Enable Javscript for better performance
சாலையும் பாதுகாப்பும்!- Dinamani

சுடச்சுட

    

    சாலைப் பாதுகாப்பு வார விழா ஜனவரி 10-ஆம் தேதி தொடங்கியுள்ளது. ஒரு வாரம் நடைபெறும் இந்த சாலைப் பாதுகாப்பு வார விழாவில், 25 ஆண்டுகள் விபத்தின்றி வாகனம் ஓட்டிய சிறந்த ஓட்டுநர்கள் பாராட்டப்படுவார்கள். பள்ளி மாணவர்கள் பேரணி ஒன்று நிச்சயமாக எல்லா நகரங்களிலும் நடைபெறும். போக்குவரத்துத் துறை சார்பில் கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டு, அதில் விபத்துகள் குறித்த படங்கள், சாலை விதிமுறைகளின் அவசியம் ஆகியன காட்சிக்கு வைக்கப்படும். ஆண்டுதோறும் ஏதோ சடங்குபோல சாலைப் பாதுகாப்பு வாரம் அனுசரிக்கப்படுவது வழக்கமாக இருக்கிறது.
     சாலைப் பாதுகாப்பு வாரத்தின்போது, செய்ய வேண்டிய பணிகள் ஏராளம். சாலையில் விபத்து ஏற்பட மூன்று காரணிகள் உள்ளன. ஓட்டுபவர், விபத்துக்கு ஆளாகிறவர், சாலையின் தன்மை. இந்த மூன்றில், வாகனம் ஓட்டுபவர் என்ற ஒன்றை மட்டுமே இந்த சாலைப் பாதுகாப்பு வார விழாவில் முதன்மைப்படுத்துகிறோம். மற்ற இரு காரணிகளும் புறந்தள்ளப்படுகின்றன.
     விபத்துக்கு ஆளாகிறவர் அல்லது விபத்தில் சேதத்துக்குள்ளான வாகனம் என்பதைக் கணக்கில் கொண்டால், இறந்தவர்கள் வெறும் புள்ளிவிவரமாக மாறிவிடுகிறார்கள். இவர்களது குடும்பத்துக்கு அரசு அல்லது காப்பீட்டு நிறுவனம் இழப்பீடு வழங்குகிறது. ஆனால், காயமடைந்து ஊனமடைபவர்கள் குறித்து யாரும் கவலைப்படுவதில்லை. இவர்களுக்கு அரசு வழங்கும் சொற்ப நிதியுதவியும், காப்பீட்டு நிறுவனம் தரும் இழப்பீடும் மருத்துவச் செலவுக்கே போய்விடுகின்றன. பிறகு இவர்கள் ஊனத்துடன் வாழ்க்கையை நடத்திச்செல்ல வேண்டியிருக்கிறது. இதில் அவர்கள் இழப்பது ஏராளம். விபத்தில் காயமடைந்தவரின் வாழ்க்கை இழப்பு குறித்த அவலம் அவரது தனிப்பட்ட சோகமாக அமைந்துபோகிறது.
     விபத்தில் இறந்தவர்களுக்கு தரப்படும் இழப்பீடு ஓரளவுக்கு அவர்களது குடும்பத்தை வாழவைக்கிறது. ஆனால், ஊனமுற்று நடைப்பிணமாக மாறியவர், குடும்பத்துக்கு நிரந்தர சுமையாக மாறிவிடுகிறார். இவர்களைப் பற்றிய உண்மைகளும், நிலைமைகளும் இளையோருக்கு எடுத்துச் சொல்லப்படாமல் இருப்பதால்தான், சாலையில் பறக்கும் இளைஞர்களின் பொறுப்பற்றதனம் தொடர்கிறது. இதுகுறித்து நாம் அதிக கவனம் செலுத்துவதே இல்லை.
     மூன்றாவதாக, சாலையின் தன்மை. போக்குவரத்து நெரிசல், அறிவிப்புப் பலகை இல்லாதது, சாலையின் வளைவு அங்கு வாகனம் செல்லும் வேகத்துக்குப் பொருத்தமில்லாது இருத்தல், அத்தகைய வளைவுகளில் வாகனம் சாலையைவிட்டு வெளியேறாதபடி தடுப்புச் சுவர் அல்லது தடுப்புக் கம்பிகள் பொருத்தாதது, குறுகிய பாலம், போதிய வெளிச்சம் இல்லாதது, சாலை நடுச்சுவர் இல்லாதது, நான்கு சாலை சந்திப்புகளை மாற்றியமைக்காதது, நடந்து செல்வோருக்கான தனிப்பாதை இல்லாதது போன்ற பல காரணங்கள் சாலை விபத்துகளின் எண்ணிக்கையை ஒவ்வொரு வகையிலும் அதிகரிக்கின்றன. ஒவ்வொரு விபத்துக்கும் மேற்கண்ட ஒன்று ஒரு காரணியாக அமைகிறது.
     சாலை நடுச்சுவர் கட்டுதல் மூலம் 20% உயிரிழப்புகளும், 25% விபத்துகளும் தவிர்க்கப்படுகின்றன. சாலையை அகலப்படுத்துவதன் மூலம் 40% விபத்துகளும் உயிரிழப்புகளும் குறைகின்றன. நாற்கரச் சாலை சந்திப்புகளில் வட்டச்சாலை அமைத்தால், வாகனங்கள் நேராகக் கடந்து செல்வதைத் தவிர்ப்பதன் மூலம் 50% விபத்துகளும், அது சார்ந்த உயிரிழப்புகளும் குறைகின்றன. மூன்று சாலை சந்திப்புகளில் விபத்துகள் குறைவாக இருக்கின்றன. காரணம், இதில் எதிர்வரும் வாகனங்கள் மூன்று சாலையின் வாகன ஓட்டிகளின் பார்வைக்குப் படுகிறது.
     மழைநாளில் பிரேக் போட்டாலும் சக்கரங்கள் வழுக்கிச் செல்வதால் விபத்து நடக்கின்றன என்பது பொதுவான கருத்து. ஆனால் சாலையில், குறிப்பாக நாற்கரச் சாலையில் தேங்கி நிற்கும் அல்லது வழிந்தோடிக்கொண்டிருக்கும் மழைநீர், விரைந்து கடக்கும் ஒரு வாகனத்தால் எமனாக மாறுகிறது. ஒரு வாகனத்தை விரைந்து கடக்கும் மகிழுந்து அல்லது வேறு சுமை வாகனம் வாரி இறைக்கும் மழைச்சேறு, கண்ணாடியை மறைத்து, துடைப்பான் துடைத்தாலும் போகாமல் அழுக்காகிப் பார்வையை மறைக்கும்போது விபத்து தவிர்க்க முடியாததாகிவிடுகிறது. அதிவிரைவு நாற்கரச் சாலைகளிலும் மழைநீர் தேங்கும் அவலம் தொடர்கிறது.
     தில்லியில் சாலைப் பாதுகாப்பு வார விழாவில் பங்கேற்றுப் பேசிய மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் கட்கரி, "அடுத்த ஐந்து ஆண்டுகளில் விபத்துகளின் எண்ணிக்கையை 50% குறைக்க உறுதி ஏற்போம்' என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். எந்தெந்த சாலையில் எத்தகைய விபத்துகள் எந்தக் காரணியால் நடைபெறுகிறது என்பதைப் புள்ளிவிவரங்களுடன் ஒப்பிட்டு, ஆபத்தான விபத்துப் பகுதிகளை (பிளாக் ஸ்பாட்) கண்டறிந்து, குறைகளை நீக்க ரூ.11,000 கோடி ஒதுக்கீடு செய்யப்போவதாக அறிவித்துள்ளார்.
     இந்த விபத்துப் பகுதிகளை (பிளாக் ஸ்பாட்) கண்டறிந்து, குறை களையும் நடவடிக்கை மத்திய அரசின் நெடுஞ்சாலைகளுடன் நின்றுவிடக் கூடாது. மாநில சாலைகளையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
     இன்றைய வாகன ஓட்டி, புதிது புதிதாக அறிமுகப்படுத்தப்படும் அதிநவீன வாகனங்களில், எந்த காலத்திலோ அமைக்கப்பட்ட சாலைகளில் பயணித்துக் கொண்டிக்கிறார். இன்றைய தேவைக்கு ஏற்ப புதிய சாலைகள் அமைக்கப்படாதவரை, சாலை விபத்துகளை குறைத்துவிட முடியாது. நிலம் கையப்படுத்தும் மசோதா நிறைவேற்றப்படாமல், புதிய சாலைகளை உருவாக்குவது சாத்தியமில்லை. அதனால், வழக்கம்போல ஆண்டுதோறும் சாலைப் பாதுகாப்பு வாரத்தை கொண்டாடி திருப்தியடைவோம்!
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai