழுவது நியாயமே. அதற்கான வாய்ப்பு உண்டு.
   உலகப் போரின்போது, ஹிரோஷிமா, நாகசாகி ஆகிய ஜப்பானிய நகரங்களின் மீது அணுகுண்டுகள் போடப்பட்டன. இதன் அழிவு எத்தகையது என்பதை அனைவரும் அறிவர். இதைவிடப் பலமடங்கு பேரழிவை ஏற்படுத்தக்கூடிய, ஒரு நகரத்தையே தரைமட்டமாக்கக்கூடியது ஹைட்ரஜன் குண்டு. முதலில் இதை 1956-ஆம் ஆண்டு மே 21-ஆம் தேதி, மார்ஷல் தீவுகள் அருகிலுள்ள நாமு தீவில் சோதனை நடத்திய நாடு அமெரிக்கா. அதன் பிறகுதான், அண்ணன் காட்டிய வழியில் ரஷியா, சீனா, இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகிய நாடுகள் ஹைட்ரஜன் குண்டு தயாரிக்கத் தொடங்கின.
   இந்தச் சோதனையை வட கொரியா, தனது பகை நாடான தென் கொரியாவை அச்சப்படுத்தும் விதமாக செய்திருந்தால் பரவாயில்லை. ஆனால், அமெரிக்கா சந்தேகப்படுவதைப்போல, இது வேறொரு நாட்டின் (சீனாவின்) தொழில்நுட்பத்தை சோதிக்கவும், வட கொரியா வெறும் பினாமியாக செயல்படுவதாகவும் இருக்குமேயானால் மிகவும் ஆபத்தானது. உலகம் முழுவதும் பயங்கரவாதம் வேரோடியிருக்கும் இன்றைய சூழலில், ஹைட்ரஜன் குண்டு யாருக்கு வேண்டுமானாலும் கிடைக்கும் என்கிற நிலைமைக்கு அது காலப்போக்கில் வழிகோலக்கூடும்.
   அணுவைப் பிளந்து மின் உற்பத்தி செய்வதற்கே எதிர்ப்பு தெரிவிக்கப்படுகிறது என்றால் அதற்கு காரணம், அணுஉலைகள் மூலமும், அணுக் கழிவுகள் மூலமும் ஏற்படக்கூடிய கதிர்வீச்சு ஆபத்துகளுக்காகத்தான். அதைவிடப் பல மடங்கு அழிவு தரும் அணுகுண்டுகளை இந்தியா, பாகிஸ்தான் உள்பட பல நாடுகள் கைவசம் வைத்துள்ளன. இது போதாதென்று ஹைட்ரஜன் குண்டும் சேர்ந்துகொண்டால், உலகம் தனது தூக்கத்தைத் தொலைத்துவிட வேண்டியதுதான்.
   அதுமட்டுமன்றி, அமெரிக்கா சந்தேகப்படுவதைப்போல, வட கொரியா ஒரு பினாமி என்றால், இதே உத்தியைத் தென் கொரியா பயன்படுத்திக்கொள்ள அல்லது தென் கொரியாவை மற்ற நாடுகள் பினாமியாக்க வாய்ப்புகள் ஏற்படும் என்பது மற்றொரு கவலை.
   வட கொரியாவைத் தள்ளி வைப்பதாலும், அதன் மீது பொருளாதாரத் தடை விதிப்பதாலும் பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியாது. எந்தவொரு நாட்டுக்கும் ஆதரவு தர சில நாடுகள் தயாராக இருக்கின்றன. பயங்கரவாதிகளைக்கூட ஆதரிக்கும் நாடுகள் இருக்கும் அரசியல் சூழலில், பொருளாதாரத் தடைகளால் ஒன்றும் செய்துவிட முடியாது.
   ஐன்ஸ்டீன் குறிப்பிட்டதைப்போல, மூன்றாம் உலகப்போர் நடந்தால், அதன்பிறகு எல்லாமும் அழிந்து மீண்டும் மனித குலம் முதலிலிருந்து தொடங்க வேண்டியதாகும். இதை உலகம் உணர்ந்ததாகவே தெரியவில்லை!
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai