Enable Javscript for better performance
இனிமேல்தான் கவனம் தேவை!- Dinamani

சுடச்சுட

  

  எப்போதுமே வரம் கிடைத்த மகிழ்ச்சியைக் காட்டிலும் வரம் கிடைக்கப் பெற்றதால் ஏற்படும் பொறுப்பின் கவலைதான் அதிகமாக இருக்க வேண்டும். அப்போதுதான் வரம் நிரந்தரமாக இருக்கும். ஜல்லிக்கட்டுக்கும் இது பொருந்தும்.
   ஜல்லிக்கட்டுக்கு அனுமதி பெற்றுத் தந்ததற்காக மத்திய அரசுக்கும் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனுக்கும் பாராட்டுகளும் நன்றிகளும் குவியும் வேளையில், நாம் இதை நிதானமாகவும், நடைமுறை சாத்தியத்துடனும் பார்க்க வேண்டிய தேவை இருக்கிறது. அளவுக்கு அதிகமாக மகிழ்ச்சி கொள்ள இந்த அரசாணையில் ஏதுமில்லை.
   காட்சிப்படுத்தும் விலங்குகள் பட்டியலிலிருந்து காளை நீக்கப்படவில்லை என்பதை நாம் கவனத்தில் கொண்டாக வேண்டும். மரபு மற்றும் தொன்றுதொட்டு வரும் வழக்கத்தைக் கருத்தில் கொண்டு ஜல்லிக்கட்டு, ரேக்ளா பந்தயத்தை நான்கு நிபந்தனைகளுடன் நடத்த அனுமதி அளித்துள்ளது மத்திய அரசு. இந்த அனுமதியை எந்த நேரத்திலும் விலக்கிக் கொள்ள முடியும் என்பதை நாம் கவனத்தில் கொண்டாக வேண்டும்.
   காட்சிப்படுத்தும் விலங்குகள் பட்டியலில் இடம்பெற்றுள்ள புலி, கரடி, சிறுத்தை, குரங்கு, காளை போன்றவற்றிலிருந்து காளையை நீக்காவிட்டால், காளை என்றால் மாடு, எருமை, கன்று, பசு என எல்லாமும் அடங்கும் என்கிற வனத் துறையின் விளக்கமும் அவ்வாறே தொடரும். ஆகவே, காளையைப் பட்டியலில் இருந்து நீக்காமல் பிரச்னை தீராது. ஆகவே, தொடர்ந்து அரசியல் கட்சிகள் இதற்காகப் போராட வேண்டும். மத்தியஅரசுக்கு நன்றி தெரிவிப்பதோடு நின்றுவிடக்கூடாது.
   நீதிமன்றத்தால் தடை விதிக்கப்பட்ட விவகாரத்தில், மத்திய அரசு தடையை நீக்கும்போது, நிபந்தனைகளுடன் அனுமதிப்பதை நீதிமன்றம் ஏற்காது. நீதிமன்றத்தின் தடையுத்தரவு ஒன்றுமில்லாமல் போக வேண்டுமானால், அதற்கு அடிப்படையான விவகாரம், காளையைப் பட்டியலிலிருந்து நீக்குவது மட்டுமே. இன்னும் நான்கு தினங்களில் இந்த அரசாணை குறித்து நீதிமன்றத்தால் கேள்வி எழுப்பப்படாது என்பது உறுதியில்லை. ஆகவே, ஜல்லிக்கட்டை அனுமதித்ததற்காக அரை மகிழ்ச்சியுடன்தான் மத்திய அரசுக்குப் பாராட்டுத் தெரிவிக்க வேண்டியுள்ளது.
   ஜல்லிக்கட்டை மத்திய அரசு நான்கு நிபந்தனைகளுடன் அனுமதித்துள்ளது. மத்திய அரசின் இந்த நான்கு நிபந்தனைகளும் ஏற்கெனவே உயர்நீதிமன்றத்தால் முன்வைக்கப்பட்டவைதான். இந்த முறை ஜல்லிக்கட்டு நடத்தும்போது, அனைத்து இடங்களிலும் கவனமாகவும், மாவட்ட ஆட்சியர் அனுமதி பெற்றும், காளைகளுக்கு துன்பம் தராமலும் நடத்தப்பட வேண்டும் என்பது மட்டுமே கூடுதலாகச் சேர்க்கப்பட்டிருக்கும் வாசகம்.
   இப்போதே, நீதிமன்றத்தை அணுகுவோம் என்று விலங்குகள் நல ஆர்வலர்கள் (பீட்டா) திட்டமிட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்த அனுமதியை எதிர்ப்போர், உடனடியாகத் தடை உத்தரவு பெற வாய்ப்பில்லை. ஏற்கெனவே, ஜல்லிக்கட்டு அனுமதிக்கப்பட வேண்டும் என்றும், மாவட்ட ஆட்சியர் உத்தரவு மற்றும் கண்காணிப்பின்படி விதிகளுக்கு உட்பட்டு இந்த விளையாட்டு நடத்தப்பட்டதை நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுவரப்படவில்லை என்றும் தெரிவித்து, ஜல்லிக்கட்டு ஏற்பாட்டாளர்கள் உச்சநீதிமன்றத்தில் தொடுத்துள்ள வழக்கு ஏற்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்த வழக்கில் தங்கள் கருத்தையும் கேட்க வேண்டும் என்று ஜல்லிக்கட்டு மீட்புக் கழகம் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யவிருக்கும் நிலையில் உடனடியாக நீதிமன்ற இடைக்காலத் தடை கிடைக்காது.
   தமிழக அரசு "கேவியட்' மனு தாக்கல் செய்திருப்பது புத்திசாலித்தனமான முன்னெச்சரிக்கை நடவடிக்கை. மத்திய அரசு ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளித்து வெளியிட்டிருக்கும் அரசாணைக்கு எதிராக விலங்குகள் நல வாரியம், பீட்டா போன்ற அமைப்புகள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தால், தமிழக அரசின் விளக்கத்தைக் கேட்காமல் எந்தவித உத்தரவையும் பிறப்பிக்கக் கூடாது என்பதுதான் "கேவியட்' மனுவின் கோரிக்கை.
   இருப்பினும், இந்த அரசாணையை மழுங்கடிக்கவும், ஜல்லிக்கட்டின் சிறுசிறு பிழைகளைப் பெரிதுபடுத்த வேண்டும் என்பதற்காகவும், நீதிமன்றத்தில் சான்றாதாரமாக முன்வைக்கவும் தமிழகத்தின் ஜல்லிக்கட்டு முழுவதையும் விடியோ படம் பிடிக்கவும், காளைகள் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டன என்பதை உறுதிப்படுத்துவதிலும் கவனம் செலுத்துவார்கள். ஆகவே, முன் எப்போதும் இல்லாத அளவுக்கு மிகவும் எச்சரிக்கையோடும், விதிகளை மீறாமலும் ஜல்லிக்கட்டு நடத்துவது அவசியம். மத்திய அரசு அனுமதித்துள்ள நிபந்தனைகள் அனைத்தும் இயலக்கூடிய ஒன்றுதான்.
   ஒவ்வொரு மாநிலத்திலும் மரபு கலாசாரம் வேறுபடுவதாக இருப்பதால், எந்தெந்த விலங்குகளை எவ்வாறு காட்சிப்படுத்துவது என்பது குறித்து முடிவு செய்யும் பொறுப்பு அந்தந்த மாநில அரசிடம் இருப்பதே இந்த பிரச்னைக்கு மாற்றுத் தீர்வு. இதற்காகிலும் அனைத்து அரசியல் கட்சிகளும் இணைந்து போராட வேண்டும். அனைத்துக் கட்சிகளும் ஒரே குரலில் பேசியதால் மட்டுமே இன்று இத்தகைய அரசாணையை மத்திய அரசு வெளியிட்டிருக்கிறது.
   தமிழகத்தின் எல்லாக் கட்சிகளும் ஒன்று சேர்ந்து குரல் கொடுத்தால் மத்திய அரசு அதற்கு இணக்கம் தருவதைத்தவிர வேறு வழியில்லை. காவிரி பிரச்னை, முல்லைப்பெரியாறு, ராஜீவ் கொலைக் குற்றவாளிகள் விடுதலை என எல்லாவற்றிலும் ஒன்றுபட்ட குரல் எழுமானால், இதுபோன்ற பிரச்னைகளில் தமிழகம் நியாயம் பெற முடியும் என்பது தெளிவாகியிருக்கிறது. பொதுப் பிரச்னையில் எவ்வாறு செயல்பட்டால் எத்தகைய நன்மைகளைக் காணலாம் என்பதை ஜல்லிக்கட்டு சொல்லித் தந்திருக்கிறது.
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai